வெள்ளி, அக்டோபர் 25, 2013

காசி யாத்திரை (இன்னொரு தீபாவளிக் கவிதை)


பனிகொழுத்த இமயமதில்
நடனமிடும் ஈசனவன்

முடிதனிலே அடைந்திருந்தாள் நங்கை  - அவள்

முழுப்பெயரோ புனிதமுள்ள ‘கங்கை’ – அதை

விடமுடியாத் தாகமுடன்

ஒருமனதாய்த் தவமிருந்து

புவிதனிலே பகிரதனாம் பிள்ளை – கொண்டு

புயலெனவே தவழவிட்ட எல்லை...!  (1)

 

‘காசி’யெனும் புனிதநகர்

காசினியில் உயர்ந்ததுவாம்

சாத்திரங்கள் சொல்லுகின்ற பாடம் – அதில்

காலெடுத்து வைத்தவர்க்கும் யோகம் – அங்கே

மாண்டவர்கள் மீண்டுவந்து

மண்ணினிலே பிறப்பதில்லை

மறைந்திடுமாம் பிறவியென்னும் வேடம்! – என

மந்திரங்கள் சொல்லுமடா நாளும்!  (2)

 

நீதியுடன் இருந்தாலும்

நியாயமுடன் நடந்தாலும்

மானிடரின் வாழ்வினிலே ‘பாவம்’ – எந்த

வகையினிலும் சேர்ந்துவிடும் நாளும் – அது

வாய்மொழியில் தான்வருமோ

வசைமொழியில் தான்வருமோ

ஊரிழுக்கும் தேரேனவே ஓடும் – ‘பாவம்’

நீயிருக்கும் திசையினிலே சேரும்!  (3)

 

 

பாவமது எந்தவகை

பழையதுவா புதியதுவா

யாவுமிந்தக் காசியதில் போகும் – கங்கை

யாற்றினிலே மூழ்கியதும் சாகும் – இனி

மீதமுள்ள வாழ்க்கையதில்

நூறுபிழை செய்தாலும்

பாவமது சேராதாம் உன்னை – கங்கை

பாகிரதி செய்வாளாம் நன்மை!  (4)

 

பாவமதை நாமுமினிப்

போக்கிவிட வேண்டுமெனச்

சுற்றமுடன் சென்றிருந்தேன் நானும்- காசி

சுற்றிவந்து பார்வையிட்டேன் நாளும் – அதைச்

சொல்லவந்தால் வார்த்தையிலே

உள்ளம்வெந்து போகுதடா

உண்மைநிலை எண்ணிவிட்டால் கூசும் – நெஞ்சம்

உருகுதடா, உதடுமட்டும் பேசும்! (5)

 

ஈசன்முடி மேலிருந்து

இறங்கிவந்த கங்கைநதி

ஓடிவரும் பாதையிலே தானே – காசி

ஊர்க்கழிவும் சேருதடா நாளும் – மெல்ல

நீரினிலே நாமிறங்கி

மூழ்கியெழும் போதினிலே

நாறுதடா காலடியில் சேறும் – அதற்குள்

நாலுபக்கம் கூட்டம்வந்து சேரும்! (6)

 

பாவையர்கள் ஆடைகளை

மாற்றுகின்ற வேளைதனைப்

பார்த்திருக்கும் கூட்டமொன்றும் உண்டு – கங்கைப்

படித்துறையில் சூழ்ந்திருக்கும் நின்று – வந்த

யாத்திரிகர் உடைமைகளைக்

காத்திருந்தே கொள்ளையிடும்

காசியிலே பாவமில்லை என்றால் – இந்தக்

காசினியே பாவமில்லை யன்றோ? (7)

 

செத்தவர்கள் மேனிதனைப்

பட்டுத்துகில் போர்த்திவந்து

வைத்திருப்பார் வரிசையிலே பார்த்தோம்  - அனல்

வைப்பதற்குக் காத்திருப்பார் பார்த்தோம் – கொண்டு

வைத்துவிட்டுப் போனவர்கள்

கண்மறைந்து போனவுடன்

பாதியிலே தூக்கிடுவார் பிணத்தை – கங்கைப்

பாய்ச்சலிலே வீசிடுவார் நிணத்தை! (8)

 

காசியிலே போனவுயிர்

சொர்க்கமதைச் சேருமென்று

கனவுகண்ட மேனியிலே தானே – கங்கை

யாற்றினிலே நெருப்பினிலே தானே – புதுப்

பாவமெல்லாம் தான்படிந்து

பாசியுடன் போட்டியிட்டு

மீனினங்கள் உண்ணும்உண வாகும் – மிச்சம்

மீந்தவுடல் மிதந்தபடி சாகும்! (9)

 

முன்னோர்கள் வானுலகில்

தள்ளாமல் வாழ்ந்திடவே

சடங்குகளைச் செய்திடவும் கொள்ளை – கொள்ளை

காசுபணம் வேண்டும், பகல் கொள்ளை! – இதைக்

காண்கையிலே மானுடத்தைக்

கண்டாலே வெறுப்புவரும்!

என்னசுற்றம்  என்ன இது பிள்ளை – அட,

ஏனிதற்கோர் விடிவுஇங்கே இல்லை? (10)

 

என்றுமனம் சொல்லிடினும்

எண்ணமிட்டால் கங்கைநதி

என்னபிழை செய்ததிங்கே சொல்வீர்! – மனிதன்

இட்டபிழை அத்தனையும் என்பேன்! – கங்கை

அன்றுமுதல் இன்றுவரை

தன்கடமை செய்தபடி

ஆடிவரும் ஓடிவரும், பாடி – காசி

யாத்திரையைத் தேடிவரும் கூடி!  (11)

 (தில்லி வானொலியில் 30-6-1990 அன்று ஒலிபரப்பான கவிதை).
****
© Y.Chellappa
Email: chellappay@yahoo.com. Ph. 044-67453273

 

19 கருத்துகள்:

  1. /// நீதியுடன் இருந்தாலும்
    நியாயமுடன் நடந்தாலும்
    மானிடரின் வாழ்வினிலே ‘பாவம்’ – எந்த
    வகையினிலும் சேர்ந்துவிடும் நாளும்...? ///

    சிறப்பான வரிகள் பல... வாழ்த்துக்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
  2. /// மனிதன் இட்டபிழை அத்தனையும் என்பேன்! ///

    முடித்ததும் அருமை... உண்மை...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அய்யா! எப்போதோ எழுதியது. அண்மையில் காசி போய்வந்தவர்கள் தங்கள் கருத்தைச் சொன்னால் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா இல்லையா என்று தெரியும்.

      நீக்கு
  3. கங்களை தன் வழியின் தன் பயணத்தை இனிதே நடத்தினாலும்.
    மனிதர்களின் செயலால் கங்கைக்கே பாவம் சேருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான், மனிதன் செய்யக்கூடிய பாவங்கள் இவ்வளவு என்றில்லையே!

      நீக்கு
  4. அருமையான ஓசை மிகுந்த , கருத்துள்ள கவிதை!பாராட்டு!

    பதிலளிநீக்கு
  5. //// மனிதன்

    இட்டபிழை அத்தனையும் என்பேன்////

    மிக அருமையான கவிதை!!. பகிர்வுக்கு மிக்க நன்றி!!

    பதிலளிநீக்கு
  6. படிக்கத் துவங்கியதும் பழங்கதைகள் என்று நினைத்ததென்னவோ உண்மை. போகப் போகத்தான் புரிந்தது உண்மையின் வெளிப்பாடு. இதே கங்கை ஹர்த்வாரிலும் ரிஷிகேசத்திலும் சுத்தமாக பளிங்கு போல் ஓடுகிறாள்.. கங்கையின் புனிதம் போற்றுவோர் அவளைத் தூய்மையாக வைக்க வேண்டாமா.?கங்கை பாப சுமைகளால் மட்டும் மாசுறுவதில்லை மக்களின் கழிவுகளாலும் மாசுறுகிறாள. இதனால்தானோ புனித நதிகள் தங்கள் மாசுகளைக் களைய தெற்கே பல நீர்நிலைகளுக்கு வந்து தூய்மை பெறுவதாகவும் கதைகள் உலவுகின்றன. .நாங்கள் 2003-ல் யாத்திரை சென்றிருந்தோம்.பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையிலேயே பழங்கதை தான். மிகமிகப் பழங்கதை தான்..கங்கையின் வயது பல ஆயிரங்கள் அல்லவா? தங்கள் கருத்துரைக்கு நன்றிகள்.

      நீக்கு
    2. அன்புள்ள ஐயா.

      உங்களின் தனித்தன்மையால் உங்கள் கவிதை மிளிர்கிறது.
      வாழ்த்துக்கள்.

      ஆனால் என்னுடைய தாழ்மையான கருத்து இதுதான்.
      நதிகளை எப்போதும் நதிகளாகவே இருக்கவிடலாம். அதற்குப் புனிதத் தன்மை சேர்க்கவேண்டியதில்லை. நதியில் மூழ்குவதால் பாவங்களைக் களைதல் என்பது ஒருபுறமிருந்தாலும் மூழ்கியெழுவோர் அத்தனை பேரும் அழுக்கு மனத்துடனே கறையோடுதான் எழுகிறார்கள். மூழ்கியெழுகிய எத்தனை மனிதர்களிடம் எத்தனை பேதங்கள். என்னைப்
      பொறுத்தளவில் மனத்துர்ய்மை மனவொருமை என்பதோடு வாழ்ந்து மறைந்தால் போதும் குறைந்தபட்சம் போதும். இது முழுக்க என்னுடைய கருத்து. எனவே இவற்றின் மீதெல்லாம் நம்பிக்கை கொள்வதில்லை நான். நன்றிகள்.

      நீக்கு
    3. கங்கையை முதல்முதலில் பார்த்தபோது இருந்த மனநிலையில் எழுதிய கவிதை இது. திரும்பிப் பார்த்தால், பிற கோவில் குளங்களுக்கும் இதே நிலை தான் இருப்பதைக் காண்கிறோம்( திருப்பதி மட்டும் விளக்கு). பாசி படிந்த படித்துறைகள், மிதக்கும் குப்பைகள் என்று கண்ணுக்குப் புண்ணாகவே இருகின்றன. நீங்கள் சொல்வதுபோல் இவற்றின் புனிதத்தநமை குறித்த கருத்துக்களை மறு பரிசீலனை செய்வது அவசியமே. வருகைக்கு நன்றி.

      நீக்கு
    4. மேலுள்ள பதிலில், திருப்பதி மட்டும் 'விலக்கு' என்று இருக்கவேண்டும்!

      நீக்கு
  7. பனிகொழுத்த இமயமதில் என்று தொடங்கும் முதல் பாடலைப் படித்தபோது தினமும் நான் படிக்கும் தேவாரப் பதிவங்கள் நினைவிற்கு வந்தன. பக்தியோடு தாங்கள் பகிர்ந்துகொண்ட அனுபவம் எங்கள் மனதைவிட்டு அகலாது.

    பதிலளிநீக்கு
  8. நல்லதொரு கவியை நயமாய் வடித்து வழங்கியமைக்கு அன்பு நன்றிகள் அய்யா. எல்லா கோவில்களிலும் இதுவே நிலைமை. சமூக நோக்கோடு பகிர்ந்த பதிவுக்கு நன்றீங்க அய்யா.

    பதிலளிநீக்கு