ஞாயிறு, ஜூலை 07, 2013

‘கல்கி’ யும் மலர்களும் வண்ணத்துப்பூச்சிகளும்- (மீண்டும் அமெரிக்கா - 5)


Orchids - New York Botanical Garden – 12 March 2013


அமெரிக்கா வரும்போதெல்லாம் அதிகம் சென்று பார்ப்பது தாவரவியல் பூங்காக்களையும், வண்ணத்துப்பூச்சிப் பூங்காக்களையும் தான். நிறைய படங்கள் சேர்ந்துவிட்டன. இவற்றைக் கோர்த்து எழுத வார்த்தைகளைத் தேடிக்கொண்டிருந்தேன்.
கூகுளில் எதையோ தேடும் போது திடீரென்று கிடைத்தது, கல்கி நாவல்களுக்கான “Apps”.   




சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன், கள்வனின் காதலி, கல்கியின் சிறுகதைகள் ஆகிய நான்கும் கிடைத்தன. இறக்கிக்கொண்டேன்.  இந்த “Apps” எவ்வாறு செயல்படுகிறது என்று ஒவ்வொன்றிலும் சுமார் இருபது பக்கங்கள் படித்தேன். சூப்பர்! நீங்களும் இறக்கிக்கொள்ளலாம். (வை-ஃபி போதும்). (மின்-புத்தகம் வேண்டுவோர் www.projectMadurai.org ல் சென்று எளிதாக இறக்கிக்கொள்ளலாம். எப்போது வேண்டுமானாலும் படிக்கலாம்).

‘கள்வனின் காதலி’ கதை சிவாஜி கணேசன் கதானாயகனாக நடித்து அதே பெயரில் படமாக வந்துள்ளது. (முழுப்படமும் யூ-ட்யூபில் கிடைக்கிறது). ஆனால் கதையை மீண்டும் படிக்கலாமே என்று தொடங்கினேன். எடுத்தால் கீழே வைக்கவே முடியவில்லை. அவ்வளவு சுவையாக இழுத்துக்கொண்டே போகிறது. ஆனால் அதுவல்ல செய்தி.

நான் எடுத்த புகைப்படங்களை இங்கு வெளியிடுவதற்கு ஏற்ற வாசகங்களை எனக்காகக் கல்கி அவர்களே அக்கதையில் எழுதியிருப்பதைப் பார்த்து அசந்து போனேன்.
பூக்களைப் பற்றி முதல் அத்தியாயத்திலும், வண்ணத்துப் பூச்சிகளைப் பற்றி முப்பத்து ஒன்றாவது அத்தியாயத்திலும்  வர்ணிக்கிறார்.


(ஒரே ஒரு வித்தியாசம், அவர் வர்ணிக்கும் பூக்கள் தமிழ்நாட்டில் இருப்பவை. நான் தரப்போவதோ அமெரிக்கப் பூக்கள். அதனாலென்ன, ஷேக்ஸ்பியர் சொன்னது போல், எந்தப்பெயரில் அழைத்தாலும் பூ மணக்கும் தானே!)

 கள்வனின் காதலி – 1 வது அத்தியாயம்

இந்த (பூங்குளம்)  ஊருக்கென்று அவ்வளவு புஷ்பங்களும் எங்கிருந்து வந்து சேர்ந்தனவோ தெரியாது. குளத்தைத்தாண்டி அப்பால் போனோமோ இல்லையோ, கொன்றை மரங்களிலிருந்து சரம் சரமாய்த் தொங்கும் பொன்னிறப் புஷ்பங்கள் கண்ணைக் கவர்கின்றன. அந்த மங்களகரமான மஞ்சள் நிறப் பூக்களிடம் சிவபெருமான் அவ்வளவு காதல் கொண்டிருப்பதில் ஆச்சரியம் என்ன? 

அப்புறம் இந்தப்பக்கம் பார்த்தோமானால், வேலி ஓரத்தில் வளர்ந்திருக்கும் பொன்னரளிச் செடிகளில், பொன்னரளிப்பூக்கள் கொத்துகொத்தாய்ப் பூத்திருப்பதைக் காண்கிறோம். அத்தகைய பத்தரை மாற்றுப் பசும்பொன்னின் நிறம் அந்தப் பூவுக்கு எப்படித்தான் ஏற்பட்டதோ என்று அதிசயிக்கிறோம்.  

வேலிக்கு அப்பால் நெடிது வளர்ந்திருக்கும் கல்யாண முருங்கை மரத்தைப் பார்த்தாலோ, அதிலே இரத்தச் சிவப்பு நிறமுள்ள புஷ்பங்கள் குலுங்குவதைக் காணலாம்.

சமீபத்திலுள்ள அந்தச் சிவன் கோயிலைத்தான் பாருங்கள். கோயில் பிரகாரத்தில் மதிலை அடுத்தார்போல் வளர்ந்திருக்கும் பன்னீர் மரங்களிலே அந்தப் பன்னீர்ப் புஷ்பங்கள் எவ்வளவு அழகாயிருக்கின்றன? பச்சைப் பசேலென்ற இலைகளுக்கு மத்தியில், இந்த வெண்ணிற மலர்கள் எப்படி சோபிக்கின்றன?

 அடுத்தாற்போலிருக்கும் பவளமல்லி மரத்தையும் அதன் அடியில் புஷ்பப் பாவாடை விரித்தாற்போல் உதிர்ந்து கிடக்கும் பவளமல்லிப் பூக்களையும் பார்த்துவிட்டாலோ ஏன், அப்பால் போவதற்கே நமக்கு மனம் வருவதில்லை.



ஆனாலும் மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு  அதோ  சற்றுத் தூரத்தில்
தெரியும்  குளக்கரையை நோக்கிச் செல்வோம். ஒற்றையடிப் பாதை வழியாகச் செல்லும் போது கம்மென்ற வாசனை வருவதைக் கண்டு அண்ணாந்து பார்க்கிறோம்.




அது ஒரு நுணா மரந்தான். பார்ப்பதற்கு ஒன்றும் அவ்வளவு பிரமாதமாயில்லை. எனினும் அந்த
மரத்தின் சின்னஞ்சிறு பூக்களிலிருந்து அவ்வளவு நறுமணம் எப்படித்தான் வீசுகின்றதோ?

இதோ தடாகத்துக்கு வந்து விட்டோம். குளத்தின் கரையிலே உள்ள நந்தவனத்திலே மட்டும் பிரவேசித்து விட்டோ மானால்




திரும்ப வெளியே வருவதே பிரயாசையாகிவிடும். ஆகையால், வெளியிலிருந்தே அதை எட்டிப் பார்த்துவிட்டுப் போகலாம். 

 அதோ நந்தியாவட்டைச் செடிகளில் கொத்துக் கொத்தாகப் பூத்திருக்கும் வெண்ணிறப் பூக்கள் கண்ணைப் பறிக்கின்றன. 



  அந்தப் புறத்தில் செம்பருத்திச் செடிகளும், வேலி ஓரம் நெடுக கொக்கு மந்தாரையும் இந்தண்டைப் பக்கம் முழுதும் மல்லிகையும் முல்லையும் பூத்துக் குலுங்குகின்றன.

அதோ அந்தப் பந்தலில் ஒரு புறம் ஜாதி முல்லையும், இன்னொரு 
புறம் சம்பங்கியும் பூத்து, நந்தவனம் முழுவதிலும் நறுமணத்தைப் பரப்புகின்றன.




அந்த ஈசான்ய மூலையில் ஒரே ஒரு
ரோஜாச் செடி, வீட்டுக்குப் புதிதாய் வந்த விருந்தாளியைப் போல் சங்கோஜத்துடன் தனித்து நிற்கிறது. அதிலே ஒரு கிளையில் கொத்தாகப் பூத்த இரண்டு அழகிய ரோஜாப் புஷ்பங்கள்.
“ரோஜாப்பூவாம் ரோஜாப்பூ! பிரமாத அதிசயந்தான்!” என்று சொல்வது போல், குளத்தின் கரையில் அடர்ந்து வளர்ந்திருக்கும் அரளிச் செடிகளிலே அரளிப் புஷ்பங்கள்


மண்டிக்கிடக்கின்றன. செண்டு கட்டுகிறார்களே, செண்டு! இயற்கைத் தேவி கட்டியிருக்கும் இந்த அற்புதப் பூச்செண்டுகளைப் பாருங்கள்! கரும் பச்சை இலைகளுக்கிடையில் கொத்துக் கொத்தாய்ப் பூத்திருக்கும் இந்த செவ்வரளிப் பூக்களின் அழகை என்னவென்று சொல்வது? ஆகா!




  அந்தப் பூங்கொத்தின் மேலே இதோ ஒரு பச்சைக்கிளி வந்து உட்காருகிறது. கிளையும் அந்த இயற்கைப் பூச்செண்டும் சேர்ந்து ஊசலாடுகின்றன. ஏதோ தெய்வ லோகம் என்று உயர்வாய்ச் சொல்கிறார்களே, அந்தத் தெய்வ லோகத்தில் இதைவிடச் சிறந்த சௌந்தரியக் காட்சி இருக்க முடியுமோ?



கடைசியாக, அந்தக் குளத்தையும் பார்த்துவிடுவோம். அது குளமா அல்லது புஷ்பக் காடா? மலர்க்குலத்துக்கு ஒரு சக்கரவர்த்தி உண்டு என்றால் அது செந்தாமரை தான் என்பதில் சந்தேகமில்லை.










எத்தனை பெரிய பூ! அதுவும் ஒன்றிரண்டு, பத்து, இருபது அல்ல; ஆயிரம் பதினாயிரம்! அவை தலை தூக்கி நிற்கும் கம்பீரந்தான் என்ன?


சௌந்தரிய தேவதை செந்தாமரைப் பூவைத் தன் இருப்பிடமாகக் கொண்டதில் வியப்பும் உண்டோ? 

 
புஷ்பராஜா கொலுவீற்றிருக்கும் இடத்தில் தாங்களும் இருக்கிறோமே என்று வெட்கப்பட்டுக்கொண்டு, அந்த மூலையில் சில அல்லிப் பூக்கள் ஒளிந்து நிற்கின்றன. 







இன்னும் சிறிது கூர்ந்து பார்த்தால், சில நீலோத்பலங்கள் இதழ் விரித்தும் விரியாமலும் தலையைக் காட்டிக் கொண்டிருப்பதும் தெரிய வருகின்றன.
 






ஆமாம், அங்கங்கே வெள்ளை வேளேரென்று தோன்றுகின்றவை கொக்குகள் தான். ஆனால் அவை மீனுக்காகத் தவம் செய்கின்றனவா அல்லது அந்த அழகுக் காட்சியிலே மதிமயங்கிப் போய்த்தான் அப்படிச் சலனமற்று நிற்கின்றனவா, நாம் சொல்ல முடியாது.




கள்வனின் காதலி – 31வது அத்தியாயம்




கோவிலுக்குப் பக்கத்திலிருந்த மாமரத்தில் பட்டுப்போல் சிவந்த இளம் இலைகளுக்கு மத்தியில் கொத்துக் கொத்தாக மாம் பூக்கள் பூத்திருந்தன. அந்தப் பூக்கள் இருக்குமிடந் தெரியாதபடி வண்டுகளும் தேனிக்களும் மொய்த்தன.






அவற்றின் ரீங்கார சப்தம் அந்த வனப்பிரதேசம் முழுவதிலும் பரவிப் பிரகிருதி தேவியை ஆனந்த பரவசமாக்கிக் கொண்டிருந்தது.

  



 

சற்றுத் தூரத்தில் ஒரு முட்புதரின் மேல் காட்டு மல்லிகைக் கொடி ஒன்று படர்ந்திருந்தது. அந்தக் கொடியில் குலுங்கிய பூக்களிலிருந்து இலேசாக வந்து கொண்டிருந்த நறுமணத்தினால் கவரப்பட்டுத்தான் போலும், அத்தனை பட்டுப் பூச்சிகள் பறந்து கொண்டிருந்தன!

  


 அவற்றின் இறகுகளுக்குத்தான் எத்தனை விதவிதமான நிறங்கள்! அவற்றில் எவ்வளவு விதவிதமான வர்ணப்பொட்டுக்கள்!


  



 



நல்ல தூய வெள்ளை இறகுகளும், வெள்ளையில் கறுப்புப் பொட்டுக்களும், ஊதா நிற இறகுகளில் மஞ்சள் புள்ளிகளும், மஞ்சள் நிற இறகுகளில் சிவப்புக் கோலங்களும் – இப்படியாக ஒரே வர்ணக் காட்சி தான்!

  



பிரம்ம தேவன் இந்தப் பட்டுப்பூச்சிகளைச் சிருஷ்டித்த காலத்தில் விதவிதமான வர்ணங்களைக் கலந்து வைத்துக்கொண்டு அவற்றை விசித்திரம் விசித்திரமாய்த் தீட்டி வேடிக்கை செய்திருக்க வேண்டும்.




பட்டுப்பூச்சிகள் ஒரு நிமிஷம் அந்தக் காட்டு மல்லிகைக் கொடியின் மீது உட்கார்ந்திருக்கும்.

அடுத்த நிமிஷம் ஒரு காரணமுமின்றி அவை கொல்லென்று கிளம்பி வானவெளியிலெல்லாம் பறக்கும்.









அவை பறக்கும்போது அவற்றின் இறகுகள் படபடவென்று அடித்துக் கொள்வதைப் பார்த்தால், “ஐயோ! இந்த அழகான பூச்சி இப்படித் துடிக்கின்றதே! அடுத்த கணத்தில் கீழே விழுந்து உயிரை விட்டுவிடும் போலிருக்கிறதே!” என்று நாம் தவித்துப் போவோம்.
*** 

  (புகைப்படங்கள் நானே எடுத்தவை. மண்டபத்தில் யாரும் கொண்டுவந்து  கொடுத்ததல்ல.வேண்டியவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்).

10 கருத்துகள்:

  1. படங்களும் பகிர்வும் மிகவும் என்னை கவர்ந்தன. பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  2. அன்புள்ள ஐயா.

    வணக்கமுடன் ஹரணி.

    இந்தப் பதிவு பல நினைவுகளைக் கிளறிவிட்டது.

    நிச்சயம் அமரர் கல்கி உயிருடன் இருந்து உங்கள் பதிவைப் பார்த்திருந்தால் பரவசப்பட்டிருப்பார். பொருத்தமான அவரின் வரிகளுக்கு மிகப் பொருத்தமாய் படங்களைத் தெரிவு செய்து காட்சிப்படுத்தியிருக் கீறீர்கள்.

    கல்கியின் படைப்புக்கள் அத்தனையையும் முழுமையாகப் படித்தவன். அதுகுறித்து பல ஆய்வரங்குகளில் கட்டுரைகள் வாசித்தவன்.

    வரலாறு சமூகம் நகைச்சுவை கட்டுரை இப்படி எல்லாவற்றிலும் கலகியிடம் ஒரு செய்நேர்த்தி இருக்கும். மிகப் பொறுப்புணர்ச்சி கொண்ட எழுத்து அவருடையது. கணமான விவரிப்பு மனத்தைக் கொள்ளை கொண்டுபோகும்.

    எனக்கு அவருடைய படைப்புக்களில் மிகவும் பிடித்தது. பொன்னியின் செல்வன். இதுவரை கிட்டத்தட்ட 7 முறைகளுக்குமேல் வாசித்திருக்கிறேன். கல்கியில் தொடராக வந்து அதைக் கிழித்துப் பைண்டிங் செய்து பத்திரப்படுத்திய புத்தகம் தொடங்கி பிற பதிப்பகங்கள் வெளியிட்டுள்ள பொன்னியின் செல்வன் பதிப்புக்களை 5 மாடல்களில் வாங்கி என் அறையில் வைத்திருக்கிறேன்.

    இனியொரு அப்படியொரு எழுத்தாளர் உண்டா தமிழுக்கு.. என் மனதுக்கினிய கல்கி குறித்து எழுதியமைக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  3. ஐயா ! இயற்கையையும் இலக்கியத்தையும் ரசிக்க தனியாக , மிகவும் மென்மையான, மேன்மையான் மனம் வேண்டும் . அதனை உங்கள் இடுகையில் தரிசித்தேன்.நன்றி---காஸ்யபன்.

    பதிலளிநீக்கு
  4. ரசனை மிகவும் ரசிக்க வைத்தது... ஒப்பிட்ட விதம் அற்புதம்... வாழ்த்துக்கள் பல... நன்றி...

    பதிலளிநீக்கு
  5. வருகை தந்து முதல் கருத்துரையிட்ட ‘அவர்கள்-உண்மைகள்’ மதுரைத்தமிழன் அவர்களுக்கு மிக்க நன்றி.

    ஹரணி அவர்களுக்குப் பதில் சொல்வதானால் அதுவே ஒரு கட்டுரையாகிவிடும். எனவே ‘நன்றி’. வயது வித்தியாசமின்றி இன்றும் படிக்கப்படும் கதாசிரியர், கல்கி. அவரது சிறுகதைகளைப் பற்றி ஓர் ஆய்வுக்கட்டுரை எழுத எண்ணியிருக்கிறேன். அடுத்த வருடம் நிறைவேறலாம்.

    ‘செம்மலர்’ ஆசிரியராக நீண்டகாலம் இருந்தவர் காஷ்யபன். இவர் போன்றவர்கள் எனது பதிவுகளையும் படிக்க வருவது எனக்கு உண்மையிலேயே நெகிச்சியூட்டுகிறது. இனியும், இன்னும், தரமான எழுத்தைத் தரவேண்டிய கட்டாயத்தை என்மேல் திணிக்கிறது. நன்றி, காஷ்யபன் அவர்களே!

    எனது பொறாமைக்குரியவர், திண்டுக்கல் தனபாலன். தவறாமல் என்னையும், குறைந்தது ஒரு நாளைக்கு நூறு பிற பதிவுகளையும், படித்து கருத்துரையும் இடுகிறார். அவருக்கும் இருப்பது ஒரு நாளைக்கு இருபத்து நான்கு மணிகளே என்னும்போது வியப்படைகிறேன். நன்றி, ஐயா!

    பதிலளிநீக்கு
  6. ஏதோ தெய்வ லோகம் என்று உயர்வாய்ச் சொல்கிறார்களே, அந்தத் தெய்வ லோகத்தில் இதைவிடச் சிறந்த சௌந்தரியக் காட்சி இருக்க முடியுமோ?

    கல்கியின் படைப்புகளை பலமுறை படித்திருக்கிறேன் ..

    அற்புதமான மன நிறைவளிக்கும் சிறப்பான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
  7. ஆம், நூறு முறை படித்தாலும் கல்கியின் எழுத்துக்களில் புதிதாக ஏதோ ஒன்று தெரிவதைப் பார்க்கலாம். ‘அறிதோர் அறியாமை கண்டற்றால்’ என்று திருவள்ளுவர் வேறொன்றைப் பற்றிக் கூறியது நினைவுக்கு வருகிறது. தங்கள் வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  8. அமரர் கல்கி அவர்கள் வர்ணித்த இயற்கையின் எழிலையும், கண்ணைக் கவரும் எழில் மிக்க வண்ண மலர்களையும் அழகாய் ஒப்புமைப் படுத்தியுள்ளீர்கள். அருமை. பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல. வணக்கங்கள் !!!

    பதிலளிநீக்கு
  9. அழகு நடமாடும்
    அற்புத இசை மீட்டும் பதிவு

    கல்கியின் வர்ணனைக்கு நிகர் எதுவும் இல்லை அந்த காலச் சூழலுக்கு நம்மை இழுத்துச் செல்லும் மந்திர எழுத்துக்கு சொந்தகாரர் .........

    அவரின் எழுதும் உங்கள் படமும் அழகு என்றாலும் இந்த படத்தில் உள்ள பூக்களின் பெயர்களை சரியாக பதிவிட்டால் வருங்கால சந்ததி அறிந்துகொள்ள ஏதுவாக இருக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  10. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு