புதன், ஜூலை 03, 2013

ஆவிகளுடன் சில அனுபவங்கள் (3)



இவ்வரிசையில் முந்தைய பதிவுகளைப் படிக்க:
ஆவிகளுடன் சில அனுபவங்கள் (1)
ஆவிகளுடன் சில அனுபவங்கள் (2)

எப்படியும் இந்தக் கோடை விடுமுறையில் குட்டிச் சாத்தானை வசப்படுத்திவிடுவது என்று தீர்மானித்திருந்தேன் அல்லவா? அதற்குத் தகுந்தாற்போல் ஒரு நிகழ்ச்சி நடந்தது.

பேய் மாதிரி இல்லை?
எங்கள் எதிர்வீட்டில் ஒரு வயதான தம்பதியர் இருந்தனர். இருவருக்கும் வயது தொண்ணூறுக்கும் மேல். வீடே அவர்களுடையது இல்லை என்றும், உரிமையாளர் வாரிசின்றி இறந்துபோனதால் இவர்கள் ஐம்பது வருடங்களாக அங்கேயே தங்கிவிட்டார்கள் என்றும், இரண்டு பால்மாடுகளை வைத்துக்கொண்டு பிழைப்பு நடத்தி வந்தார்கள் என்றும் தாத்தா சொல்லக் கேட்டிருக்கிறேன். இப்போது வீட்டின் முன்புறத்தை வாடகைக்கு விட்டு அதில் தான் பிழைப்பு நடக்கிறதாம்.


வீட்டின் முன்புறம் நாற்பது வயது மதிக்கத்தக்க மலையாளி ஒருவர் குடியிருந்தார். அவரை நாயர் என்று அழைப்பார்கள். ஈ.ஐ.டி. பாரி கம்பெனியில் அவர் வேலையில் இருந்தார். காலை ஏழு மணிக்குக் முனிசிபாலிட்டி சங்கு ஊதும்போது நாயர் வக்கீல் தெரு கடைசியிலிருந்த தேனீர்க்கடையில் தேனீர் குடிப்பதும், கம்பெனி சங்கு ஏழரை மணிக்கு ஊதும்போது சைக்கிளில் ஏறிக்கொண்டு ‘நான் வர்ர்றேன் பாட்டியம்மா’ என்று சொல்லிக்கொண்டு கம்பெனிக்குக் கிளம்புவதும் எல்லாருக்குமே மனப்பாடம்.

நாயருக்கு மனைவி மக்கள் இருப்பதாகத் தெரியவில்லை. யாரிடமும் அதிகம் பேசுவதில்லை. ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை என்னிடம் பத்து பைசா தந்து ‘ஹிந்து’ வாங்கிவரச் சொன்னபோது தான் அவருடைய அறையைப் பார்வையிடும் வாய்ப்பு கிட்டியது. சுவரில் அவருடைய கல்யாண போட்டோ இருந்தது. அவரது மனைவி அவரைவிட அழகாக இருந்தார் என்று தோன்றியது. அம்மாவிடம் சொன்னபோது ‘மலையாளப் பெண்கள் எப்போதுமே அழகு தான். அவர்கள் தேங்காயெண்ணெயில் தான் பலகாரம் செய்வார்கள். கடலை யெண்ணெய் கிடையாது’ என்றார். 

நாயரின் அறையில் ஒரு லேசான இரும்புக் கட்டில் இருந்தது. அதன் மீது இரண்டு மூன்று லுங்கிகளைப் படுக்கை போல் போட்டிருந்தார். படுக்கையிலிருந்த அழுக்கின் கனம் குமட்டிக்கொண்டு வந்தது. தலையணை மேலிருந்த உறையும் அப்படியே. அறையின் ஒரேயொரு சன்னல், பெரும்பாலும் திறக்கப்படாமல் இருக்குமாதலால் சிலந்திகள் தடையின்றி பின்னியிருந்த வலைகளில் ஈக்களும் ஈசல்களும் செத்துக் கிடந்தன. சன்னலுக்கு மேல் நீண்ட வாலை நீட்டியபடி அசைவின்றி ஊர்ந்து கிடந்தது பெரிய பல்லி ஒன்று. மூலையில் ஓர் எலிப்பொறி வைத்திருந்தார். தெருவில் யார் வீட்டில் எலி வரும் சந்தேகம் இருந்தாலும் நாயரிடமிருந்து தான் எலிப்பொறி இரவல் வாங்குவோம்.

‘ரொம்ப தேங்க்ஸ் பையா! ஒரு பொறை சாப்பிடுகிறாயா?” என்றார் நாயர்.

‘பொறை’ என்பது இப்போது கிடைக்கிறதா என்று தெரியவில்லை. பிஸ்கட்டுக்கும் ரொட்டிக்கும் இடையில் பிறந்த பொருள். தேனீர்க்கடைகளில் சல்லடை மாதிரியான மெல்லிய இரும்புக் கோளங்களில் அடைத்து வைத்திருப்பார்கள். பெரும்பாலும் செவ்வக வடிவிலும் சில நேரம்  வட்ட வடிவிலும் கிடைக்கும். உப்பா, காரமா, இனிப்பா என்று சொல்லமுடியாத  சுவையுடன்  மொற மொறவென்றிருக்கும். சற்று கெட்டியான பல் உள்ளவர்கள் தான் நம்பிக்கையோடு கடிக்கலாம். மற்றவர்கள், தேனீரில் தோய்த்து ஈரத்துணி போலாக்கி வாயில் நுழைப்பார்கள்.   ‘ஒரு டீ, ரெண்டு பொறை’ என்பது தேனீர்க் குடியர்களின் வழக்கமான ஃபார்முலா.

‘வேண்டாம்’ என்றேன். எனக்குப் பொறை பிடிக்கும் என்றாலும் இப்போது தாத்தா வீட்டில் இருப்பார். பொறையை அவசரமாக விழுங்க முடியாது. கடித்தால் நொறுக்கென்று ஓசை வரும். ‘மாதம் ஒரு தடவை தான் அவன் குளிக்கிறான், அவனிடம் வாங்கிச் சாப்பிடுகிறாயா?’ என்று கோபிப்பார். பாட்டி ஓடி வந்து அனுதாபத்துடன், ‘இன்று போனால் போகிறது. இனிமேல் யார் வீட்டிலும் வாங்கிச் சாப்பிடாதே. கிணற்றில் நாலு தோண்டி இழுத்து குளித்துவிட்டு வா’ என்பார்.

“கூச்சப்படாதே பையா! மேசை மீது ஒரு தடியான புத்தகம் இருக்கும். அதன் மேல் பொறை பாக்கெட் இருக்கும் பார். எடுத்துக் கொள்” என்ற நாயர், “கதவைச் சாத்திக்கொண்டு போ” என்று பாத்ரூமுக்குப் போய்விட்டார். 

எனக்குப் பொறை வேண்டியதில்லை. அது என்ன தடியான புத்தகம் என்று பார்த்தேன். மலையாளத்தில் இருந்தது. வெளிப்புறப் பின் அட்டையில் ‘கேரளா மேஜிக்’ என்று இருந்தது. அதற்குமேல் படிக்க எனக்கு ஆங்கிலம் தெரியாதே! ஆறாம் வகுப்பில் தான் அப்போது ஏ-பி-சி-டி சொல்லித் தருவார்கள். நானாக முயன்று எழுத்துக்கூட்டி வார்த்தைகளைப் புரிந்துகொள்வதை வழக்கப்படுத்திக் கொண்டிருந்ததால் இந்த இரண்டு சொற்களைப் படிக்க முடிந்தது.

அதைக் கண்டவுடன் நான் அடைந்த மகிழ்ச்சி இருக்கிறதே, சொல்லி மாளாது. நாயருக்கு நிச்சயம் மாந்திரீகம் தெரிந்திருக்க வாய்ப்புண்டு என்று நம்பிக்கை ஏற்பட்டது.. நான் வாங்கிய ஸ்ரீமகள் கம்பெனி ‘மலையாள மாந்திரீகம்’ புத்தகத்தில் சந்தேகம் வந்தால் இவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்று ஆனந்தம் ஏற்பட்டது.

கதவைச் சாத்திவிட்டு வெளியேறினேன்.
****
குடுகுடுப்பைக்காரர் என்றால் எனக்கு மிகவும் பயம். விடியற்காலை நேரத்தில் தனது குடுகுடுப்பையைப் பலமாக அடித்துக்கொண்டு “ஜக்கம்மா நல்ல வார்த்தை சொல்றா, ஜக்கம்மா நல்ல வார்த்தை சொல்றா” என்று பலமுறை திருப்பிச் சொல்வார். அது என்ன நல்ல வார்த்தை என்பதை லேசில் சொல்ல மாட்டார்.

“இந்த வீட்டில் இருக்கும் ஆம்பளைக்கு இன்னும் மூணு வாரத்தில் நல்ல வேலை கிடைக்கும்னு ஜக்கம்மா சொல்றா. இந்த வீட்டு அம்மாவுக்கு மகாலச்சுமி வரப் போறான்னு ஜக்கம்மா சொல்றா. இந்த வீட்டுப் பையனுக்கு பரிட்சை யெல்லாம் நல்லா பாசாகும்னு ஜக்கம்மா சொல்றா..” என்று கடைசியில் சொல்வார்.

“பழைய துணி இருந்தா கொண்டுவாங்க. படி அரிசி கொண்டு வாங்க. இன்னும் என்னென்ன கேக்கணுமோ எல்லாத்தையும் சொல்றேன். ஜக்கம்மா கூப்பிடறா, ஜக்கம்மா கூப்பிடறா..” என்று சொல்லி நிறுத்துவார். விடியற்காலையில் யார் இவருக்காகக் கதவு திறந்து பழைய துணி கொடுப்பார்கள் என்று ஆச்சரியமாக இருக்கும். 

கொஞ்ச நேரம் பொறுத்துப் பார்த்துவிட்டு “ஜக்கம்மா நல்ல வார்த்தை சொல்றா” என்று உடுக்கை அடித்துக்கொண்டே அடுத்த தெருவுக்குப் போய் விடுவார்.

காலையில் எழுந்து பாட்டியிடம் கேட்பேன். “அவன் சொன்னது சில நேரம் பலிக்கும் சில நேரம் பலிக்காது” என்பார். ஆனாலும் பகலில் அவன் வந்து தன் தோளில் தொங்கும் பலவண்ணப் பையைக் காட்டும்போது அதில் அரைப்படி அரிசி போடத் தயங்க மாட்டார்.
****
குட்டிச்சாத்தான் வசிய மந்திரத்தை நான் மனதிற்குள் பலமுறை சொல்லிப் பார்த்து மனப்பாடம் செய்துவிட்டேன். ஆனால் அப்படி மனப்பாடம் செய்தால் எந்தப் பலனும் இல்லை. முறைப்படி செய்தால் தான் பலன் கிடைக்குமாம். அதென்ன ‘முறை’?

இரவு எட்டு மணிக்குப் பிறகோ அல்லது காலை நாலு மணிக்கும் ஐந்து மணிக்கும் இடையிலோ, ஏதாவது நல்ல நீருள்ள கிணற்றிலோ, குளத்திலோ, அல்லது ஆற்றிலோ, இடுப்பளவு நீரில் நின்று கொண்டு அந்த மந்திரத்தைத் தினம் ஆயிரத்தெட்டு தரம் உச்சரிக்க வேண்டுமாம். இது, முதல் ஒரு மண்டலத்திற்காம். அதாவது நாற்பத்தெட்டு நாட்கள். அதன் பிறகு? பொறுங்கள் வருகிறேன்.

எங்கள் இராணிப்பேட்டையில் பாலாறு என்று ஓர் ஆறு ஓடிக்கொண்டிருந்தது. எனக்கு ஏழு வயதாகும் வரை அதில் ஆண்டு தோறும் வெள்ளம் வருவதைப் பார்த்திருக்கிறேன். இராணிப்பேட்டைக்கும் ஆற்காட்டிற்கும் இடையில் சுமார் இரண்டு மைல் அகலத்திற்கு அது பேரிரைச்சலோடு பொங்கித் ததும்புவது இன்னும் நினைவில் இருக்கிறது. சுமார் ஒரு வார காலத்திற்கு  இரண்டு ஊர்களுக்கும் இடையே போக்குவரத்து நின்றுவிடும். அவசரமாகப் போக வேண்டும் என்றால், இராணிப்பேட்டையிலிருந்து நவல்பூர், திருவலம் வழியாக காட்பாடி போய், அங்கிருந்து வேலூர் கூட் ரோடு வந்து, சத்துவாச்சாரி, பூட்டுத்தாக்கு, மேல்விஷாரம் வழியாகத் தான் ஆற்காட்டை அடைய வேண்டும். சுமார் நான்கு மணி நேரம் ஆகும். பஸ் கட்டணம் எட்டு மடங்கு ஆகிவிடும்.

முதலமைச்சராக  ஆவதற்கு முன் ஒருமுறை காமராஜர் ஆற்காட்டிலிருந்து சென்னை போவதற்காகக் கிளம்பியபோது இரண்டு மைலில் இருந்த இராணிப்பேட்டையைக் கடக்க முடியாமல் வெள்ளம் வந்து விட்டது. அப்போது சொன்னாராம், ‘சீக்கிரமாக உங்களுக்கு ஒரு பாலம் கட்டித் தருகிறேன்’ என்று. அந்தக் காலத்து அரசியல்வாதியாயிற்றே! சொன்னதைச் செய்யாமல் இருப்பாரா? செய்தார். 1957ல் ‘பாலாறு பாலம்’ திறக்கப்பட்டது. அது கட்டி முடியும் வரை அந்த இடத்தில் சில திரைப்படங்களுக்கு ஷூட்டிங் நடந்தது நினைவில் இருக்கிறது. அடுக்கடுக்காக மூங்கில் சாரங்கள். ஆயிரக்கணக்கான சித்தாள்கள். தலையில் செங்கல் கூடையுடன் கதாநாயகி சாரத்தில் ஏறுவது போல் ஒரு படத்தில் வந்ததாம். பெயர் நினைவில்லை.

கிட்டத்தட்ட அதே சமயம் தான் என்று நினைக்கிறேன். பாலாற்றின் இன்னொரு பகுதியான திருவலத்தில் அமைக்கப்பட்டிருந்த புதிய இரும்புப்பாலத்தில் வைஜயந்திமாலா ஓர் ஆண்பிள்ளை மாதிரி உடை அணிந்துகொண்டு குதிரை மேல் அமர்ந்து

“அகில பாரதப் பெண்கள் திலகமாய்
     அவனியில் வாழ்வேன் நானே-     
ஆணுக்குப் பெண் தாழ்வெனப் பேசும்
     வீணரை எதிர்ப்பேன் நானே”

என்று பாடிக்கொண்டு வரும் காட்சி, ‘சகோதரி’ என்ற படத்திற்காகப் படமாக்கப்பட்டதும் நினைவிருக்கிறது. (காட்பாடிக்கும் அரக்கோணத்திற்கும் இடையில் ரயில் பயணம் செய்தால் இப் பாலத்தைப் பார்க்கலாம்).

பாலம் கட்டிய ராசி சரியில்லை என்று சொல்லிக்கொண்டார்கள். கட்டிய இரண்டாவது வருடத்திலிருந்து ஆற்றில் வெள்ளம் வருவது நின்று போனது. கர்னாடகத்தில் கபினி அணை கட்டியதால், பாலாற்றுக்கு நீர் வருவது குறைந்து போய், அடுத்த மூன்றாண்டுகளில் நின்றே போய்விட்டது. அதனால், பாலாற்று நீரை நம்பிப் பாசனம் செய்துகொண்டிருந்த பல கிராமங்கள் (வாலாஜாப்பேட்டை, குடிமல்லூர், சுமைதாங்கி, காவேரிப்பாக்கம் போன்றவை) நட்டாற்றில்(!) விடப்பட்டார்கள். விவசாயிகள்  ஒன்றுகூடி ஒரு முடிவெடுத்தனர்.

அதாவது, ஆள்வைத்து, பாலாற்றின் மணற்பரப்பில் பத்தடி அகலமும், சுமார் ஒரு மைல் நீளமும் உடைய ஊற்றைத் தோண்டினார்கள். பார்ப்பதற்கு இது ஆறு போலவே இருக்கும். வெள்ளம் வராது அவ்வளவே. அனேகமாக வாரம் இரண்டு முறை இந்த ஊற்றை ஆழப்படுத்திக்கொண்டே இருப்பார்கள். கடுமையான கோடையிலும் இதில் இடுப்பளவு தண்ணீர் இருக்கும். வக்கீல் தெருவிலிருந்து வெறும் அரை மைல் தூரத்தில் தான் இந்த ஆறு (ஊற்று)  இருந்ததால், எங்கள் தெருவாசிகள் அனைவரும் இதில் தான் விடியற்காலையில் குளித்து, துணி தோய்த்துக்கொண்டு கரையேறுவது வழக்கம்.

இந்தப் பாலாற்றில் தான் இடுப்பளவு தண்ணீரில் நின்று  மந்திர உச்சாடனம் செய்துவிடுவது என்று முடிவெடுத்தேன். இரவில் போவதை வீட்டில் யாரும் அனுமதிக்க மாட்டார்கள் என்பதால், விடியற்காலையில் போவது என்று முடிவு செய்தேன். அதற்கேற்றாற்போல் அது மார்கழி மாதம் வேறு. நாலு மணிக்கு எழுந்து கும்மிருட்டில் ஆற்றுக்குப் போய்க் குளித்துவிட்டு ஆஞ்சனேயர் கோவிலில் திருப்பாவை திருவெம்பாவை சொல்லிவிட்டுப் பொங்கல் வடையுடன் வீடு திரும்பினால் யாரும் ஆட்சேபிக்கப் போவதில்லை.
******
குட்டிச்சாத்தானுடன் எனது சந்திப்புக்கு ஆயத்தமான முதல் நாள் அது. காலை மூன்றரை மணிக்கே எழுந்துவிட்டேன். (வடக்கு மூலையில் ஒரு பல்லி ‘சொல்லும்’ போது விடியற்காலம் மூன்றரை என்று பாட்டி சொல்லிக் கேள்வி. அதை வைத்துக்கொண்டு எழுந்தேன்). குளித்து உடுத்திக் கொள்வதற்கு ஒரு வேட்டியும் துண்டும், வழியில் தெரு நாய்களை விரட்டுவதற்காக ஒரு கனமான முருங்கைக் குச்சியும், மீறி வந்தால் எறிவதற்கு சில ஜல்லிக்கற்களுமாக என்னைத் தயார் செய்துகொண்டேன். “தாத்தா, கதவைச் சாத்திக் கொள்” என்று சொல்லி விட்டு வீதிக்கு வந்தேன்.

வக்கீல் தெருவைத் தாண்டி பாலாற்றுக்குப் போகும் வழியில் அப்போது ஒரு வாய்க்கால் ஓடிக் கொண்டிருக்கும். அதைப் ‘பெரிய வாய்க்கால்’ என்று சொல்வோம். ஈ.ஐ.டி.பாரி கம்பெனியிலிருந்து வரும் கழிவு நீர்க் கால்வாய் தான் அது. கம்பெனியிலிருந்து சுமார் இரண்டு மைல் ஓடி, பாலாற்றின் ஒரு கரையின் மேடான  பகுதியில் போய் முடியும். அங்கு தான் சுடுகாடு இருக்கும். (நான் போனதில்லை). (இப்போது பைபாஸ் ரோடு வந்ததில் அந்த வாய்க்கால் அழிந்துவிட்டதாம்). வாய்க்கால் மீது பதினந்தடி நீளத்திற்கு சிறிய பாலம் இருந்தது. கால்வாயிலிருந்து தண்ணீர்ப் பாம்புகள் வெளியில் வந்து பாலத்தைக் கடப்பதுண்டு. நல்லவேளையாக, வாய்க்கால் அருகில் தெருவிளக்கு எரிந்து கொண்டிருந்ததால் கவனமாகப் போகமுடிந்தது.

வாய்க்கால் முடிந்தவுடன் சுமார் நூறடி நீளத்திற்கு ஒரு காடு வரும். சாலையை ஒட்டிப் புங்கமரங்கள் வரிசையாக இருக்கும். பனை மரங்கள் இரண்டு பக்கமும் இருக்கும். பெண் பனையில் நுங்கு காய்க்கும். ஆண்பனையில் நுங்குக்குப் பதில்  ஓரடி நீளம் இரண்டங்குல அகலத்தில் பனம்பூ தொங்கும். அதை வெட்டி வந்து அடுப்பில் எரியவைத்துக் கரியாக்கி, உலக்கையால் இடித்துத் தூளாக்கி, உப்பு கொஞ்சம் சேர்த்து, கையகலத் துணியில் சுற்றி, அதை மூன்றாய்ப் பிரிந்த கொய்யாக் கிளையில் வைத்துக் கட்டி, மேலே ஊதுவத்தியால் கொளுத்தி, வலப்புறம் இடப்புறமாகப் பலமுறை சுற்றி நன்றாகப் பொறி வந்ததும் தலையைச் சுற்றிப் பூமாலை போல ஆடுவோம். உப்பின் அளவுக்கேற்ப ‘பட் பட்’ டென்று வெடித்துக்கொண்டே பூவாணம் கிளம்பும். இதற்கு ‘மாவளி’ சுற்றுதல் என்று பெயர். கார்த்திகை தீபத்தின் போது மட்டும் தான் இது நடக்கும்.

அந்தப் பனை மரங்கள் விடியற்காலையின் மெல்லிய காற்றிலும் சலசலவென்று ஓசை எழுப்பிக் கொண்டிருந்தன. சாலையில் ஆள் நடமாட்டம் இல்லை. தெருவிளக்கின் வெளிச்சமும் குறைந்துகொண்டே வந்தது. ஆற்றங்கரையின் அருகே வந்துவிட்டேன். எதிரில் இரண்டு மைலுக்கப்பால் ஆற்காட்டில் லாரிகள் போகும்போது தெரியும் வெளிச்சம் தவிர வேறு வெளிச்சம் இல்லை. இருட்டென்றால் அவ்வளவு இருட்டு.

எனக்கு அம்மாதிரி பயம் எப்போதும் வந்ததில்லை. கல்லையும் குச்சியையும் கீழே எறிந்தேன். ஆற்றின் ஊற்றை நோக்கி நடந்தேன். இன்னும் நூற்றைம்பது அடி நடந்தாக வேண்டும். வேட்டி துண்டை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு அரை தைரியத்துடன் நடந்தேன்.

என்ன தான் நடந்துவிடும் பார்க்கலாம், முதல் நாள் தானே பயம், நாளையிலிருந்து பழகிவிடும் என்று  சொல்லிக்கொண்டேன். குட்டிச்சாத்தான் மந்திரத்தை ஒருமுறை பலமாகச் சொன்னேன். சற்று தைரியம் வருவது போல் தோன்றியது. மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே ஆற்று நீரில் இறங்கினேன். சட்டையையும் கட்டியிருந்த வேட்டியையும் கழற்றி நனைத்தேன். மந்திரத்தை சப்தமாகச் சொல்ல ஆரம்பித்தேன்.

அப்போது-

எனக்குத் துணையாக அதே மந்திரத்தை வேறு யாரோ மெல்லிய குரலில் சொல்வதுபோல் கேட்டது. இருட்டில் எதுவும் தெரியவில்லை. மனப்பிரமை  தானோ என்று மீண்டும் மந்திரத்தில் கவனம் செலுத்தினேன். இதற்குள் எத்தனை தடவை சொன்னேன் என்று மறந்து போயிற்று. புதிதாக எண்ண ஆரம்பித்தேன்.  இருநூறு சொல்லி முடிக்கையில் மீண்டும் அதே குரல். அதே மந்திரம்.

பாலத்தின் மேல் மூன்று லாரிகள் அடுத்தடுத்து போனபோது அவற்றின் வெளிச்சத்தில் கூர்ந்து பார்த்தேன். நான் இருந்த இடத்திற்கு மேற்கில் சுமார் இருநூறடி தூரத்தில் ஓர் உருவம் தண்ணீரில் நின்று கொண்டு மந்திர உச்சாடனம் செய்வது தெரிந்தது. அவர் வேறு யாருமில்லை, நமது குடுகுடுப்பைக்காரர் தான்!

அவ்வளவு தான், எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. உதறல் எடுக்க ஆரம்பித்தது. அவர் தாத்தாவிடம் சொல்லிவிட்டால் ? வேறு வினையே வேண்டாம். ஆற்றுப்பக்கமே இனி வரவிடமாட்டார். அது மட்டுமன்றி இந்த மந்திரத்தை யாருக்கும் தெரியாமல் தனியாக உச்சரிக்கவேண்டும் என்று மலையாள மாந்திரீகம் புத்தகத்தில் போட்டிருந்தது.

அவசரம் அவசரமாக தண்ணீரை விட்டு வெளிவந்தேன். குட்டிச்சாத்தானை இன்னொரு நாள் பார்த்துக் கொள்ளலாம்  என்று முடிவு செய்தேன். துடைத்து வேட்டி மாற்றிக்கொண்டு, துண்டைப் பிழிந்து தோளில் போட்டுக் கிளம்பும்போது ‘உஷ்’ என்று யாரோ மெல்ல அழைப்பது கேட்டது. தெரிந்த குரல் வேறு. திடுக்கிட்டேன்.

“என்ன தம்பி இவ்வளவு சீக்கிரம் குளியல்?’  என்றபடியே என்னை நோக்கி வந்து கொண்டிருந்தார், நாயர்.

நான் என்ன பதில் சொல்வதென்று  யோசிப்பதற்குள், ‘இந்தா, ஒரு நிமிடம் இதைப் பிடி. எக்காரணம் கொண்டும் கீழே வைத்துவிடாதே“ என்று ஏதோ ஒரு கனமான பொருளை என் கையில் திணித்துவிட்டு காலைக்கடன் கழிப்பதற்காக நகர்ந்தார்.

அது ஒரு மண்டை ஓடு!

    (நாளை நிச்சயம் முடிந்துவிடும்).      
இவ்வரிசையில் அடுத்த பதிவினைப் படிக்க:
ஆவிகளுடன் சில அனுபவங்கள் (4)


(C) Y.Chellappa
email: chellappay@yahoo.com

1 கருத்து:

  1. என்ன சார் இப்படி பயமுறுத்துறீங்க... நாளை முடிந்துவிடும் என்று நினைக்கும் போதும் ஆவல் குறையவில்லை...

    பதிலளிநீக்கு