சனி, ஜூன் 29, 2013


மூத்த மகள் ரம்யாவுக்குப்
பிறந்த நாள் (ஜூன் 29) – (கவிதை)


நடைவண்டி உனக்கென்று நான் வாங்கினேன் –உன்
நடைவேகம் அதற்கில்லை எனக் காட்டினாய்!
ஒருசைக்கிள் உனக்காகப் பரிசாக்கினேன் – அதை
ஒருமாலைப் பொழுதுக்குள் விரைந்தோட்டினாய்


காற்றூதும் நாய்ப்பொம்மை கையில் தந்தேன்-ஒரு
கையாலே காற்றெல்லாம் வெளியாக்கினாய்!
கங்காரு பொம்மை தான் காணாமல்போய்-அது
கைசேரும் வரை கதறி ஊர்கூட்டினாய்



'சீமா' பொம்மையுடன் ரம்யா, தங்கை அர்ச்சனா 

தரைமீதில் இலைபோட்டுப் பரிமாறினால்- நீ
தவழ்ந்தோடிக் கையாலே பறித்துண்ணுவாய்
உனையேந்திக் கிண்ணத்தில் அமுதூட்டினால்-நீ
உண்ணாமல் தப்பிக்க வழிதேடுவாய்

 
அ-ஆ-இ ஒருநாளில் உருவேற்றினாய்-நீ
அரைநாளில் மழலைப்பா உடன்பாடினாய்
தப்பாமல் பலநூல்கள் நீ நாடினாய்-என்
தமிழுக்குப் பலமான உறவாகினாய்

 

                                                    தம்பி அரவிந்த கார்த்திக்குடன் 

உனக்கென்றே ஒருகுட்டித் தலையணை தான்-நான் 
உன் கையில் தந்தவுடன் மகிழ்ந்தே போனாய்
அழுக்காகும் அதுவென்று மார்போடிட்டே - கை
அணைப்போடு தூங்கியதை யார் மறப்பார்!

 
கங்காரு பொம்மைதான் உன் தோழியே – அது
காணாமல்  போய்மீண்ட கதையும் உண்டே!
கண்ணோடு கண்ணாக வளர்ந்தாயேநீ – உன்
கண்ணுக்குள் எனையன்றோ காண்கின்றேன் நான்!


                                                    அமெரிக்கா வந்த புதிதில் 

ஊர்மாறி ஊர்மாறி நான் ஓடினேன் – நீ
ஒருநாளில் மணப்பெண்ணாய் உருமாறினாய்
நீயின்று அமெரிக்கப் பெண்ணாகியும் –மனம்
நீங்காமல் தமிழோடு உறவாடுவாய்
 
பள்ளி/கல்லூரிப் பருவம்: தங்கை, அக்கா, தம்பி 


தங்கைக்கும் தம்பிக்கும் தாயாகினாய் –என் 
தலைப்பிள்ளை யாய்க்  கடமை நிறைவேற்றினாய்
ஒருபிள்ளைக் குழந்தைக்குத் தாயாகினாய் –இன்று
உயர்வாகித் தனிநின்று வழிகாட்டினாய்

 
                                           பிட்ஸ்பர்க்கில் கணவர் ஜார்ஜ், மகன் வினயனுடன்  

கண்ணுக்குள் மணிபோல நீ வாழிய! - உன்
கணவருடன் பிள்ளையுடன் நீ வாழிய!
செல்வங்கள் பலபெற்று நீ வாழிய-எம்
செல்வமே, ரம்யாவே, நீ வாழிய!

  - உன் அன்புத் தந்தை
    கவிஞர் இராய.செல்லப்பா

14 கருத்துகள்:

  1. அழகான அருமையான கவி வரிகள் ஐயா...

    ரம்யா அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. தங்கள் அன்பையும்
    அன்பின் ஆழத்தையும்
    எழுத்தாக்கி
    ரம்யாவிற்கு
    எழுதிட்ட கவிதை
    ரம்மியம் அய்யா.

    ரம்யா அவர்களுக்கு
    பிறந்த நாள் வாழ்த்துக்கள்
    பாசமிகு தந்தைக்கும்
    வாழ்த்துக்கள் அய்யா

    பதிலளிநீக்கு
  3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  4. Wonderful lines! I am sure this would have been the best of all the gifts that akka received today!

    பதிலளிநீக்கு
  5. அன்புள்ள

    வணக்கம்.

    தங்கள் மகளுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழத்துக்கள்.

    எல்லா வளங்களும் எப்போதும் நீக்கமற நிறையட்டும்.

    மகள்மீது கொண்ட ஆசை மடடுமன்று பொறுப்பான அக்கறையும் கவிதைகளில் ஆழமாய்.

    ரசித்தேன்.

    ஏனென்றால் நானும் என் மகளுக்குத் தந்தையல்லவா?

    பதிலளிநீக்கு
  6. என் மகளுக்கு நான் எழுதிய வாழ்த்துக்கவிதைக்கு இவ்வளவு வரவேற்பா என்று ஆச்சரியமாக இருக்கிறது. ஒருவேளை, இதைப் படித்த பெற்றோர்கள் தத்தம் குழந்தைகளுக்குத் தங்கள் வாயால் சொல்ல நினைத்திருந்ததைத் தான் என் மனது கவிதையாக வெளிப்படுத்தியிருக்கிறதோ?
    வித்யா ரங்கசாயிக்கும் ஹரிணிக்கும் நன்றிகள்.
    எப்போதும்போல் எனக்கு ஊக்கமளித்துவரும் (உயர் ?)பதிவாளர்கள் திண்டுக்கல் தனபாலன், கரந்தை ஜெயக்குமார், உஷா அன்பரசு, ஹரணி ஆகிய அனைவருக்கும் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  7. கவிஞர் ஐயா அவர்களுக்கு வணக்கம். தங்களின் கவி​தை அரு​மை. மகிழ்ச்சி. வாழ்த்துக்கள். தங்கள் மகளாருக்கு எனது இதயம் நி​றைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள். வாழிய பல்லாண்டு..வாழிய நல​மோடு...வாழிய வள​மோடு வாழியக் கவித்தந்​தை.. வாழிய அவரன்பு.. வாழிய வாழிய வாழிய​வே... வாழ்த்துக்களுடன் ​சேதுராமன்.

    பதிலளிநீக்கு
  8. மிக்க நன்றி சேதுத்தென்றல் அவர்களே! மீண்டும் வருக.

    பதிலளிநீக்கு
  9. எங்கள் நாட்டு பொண்ணான தங்கள் மகளுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழத்துக்கள்.

    பதிலளிநீக்கு
  10. கவிதை என்று கூறிவிட்டு, தங்களின் மகளின்மீதான அன்பை இந்த அளவிற்கு வெளிப்படுத்தியதைப் பார்க்கும்போது தங்களின் அன்பின் ஆழத்தை அறியமுடிகிறது. ஆரம்ப கால கட்ட புகைப்படங்களில் தொடங்கி இன்று வரையுள்ள புகைப்படங்கள். அப்பப்பா. அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்.

    பதிலளிநீக்கு
  11. மிக்க நன்றி, (‘அவர்கள்-உண்மைகள்’) மதுரைத் தமிழரே! (‘சோழநாட்டில் பௌத்தம்’) டாக்டர் ஜம்புலிங்கம் அவர்களே! மீண்டும் மீண்டும் வருக!

    பதிலளிநீக்கு