திங்கள், ஜூன் 24, 2013

ஆவிகளுடன் சில அனுபவங்கள் (2)


 
இவ்வரிசையில் முந்தைய பதிவுகளைப் படிக்க:
ஆவிகளுடன் சில அனுபவங்கள்-1



நிழலாகத் தெரிவது ஆவியோ?

திண்ணையில் நான் வந்து படுத்துக்கொண்டபோது இரவு மணி ஒன்பதரை. தலைமாட்டில் என்னுடைய பள்ளிக்கூடப் பையையும் துணைக்கு வைத்துக்கொண்டேன். கடந்த மூன்று மாதங்களில் நடத்திய பாடங்களை மனதுக்குள் கொண்டுவந்து கேள்வி பதிலாக ‘ரிவிஷன்’ செய்தேன்.

இரவு கருமையாகப் படரத் தொடங்கியது.

பலமுறை நான் இரவில் திண்ணையில் படுத்து தூங்கி யிருக்கிறேன். அப்போதெல்லாம் படுத்த உடனே  தூக்கம் வந்துவிடும். சில சமயம் பூனைகள் மேலே விழுந்து போகும். அப்போதும் தூக்கம் கலையாமலேயே ‘உஷ்’ என்று விரட்டுவேன். அடுத்த நொடி ஆழ்ந்த தூக்கம் தான். சில சமயம் மழை வரும். காலையில் எழுந்து பார்த்தால் படுக்கை நனைந்து போயிருக்கும். ஆனால் தூக்கம் கலைந்ததில்லை. இன்றோ கண்கள் தூங்க மறுத்தன.
முக்கியமான ஒரு சந்தேகம் மனதில் எழுந்தது. அதாவது, கூர்க்காவுக்குத் தெரியாமல், வேதாளம் திடீரென்று எனக்கு முன்னால் வந்துவிட்டால்...? எனக்குத் தெரிந்து இந்தக் குட்டையின் அருகில் தான் சுமார் பத்து பன்னிரண்டு முருங்கை மரங்கள் இருக்கின்றன. மற்றபடி இருபது வீடுகள் தாண்டி பிள்ளையார்கோவில் அருகில் தான் முருங்கை மரங்களைப் பார்க்கலாம். வரப்போகும் வேதாளம் அனேகமாக இங்கிருந்து தான் வரக்கூடும் என்று தோன்றியது. அப்படியானால் அது என்னுடைய பாடங்களை எல்லாம் நன்றாகப் படித்திருக்குமோ? ஒரு முறைக்கு இருமுறை படித்திருக்குமோ? அப்படியானால் கடினமான கேள்விகளாக கேட்குமோ?
ஒரு நாள் என்னுடைய புத்தகப்பை பீரோவின் மேல் இருந்தது. படித்துவிட்டு அப்படியே தூங்கிவிடுவேன் என்பதால் பெரும்பாலும் தரையில் தான் கிடக்கும். அத்துடன், பீரோவின் மீது வைக்கும் அளவுக்கு நான் உயரமில்லை. எனவே புத்தகப்பை எப்படி அங்கு போய் உட்கார்ந்தது என்று தெரியவில்லை. இப்போது புரிகிறது, வேதாளம் தான் இடம் மாற்றி வைத்திருக்க வேண்டும். 
இன்னொரு நாள் பைக்குள் நான் வழக்கமாக வைக்கும் வரிசையில் இல்லாமல் புத்தகங்களும் நோட்சுகளும் மாறிமாறி இருந்தது ஞாபகம் வந்தது. அப்படியானால் அதுவும் வேதாளத்தின் செயல் தானா? ஒருநாள் என் ஜியாமெட்ரி பாக்சில் இருந்து ஒரு புது பென்சில் காணாமல் போனது. அம்மா அதைக் குட்டையின் அருகில் கண்டுபிடித்தார். அதுவும் வேதாளம் செய்த காரியம் தானா? நல்லவேளை நான் புதிதாக வாங்கியிருந்த ‘ரைட்டர்’ பேனாவை அது எடுக்கவில்லை.
எனக்குள் பயம் அதிகமாயிற்று. இருட்டைப் பற்றியல்ல. வேதாளத்தின் அறிவுக் கூர்மையைப் பற்றி. ஜியாமெட்ரி உள்பட அது எல்லாப் பாடங்களையும் படித்து வைத்திருந்தது என்றால் நிச்சயம் எனது கணக்கு ஆசிரியரை விட கடினமான கேள்விகளாக கேட்டுவிடக்கூடும். எப்படிப் பதில் சொல்லப் போகிறேனோ  என்ற பயம்.
திடீரென்று நாய் குரைத்தது. அது வேறு தெருவைச் சேர்ந்த நாயாக இருக்க வேண்டும். எங்கள் தெரு நாய் ஓடி வந்து எதிர்க்குரல் கொடுத்தது. அதற்குள் இன்னும் சில தெருக்களிலிருந்து பல நாய்களின் குரல் பலமாகக் கேட்டது. ஒன்றோடொன்று மேல்விழுந்தும் ஒன்றையொன்று துரத்திக்கொண்டும் அவை ஓடும் சப்தம் நாராசமாகக்  கேட்டது.    அதனால் தூக்கம் வருவது இன்னும் தள்ளிப் போயிற்று.
இப்போது எவ்வளவு மணி ஆகியிருக்கும் என்று தெரியவில்லை. மணிக்கொரு தடவை அடிக்கும் சுவர் கடிகாரம் அக்கம் பக்கத்தில் யார் வீட்டிலும் இருக்கவில்லை. எப்போதாவது ஒரு நாய் அழும் குரல் கேட்கும். ‘தாயம்மா வீட்டு நாய் அழுகிறது’ என்பார் அம்மா. தாயம்மா அடுத்த தெருவில் சிறு கடை வைத்திருந்தார். மிட்டாய், பெப்பெர்மிண்ட், கம்மர்கட், பொரி உருண்டை இம்மாதிரி சிறுவர்களுக்கான பண்டங்கள் மட்டும் விற்பார். எப்போதும் படுத்த படுக்கையாக இருப்பவர். ‘தாயம்மாவுக்கு நாள் நெருங்கிவிட்டது. அதனால் தான் நாய் அழுகிறது’ என்பார். யமன் வருவது நாய்களின் கண்ணுக்கு மட்டும் நன்றாகத் தெரியுமாம். சாகப் போகிறவர்களை யமன் ஒருமுறை முன்கூட்டியே பார்த்துவிட்டு வீட்டின் மேல் அடையாளம் போட்டுவிட்டுப் போவானாம். அதைப் பார்த்தவுடன் நாய் அழுமாம். மற்றபடி நாய்க்கு அழுகை வரவே வராதாம்.      
இப்போது ஒரு நாய் அழுவது போல் கேட்டது. ஆம், யமன் எங்கோ வருகிறான். எனக்கு உடல் சிலிர்த்தது. வேதாளமும் செத்துப் போய்ப் பிணமான ஒருவனின் உடல் தானே! ஒரு வேளை வேதாளம் வருவதைப் பார்த்து யமன் வருவதாக எண்ணி நாய் அழுகிறதோ?
எழுந்து உட்கார்ந்தேன். மறந்து போய்விடக் கூடாதே என்பதற்காக புத்தகப்பையைத் தோளில் மாட்டிக் கொண்டேன். வேதாளம் வரும் நேரம் போலும். கூர்க்காவின் விசில் சத்தம் ஏன் இன்னும் வரவில்லை என்று குழப்பமாக இருந்தது. தோராயமாகப் பார்த்தால் மணி பன்னிரண்டுக்கு மேல் ஆகியிருக்க வேண்டும். நடு இரவில் தானே வேதாளம் வரும் என்று கூர்க்கா சொன்னார்?
எழுந்தேன். கூர்க்கா, எங்கள் வக்கீல் தெரு சந்திலிருந்து பிள்ளையார் கோவில் வரை போகும் வழி எனக்கு தெரியும். போய்ப் பார்த்துவிடலாம் என்று தீர்மானம் செய்தேன். சிறிது தூரம் நடந்தேன். அப்போது தான் எனக்கு அந்த திடீர் யோசனை தோன்றியது. கூர்க்கா தான் விசில் கொடுக்கவில்லை, நான் விசில் கொடுத்து பார்த்தால் என்ன?
நாக்கை மடித்துக்கொண்டு மேலுதட்டுக்கும் கீழ் உதட்டுக்கும் இடைவெளி விட்டு ‘ஷ்..ஷ்...’ என்று ஓசை எழுப்ப முயன்றேன். அதற்கு முன் விசில் அடித்ததில்லை என்பதால் அதிக ஓசை வரவில்லை.  இரண்டு முறை ஒத்திகை பார்த்தபின் மூன்றாம் முறை விசில் நன்றாக, பலமாகக் கிளம்பியது. எனக்கே திருப்தியாக இருந்தது.  
அடுத்த நிமிடம் எங்கிருந்தோ பதிலுக்கு ஒரு விசில் சப்தம் வந்தது. சபாஷ்! கூர்க்காஜிக்கு நம் விசில் கேட்டுவிட்டது, பதில் விசில் கொடுக்கிறார் என்று மனதில் உற்சாகம் வரவே,  மீண்டும் ஒரு விசில் கொடுத்தேன். அவ்வளவு தான், நான்கைந்து விசில்கள் எனக்கு மிக அருகிலிருந்து கேட்டன. அது மட்டுமல்ல,  தட தடவென்று பலர் ஓடிவரும் ஓசையும் கேட்டது. சற்று நேரத்தில் பல டார்ச் லைட்டுகள் நாலா பக்கத்திலிருந்தும்  வெளிச்சம் பாய்ச்சின. எனக்கு ஒன்றும் புரியவில்லை. என்றாலும் அவர்களின் உடைகளைப் பார்த்தவுடன் போலீஸ்காரர்கள் என்று தெரிந்துவிட்டது. உடனே எனக்கு உதறல் எடுத்தது. கூர்க்கா என்ன ஆனார்?
ஒரு போலீஸ்காரர் என்னை அருகில் பிடித்து இழுத்தார். முகத்துக்கு நேராக டார்ச் வெளிச்சம் அடித்தார். தோளில் புத்தகப்பையுடன் நான் நிற்பதைப் பார்த்து அவருக்குக் குழப்பமாயிருந்த்து. “ நீ யார், இந்த இருட்டில் என்ன செய்கிறாய்?” என்று அதட்டினார்.
நல்ல வேளை, விசில் அடித்தது நீ தானா என்று கேட்கவில்லை. ஏதோ பதில் சொல்ல முயற்சித்தேன். ஆனால் ஏழெட்டு போலீஸ்காரர்கள் சுற்றிலும் இருக்கும்போது வார்த்தையே வரவில்லை. வாய் மட்டும் “கூர்க்கா...கூர்க்கா...” என்று உளறின மாதிரி இருந்தது.
“கூர்க்காவா? அப்படியானால் திருடர்கள் கூர்க்காவைத் துரத்திக்கொண்டு போனதை நீ பார்த்தாயா?” என்றார் போலீஸ்காரர்.
எனக்கு போலீஸ்பயம் இன்னும் நீங்காததால் மறுபடியும் “கூர்க்கா...கூர்க்கா..” என்றே உளறியபடி இருந்தேன்.
அதற்குள் இன்னொரு போலீஸ்கார்ர், “விடுங்க அண்ணே, சின்னப் பையன். டேய்! நீ எப்படி நடு ராத்திரியில் வெளியே வந்தாய்? அதுவும் புத்தகப் பையுடன்? எங்க ஒன் வீடு?” என்றார்.
சொன்னேன். திண்ணையில் படித்துக்கொண்டிருந்தேன், அப்படியே தூங்கிவிட்டேன் என்று ஏதோ சொன்னேன்.
“சரி, இனிமேல் இப்படித் தனியாக திண்ணையில் தூங்காதே. இந்த வழியாக கூர்க்கா போனதைப் பார்த்தாயா?”
இப்போது எனக்கு சற்று தைரியம் வந்தது. “ஆமாம் சார், ராத்திரி நான் படுக்கப் போகும் போது பார்த்தேன். தினமும் இந்த வழியாகப் போய், பிள்ளையார் கோவில் சந்துக்குப் போவார்” என்றேன்.
ஒருவர் மட்டும் எங்கள் சந்துக்குக் காவலாக நின்றுகொள்ள, மற்ற போலீஸ்காரர்கள் பிள்ளையார் கோவில் பக்கம் ஓடினார்கள். நான் விட்டால் போதும் என்று கதவைத் தட்டி வீட்டுக்குள் நுழைந்தேன்.
மறுநாள் கிடைத்த செய்தி இது.
கூர்க்கா வழக்கமாக காவல் காக்கும் பாதையில் இரவு சுமார் ஒரு மணிக்கு ஒரு வீட்டின் சுவர் ஏறி குதித்து சிலர் திருட முயன்றதைப் பார்த்திருக்கிறார். உடனே தன்னுடைய குறுவாளை உருவி எடுத்து “சோர்! சோர்!” என்று துரத்திக்கொண்டு ஓடியிருக்கிறார். வக்கீல் தெருவிலிருந்து வெகு தூரம் போன பின் திருடர்கள் இவரை நன்றாகத் தாக்கிவிட்டு தப்பிவிட்டார்களாம். ஆனால் அதற்குள் இவர் அவர்களில் ஒருவனைத் தன் குறுவாளால் குத்தி அதற்கு ரத்தம் காட்டிவிட்டாராம். இவர் கையெல்லாம் ரத்தம் வழிந்து கொண்டிருந்ததாம். அடிபட்ட கூர்க்கா தரையிலிருந்து எழுந்திருக்க முடியாமல் விசில் அடித்திருக்கிறார். இரவு ரோந்துக்கு வந்த போலீஸ்காரர்கள் விசில் வந்த திசையைத் தேடிக்கொண்டு எங்கள் தெரு பக்கம் வந்திருக்கிறார்கள்.....  
அப்புறம் பல நாட்கள் வரை குட்டையைச் சுற்றிலும் முருங்கை மரங்கள் இருந்தன. ஓர்  ஆடிக்காற்றில் எல்லாம் விழுந்துவிட்டன. வேதாளம் வேறு ஏதாவது முருங்கை மரத்திற்குத் தாவியிருக்கக்கூடும். விளக்கம் சொல்வதற்கு கூர்க்கா வரவில்லையே! அடிபட்ட காயம் ஆறுவதற்கு சில வாரங்கள் ஆகும் என்று முனிசிபல் ஆஸ்பத்திரியில் சொன்னார்களாம். அதனால் அவர் தன் ஊருக்கே போகிறேன் என்று நேபாளத்திற்குச் சென்றுவிட்டாராம். 
வேதாளத்தைப் பார்க்க முடியாமல் போனதை விட, நான் எல்லாப் பாடங்களையும் ரிவிஷன் செய்ததில் எந்தப் பலனுமில்லாமல் போனது தான் வருத்தமாக இருந்தது. அம்புலிமாமாவை மட்டும் விடாமல் படித்துக்கொண்டிருந்தேன்.
தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்தின் மீது ஏறி அதில் தொங்கும் உடலை வீழ்த்தினான். பின்னர் கீழே இறங்கி, அவன் அதைத் தூக்கிக் கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லுகையில், அதனுள் இருந்த வேதாளம் எள்ளி நகைத்து, "விக்கிரமா “ என்று பேச ஆரம்பிக்கும்....
****
ஆனால் முயற்சியுடையார் இகழ்ச்சியடையார் அல்லவா? ஆவிகளைத் தேடும் முயற்சியில் எனக்கு அடுத்த உதவியாக வந்தது ஒரு புத்தகம்.
அக்காலத்தில் சினிமா தியேட்டர் வாசலில் ‘பாட்டுப் புத்தகம்’ விற்பார்கள். பழுப்புத் தாளில் தெளிவில்லாத அச்சில் எட்டு முதல் பன்னிரண்டு பக்கம் உள்ள புத்தகம். அந்தப் படத்தில் வந்த சினிமாப் பாடல்களை, ‘இயற்றியவர், பாடியவர், இசையமைப்பாளர்’ பெயர்களோடு அச்சிட்டிருப்பார்கள். கதைச் சுருக்கமும் இருக்கும். ‘ஸ்ரீமகள் கம்பெனி’ என்ற பதிப்பகம் தான் பெரும்பாலும் பாட்டுப் புத்தகங்களை வெளியிடும். (பின்னாளில் வேறு பதிப்பகங்களும் வந்தன). சினிமாவுக்கு தரை டிக்கட் 25 காசு என்றால், இந்தப் பாட்டுப் புத்த்கங்கள் ஐந்து காசுக்குக் கிடைக்கும்.
அப்படி ஒருநாள், பாட்டுப் புத்தகம் ஒன்று வாங்கும்போது, ஸ்ரீமகள் கம்பெனியின் புதிய வெளியீடான ‘மலையாள மாந்திரீகம்’ என்ற புத்தகம் ஐம்பது பைசாவுக்குக் கிடைத்தது. ஐம்பது பைசா என்பது அப்போது பெரிய தொகை. இன்று இருபது ரூபாய்க்கு சமம். வாங்கிக் கொண்டு யாருக்கும் தெரியாமல் படிக்க ஆரம்பித்தேன்.
அதில் ஆவிகள் பற்றி விளக்கமாகப் போட்டிருந்தார்கள். ஆவிகளில் பலவகை உண்டு என்றும், குட்டிச்சாத்தான், வேதாளம், மோகினிப்பேய் மற்றும்  இறந்து போன முன்னோர்கள் என்று ஒவ்வொன்றையும் விவரித்திருந்தார்கள். ஒவ்வொன்றையும் எப்படிக் கட்டுப்படுத்தி நம் வழிக்குக் கொண்டு வருவது என்பது பற்றியும் அதற்கான பூஜை முறைகள் பற்றியும் தெளிவாக இருந்தன.
அதில் குட்டிச்சாத்தானை வசப்படுத்துவது மிகவும் சுலபம் என்றும், வசப்படுத்தினால் நமக்கு வேண்டிய உணவுப் பண்டங்களை அது எங்கிருந்தாலும் கொண்டுவந்து தரும் என்றும் இருந்தது. குறிப்பாக இனிப்பு சமாச்சாரங்கள் குட்டிச்சாத்தானுக்கு மிகவும் பிடிக்கும் என்றும், ஆனால், எதைச் சாப்பிட்டாலும் முதலில் அதில் சரிபாதியை “ஓம், க்ரீம், குட்டிச்சாத்தாய நம” என்று சொல்லி நாம் இருக்கும் இடத்திலேயே படைத்துவிட வேண்டும் என்றும் சொல்லியிருந்த்து. இல்லையென்றால் அது கோபித்துக்கொண்டு நாம் சாப்பிட உட்காரும்போது நம் தட்டிலிருந்து உணவுப் பண்டங்களை மறையச் செய்துவிடுமாம்.
கேரளாவில் அநேகமாக எந்த வீட்டிற்குப் போனாலும் விதவையான பாட்டிமார்கள் குட்டிச்சாத்தான் பூஜை செய்வதைப் பார்க்கலாமாம். ஆனால் அவர்கள் மூலம் இதைத் தெரிந்துகொண்டால் வாழ்நாள் முழுதும்  அவர்களை விட்டு வெளியில் வர முடியாதபடி நம்மைக் கட்டுப்படுத்தி விடுவார்களாம். எனவே நாமாகவே பூஜை செய்வது தான் சிறந்தது என்று எழுதியிருந்தார்கள்.
குட்டிச்சாத்தான் வசமான பிறகு நமக்குப் பிடித்தமான குருவிடம் போய் விஷயத்தை சொல்லி குருதட்சிணையாக ஒரு ரூபாயும், கால்படி அரிசியும், இரண்டு மாம்பழங்களும், ஒரு வேப்பிலை கொத்தும் கொடுத்து வணங்க வேண்டுமாம். ஆனால் குருவே கேட்டாலும் கூட தனக்கு எப்படி குட்டிச்சாத்தான் வசமானான் என்பதைச் சொல்லக் கூடாதாம்.
எப்படியும் இந்தக் கோடை விடுமுறையில் குட்டிச் சாத்தானை வசப்படுத்திவிடுவது என்று தீர்மானித்தேன்.....
(நாளை முடியும்)
இவ்வரிசையில் அடுத்த பதிவினைப் படிக்க:
ஆவிகளுடன் சில அனுபவங்கள் (3)

© Y.Chellappa

6 கருத்துகள்:

  1. எப்படியோ போலீஸ்கிட்ட அடி வாங்காம தப்பிச்சுட்டீங்க.
    அடுத்த பகுதிக்கு ஆவலாய் இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. ஒவ்வொரு வற்றின் திக் திக் தான்... தொடர்கிறேன்...

    பதிலளிநீக்கு
  3. பள்ளி நாள்களில் நானும் நண்பர்களும் எங்கள் தெருவில் இவ்வாறாக கதைகேட்டு பயந்து ஓடியது எனக்கு இப்போது நினைவுக்கு வந்துவிட்டது.

    பதிலளிநீக்கு
  4. திக் திக்.. ஆவலுடன் அடுத்தப் பகுதிக்காகக் காத்திருக்கின்றேன் அய்யா

    பதிலளிநீக்கு
  5. குட்டி சாத்தானை வசமாக்கிநேர்களா? அறிய ஆவல்.உங்கள் கற்பனை குதிரை
    நன்றாகவே பறந்து செல்கிறது. வேதாளத்திதம் கணிதப் பாடம் எல்லாம் கற்றுக் கொள்வீர்கள் போலிருக்கிறதே!
    தொடருங்கள்.....

    பதிலளிநீக்கு
  6. ஐயய்யோ! சிவ சிவா! உள்ளதைச் சொன்னால் கற்பனை என்கிறீர்களே! (உண்மை, கற்பனையை விட சுவையானது என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்களே, மறந்து விட்டீர்களா?)

    பதிலளிநீக்கு