வெள்ளி, மே 10, 2013

இயற்கையே நீ இன்று போனதெங்கே? (கவிதை)




காலை எழுந்ததும் ஓடிவரும்

காலையைச் சொல்லிடத் தேடி வரும்

காக்கா என்றே பாடி வரும்

காகமே, நீ இன்று போனதெங்கே ? (1)


சின்னதோர் மூக்கினில் தானியங்கள்

சித்திரம் போலள்ளிச் சென்றிடுவாய்,

பெட்டை யுடனே வட்டமிடும்

சிட்டுக் குருவி, நீ போனதெங்கே? (2)


கொய்யா மரத்தினில் செம்பழங்கள்

கொய்து கடித்தே வீசிடுவாய்,

வாதுமைக் காயும் சிவந்ததடி,

பச்சைக் கிளி , நீ போனதெங்கே? (3)


மல்லிகை முல்லையும் பூத்திருக்க

மலர்ந்தே ரோஜாவும் காத்திருக்க

வாடிக்கை மறத்தல் சரியாமோ,

வண்ணத்துப் பூச்சி, நீ போனதெங்கே? (4)


காடும் கழனியும் வீடாச்சு

நாடும் நகரமும் நஞ்சாச்சு,

ஏக்கத்தில் எங்களைத் தோயவிட்டே

இயற்கையே, நீ இன்று போனதெங்கே? (5)

-கவிஞர் இராய. செல்லப்பா

© Y.Chellappa
email:chellappay@yahoo.com
குறிப்பு:எனது இன்னொரு வலைப்பூவான செல்லப்பா தமிழ் டயரி படித்தீர்களா?

9 கருத்துகள்:

  1. வரிகள் அருமை... உண்மை...

    சிறப்பாக முடித்துள்ளீர்கள்... வாழ்த்துக்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
  2. மிக அருமையான பதிவு..
    இதே போன்று சிந்தனை..


    இனி மெல்லத் தொலைவோம்
    பனித் துளியை
    எழுப்பி விட்டு

    உல்லாச விருந்தாளியாய்
    உறக்கமிட்டது

    காலையில் தெளித்த
    பூச்சுக்கொல்லி.

    பதிலளிநீக்கு
  3. (தவறாமல் வருகை தரும்) திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும் (இன்று முதல் முறையாக வந்திருக்கும்) ஷண்முகம் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். ஷண்முகம் அவர்களே, சமுதாய நிகழ்வுகளைப் பொருத்தவரையில் எல்லாக் கவிஞர்களும் ஒத்த கருத்துடையவர்களே என்று தான் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  4. இயற்கையைத் தொலைத்து விட்டு செயற்கையாய் வாழ்கிறோம் அய்யா.

    பதிலளிநீக்கு
  5. காடும் கழனியும் வீடாச்சு

    நாடும் நகரமும் நஞ்சாச்சு,

    ஏக்கத்தில் எங்களைத் தோயவிட்டே

    இயற்கையே, நீ இன்று போனதெங்கே?

    அருமையான கவிதை வாழ்த்துக்கள்

    இரவும் பகலாய் மாறிவிடும்
    இயந்திர உலகின் வெளிச்சத்தில்
    இயற்கையை தொலைத்தே வாழ்கின்றோம்
    இனியவை தேடும் மாந்தர்களாய்...!

    பதிலளிநீக்கு
  6. சிந்திக்க தூண்டும் வரிகள் ! வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  7. அருமையான வரிகள் ஐயா...

    இயற்கையை துச்சமாய் எண்ணிடுகிறோம்
    செயற்கையை நாடி ஓடுகிறோம்
    அதற்கான பலனையும் அனுபவிக்கின்றோம்
    உணர்ந்து திருந்திடும் நாளும் எந்நாளோ??

    பதிலளிநீக்கு
  8. கவிதையை ரசித்ததுடன் கருத்துரைக்கவும் நேரம் செலவிட்ட நண்பர்கள் கரந்தை ஜெயக்குமார், சீராளன் (ஈழக்கவிஞர்), ராஸ் மோஹன்(குழந்தை நல மருத்துவர்), மாற்றுப்பார்வை(கவிஞரான வழக்கறிஞர்) மற்றும் தமிழ்முகில் பிரகாசம் ஆகியோருக்கு என் நன்றிகள்.

    பதிலளிநீக்கு