வியாழன், மே 02, 2013

மங்களூர் மனோரமா–2,3 (இறுதிப் பகுதி)


இவ்வரிசையில் முந்தைய பதிவினைப் படிக்க:
மங்களூர் மனோரமா –(1)
மங்களூர் மனோரமா–2


வெள்ளிக்கிழமை அரசு விடுமுறை வந்தால், சனிக்கிழமை ‘கேஷுவல் லீவு’ எடுப்பது மங்களூரில் பணியாற்றும் சென்னைக்காரர்களின் மரபு. வெள்ளி, சனி, ஞாயிறு மூன்று நாள் தொடர்ந்த விடுமுறை கிடைக்குமே! அது மட்டுமன்றி, சென்னை போகும் மெயில் பகல் இரண்டு மணிக்குக் கிளம்பும் என்பதால், வெள்ளிக்கிழமை விடுமுறையை வீணாக்காமல், முதல் நாளான வியாழக்கிழமையே ‘பர்மிஷன்’ வாங்கிக்கொண்டு கிளம்பும் வசதியும் உண்டு. பொதிமாடுகளுக்கு இம்மாதிரி சிறுசிறு சலுகைகள் வழங்குவதில் எஜமானர்கள் தயங்குவதில்லை.

அப்படியான ஒரு வியாழக்கிழமை சுபதினத்தில் பகல் இரண்டு மணிக்கு மங்களூர் ரயில் நிலையத்திற்கு வந்தேன். முன்பதிவு கிடைக்காததால், கடைசிப் பெட்டியில் ஏறிக்கொண்டேன். சென்னை சேரும்பொழுது காலை ஏழு மணி ஆகிவிடும். பரவாயில்லை. மூன்று நாட்கள் குடும்பத்தோடு இருக்கும் வாய்ப்பு கிடைக்குமே! ஞாயிறு இரவு திரும்பிவிடவேண்டும்.




சென்னைக்குப் பயண நேரம் பதினெட்டு மணி. மங்களூரிலிருந்து போதனூர் (அல்லது கோயம்புத்தூர்) ஒன்பது மணி. அங்கிருந்து சென்னை ஒன்பது மணி. (மங்களூர் மெயில் போதனூரில் நிற்கும். கோவை போகாது. இன்னொரு வண்டியான மங்களூர் எக்ஸ்பிரஸ், போதனூர் போகாது, கோவை வழியாகப் போகும். அப்பொதெல்லாம் இந்த இரண்டே வண்டிகள் தான், சென்னைக்கு. இப்போது நாலு வண்டிகள். நேரமும் பதினாறு மணியாகக் குறைந்துவிட்டது).

கடைசிப் பெட்டியில் எப்போதும் போல் மலையாளிகள் கூட்டம் அதிகம் இருக்கும். அதுவரை ரயில் நிலைய ஊழியர்களுடன் கதைத்துக் கொண்டிருந்துவிட்டு, வண்டி கிளம்பும் போது தான் திமிறிக் கொண்டு ஏறுவார்கள்.  மங்களூர், கர்னாடகத்தில் இருந்தாலும், ஊரில் பாதிப் பேருக்குமேல் மலையாளம் பேசுகிறவர்கள் தான். அதிலும், கோழிக்கோடு நான்கு மணி தூரத்தில் தான் இருந்ததாலும், ஒன்பது ரயில்கள் அந்த வழியாக ஓடுவதாலும், மலையாளிகளின் தொடர்ந்த போராட்டத்தினால் சின்னஞ் சிறு ஊர்களிலும் அவை நிற்கும் என்பதாலும், ரயிலில் பயணித்து மங்களூரிலும் அருகிலுள்ள ஊர்களிலும் வேலை செய்து திரும்பும் தினசரி ஊழியர்கள் மிகுதி. இவர்களில் எத்தனை பேர் டிக்கட் வாங்கிக்கொண்டு பயணம் செய்வார்கள் என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம். (சென்னையிலிருந்து காட்பாடி வரை போகிறார்களே, நம்மவர்கள், அதுபோலத் தான்!). டிக்கட் பரிசோதனையும் மலையாளிகளுக்கு இல்லை, மற்றவர்களுக்குத் தான். கோழிக்கோட்டுக்குப் பிறகு கூட்டம் கலைந்துவிடும். வண்டி காற்று வாங்கும்.

அன்று எனக்கு ஜன்னலோர இருக்கை கிடைத்தது. முற்பிறவிப் பயன். குறித்த நேரத்தில் வண்டி கிளம்பியது. டிக்கட் பரிசோதகர் வந்தார். அடிக்கடி அவரைப் பார்த்திருக்கிறேன். ரயில் சினேகம்.  எஸ்-4 கோச்சில் இடம் இருக்கிறதே, கஷ்டப்பட வேண்டாமே, தரட்டுமா என்றார். முப்பத்தைந்து ரூபாய் வாங்கிக்கொண்டு ரசீது கொடுத்தார்.  8ம் எண் இருக்கை. ஜன்னலோரம்.

கடைசிப் பெட்டியிலிருந்து எஸ்-4க்கு நடந்து செல்ல வழியில்லை. ஆகவே காசர்கோடில் இறங்கி மாறிக்கொண்டேன். (மங்களூருக்கு அடுத்த ஸ்டேஷன்). வங்கியிலிருந்து அவசரம் அவசரமாகக் கிளம்பியதால் பகலுணவுக்கு நேரமில்லை. வெஜிட்டபிள் பிரியாணி இருபத்தைந்து ரூபாய்க்கு வாங்கினேன். சாப்பிட்டுக் கை கழுவப் போகும்போது தான் அவளைப் பார்த்தேன். மனோரமா! மங்களூர்ப் பூக்காரி.

அவளும் அப்போது தான் சாப்பிட்டிருக்கவேண்டும். ஒழுங்கில்லாமல் மடித்த  பொட்டலத்தைக் குப்பைக்கூடையில் எறிந்துவிட்டு வாஷ்பேசினில் கைகழுவ வரிசையில் இருந்தாள்.

எதிர்பாராத சந்தர்ப்பம். சட்டென்று என்னைப் பார்த்தாள். ‘சார் நீங்களா? வணக்கம்’ என்றாள். எனக்கு வழிவிட்டாள்.

அவளுக்கு 7ம் எண் இருக்கை. ஜன்னலோரம். நேர் எதிரே எனது இருக்கை. 8ம் எண். இதுவும் ஜன்னலோரம். 1 முதல் 8 வரையான இருக்கைப் பிரிவில் எங்கள் இருவரைத் தவிர யாரும் இல்லை. வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது. நல்ல வேளை, மின்விசிறிகள் ஒழுங்காக ஓடின.   பகல் வெளிச்சத்தில் அவளை அப்போது தான் பார்த்தேன்.

பூக்காரியாக நான் பார்த்த உடையிலிருந்து மாறி வித்தியாசமாக இருந்தாள்.  முழங்கை வரை ரவிக்கை. நீல நிறத்தில் அதிகம் பூக்களில்லாத வாயில் சேலை. ஒரு கல்லூரி மாணவியைப் போல இருந்தாள். ‘பனியில்லாத மார்கழி’யில் வரும் தேவிகா மாதிரி. (ரொம்பப் பழைய உவமையோ?)

அவளிடம் பேசியாக வேண்டும். ஏன்  சிவராத்திரிக்குக் கடை போடவில்லை என்று கேட்கவேண்டும். ஐநூறு ரூபாய் விஷயம் கேட்க வேண்டும். அவன் யார், உனக்கும் அவனுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்க வேண்டும். எங்கிருக்கிறாய், இப்போது எங்கு போகிறாய் என்று கேட்க வேண்டும். எப்படிப் பேச்சை ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. ரயிலில் தனியாக வரும் இளம்பெண்களிடம் அதிகம் பேசி அனுபவமில்லையே.

அவளுக்கோ வாய் திறக்க அவசியம் இருந்ததாகத் தெரியவில்லை. ஜன்னல் வழியாக வெளியில் பார்த்துக்கொண்டு வந்தாள். கோழிக்கோடு வர இன்னும் மூன்று மணி நேரமாகும். அதுவரை வேறு யாரும் வண்டியில் ஏறப் போவதில்லை. எவ்வளவு நேரம் தான் ஒரே திசையில் ஓடும் மரங்களையும், மின்கம்பங்களையும், வயல் வெளிகளையும் காம்பவுண்டு சுவர்களில் கதிர்-அறுவாள் சின்னத்துடன் மலையாளத்தில் எழுதிய வாசகங்களையும்  பார்த்துக் கொண்டிருப்பாள்? அவளாகவே பேசித்தானாக வேண்டும். பொறுமையாக இருந்தேன்.

திடீரென்று வண்டி நின்றது. ‘ஏன்’ என்பதுபோல் என்னைப் பார்த்தாள். ‘இங்கு இதெல்லாம் சகஜம். தங்கள் வீடு வந்தால், சங்கிலியை இழுத்துவிட்டு இறங்கி விடுவார்கள். அதிகாரிகளும் கண்டு கொள்ள மாட்டார்கள். கொஞ்ச நேரத்தில் கிளம்பி விடும்’ என்றேன்.

அவள் முகத்தில் புன்னகை அரும்பியது. ‘க்ளோஸ்-அப்’ பற்பசை உபயோகிப்பாள் போலும். ‘இது அநியாயம் இல்லையா? எவ்வளவு பேருக்குத் தாமதம் ஏற்படும்?’ என்றாள்.

அவளே வார்த்தையை எடுத்துக் கொடுக்கிறாள். இது தான் நல்ல சமயம் என்று அவள் முகத்தைக் கூர்ந்து கவனித்தபடி, ‘உலகத்தில் எவ்வளவோ அநியாயங்கள் நடக்கிறது’ என்று சொல்லிவிட்டு, வேண்டுமென்றே ஜன்னலுக்கு வெளியே பார்க்கலானேன்.

பட்டாம்பூச்சி மாதிரி இமைகள் படபடக்க, ‘நீங்கள் எதைச் சொல்கிறீர்கள்? ‘ என்று தயக்கத்துடன் கேட்டாள். அதற்குள் வண்டி கிளம்பி விட்டது.

‘எவ்வளவோ இருக்கிறது. அதனால் என்ன, வண்டி கிளம்பி விட்டதல்லவா? விடுங்கள்’ என்றேன். திரும்பவும் ஜன்னலுக்கு வெளியில் பார்த்தேன். எல்லா மின்கம்பங்களிலும் ‘பாரகன்’ செருப்பு விளம்பரம். மழைக்காலத்திற்கென்றே வருவது.

முகத்தில் எழுந்த ஏமாற்றத்தை மறைக்க விரும்பாமல், ‘இல்லை, நீங்கள் ஏதோ சொல்ல வந்தீர்கள் என்று நினைக்கிறேன்..’ என்றாள் மனோரமா.

‘அதெல்லாம் ஒன்றுமில்லை..’ என்று அலட்சியமாகக் கூறிவிட்டு ஜன்னலுக்கு வெளியே பார்க்கத் தொடங்கினேன். இப்போது விளம்பரங்கள் மாறியிருந்தன. பாரகன் செருப்புக்குப் பதில், கோழிக்கோடு கோல்டன் ஜவுளிக்கடை.  கொஞ்சம் விட்டு தான் பிடிக்க வேண்டும் இவளை. அப்போது தான் விஷயத்தைக் கறக்க முடியும்.

அடுத்த நிமிடம், அவளுடைய முகபாவனையே மாறிவிட்டது. மலர்ந்த முகம், சோகத்தில் மூழ்கத் தயாராவது போல் தோன்றியது. ‘எல்லாம் என் துரதிர்ஷ்டம். என்னைப் பார்த்தாலே யாரும் பேச விரும்புவதில்லை’ என்று முனகியது கேட்டது. தலையை மெல்ல குனிந்து கொண்டாள்.

அந்த நேரம் பார்த்து ஒரு ரயில்வே விற்பனையாளர்,  ‘மசால் வடா..ஆ.ஆ.., காப்பி...இ....இ’ என்று  வந்தார். ‘வேண்டுமா?’ என்று கண்களை மேலுயர்த்தினேன். ‘வேண்டாம்’ என்பது போல் பார்த்தாள். அதைப் பற்றிக் கவலைப்படாமல், ஆளுக்கொரு வடையும் காப்பியும் சொன்னேன். பர்ஸை எடுத்தேன்.. நூறு ரூபாய் நோட்டு வந்தது. அடுத்த கணம் அவள் முகத்தில் பழைய மலர்ச்சி வந்துவிட்டது. கண்களில் கொஞ்சம் விஷமமாக, ‘அதானே பார்த்தேன், உங்களிடம் சில்லறை ஏது? நூறு ரூபாய் நோட்டு தானே இருக்கும்?’ என்றாள்.

அது போதாதா எனக்கு? வழிக்கு வந்து விட்டாள். நேரிடையாகக் கேட்டுவிடலாமா என் சந்தேகங்களை? காப்பி விற்பவர் சில்லரை கொடுத்து நகர்ந்தார். நாங்கள் இருவர் தான் மீண்டும். அவளுடைய கண்களைக் கூர்ந்து பார்த்தேன்.

‘நான் பரவாயில்லை, சிலரிடம் ஐநூறு ரூபாய் நோட்டு தானே இருக்கும்?’ என்றேன் கண்ணில் அதே விஷமத்தோடு. இந்தக் கொக்கியில் எப்படியும் அவள் மாட்டிதான் ஆகவேண்டும்.

‘ஆனால் அவர்கள் மீதிச் சில்லறை கேட்க மாட்டார்களே’ என்றாள், தன்னிச்சையாக. அடுத்த நிமிடமே ஏன் சொன்னோம் என்பது போல் உதடுகளைக் கடித்துக் கொண்டது போலிருந்தது. மலர்ந்த முகம் மீண்டும் சோகத்தை நோக்கி நகருவதாகத் தோன்றியது. தலை குனிந்துகொண்டாள்.

‘அது தெரியும். ஒவ்வொரு தடவையும் ஐநூறு கொடுத்துவிட்டு மீதிச் சில்லரை வாங்காமலே போனால் அதற்கு என்ன அர்த்தம்?’ என்றேன். அவளை நேருக்கு நேராக, இன்னும் தீர்க்கமாக நோக்கிக் கொண்டு.

அதிர்ச்சியோடு தலை நிமிர்ந்தவள், என் பார்வையைச் சந்திக்கக் கூசியவளாக மீண்டும் குனிந்து கொண்டாள். மௌனமாக இருந்தாள். சில நிமிடங்கள் கழிந்தன. சரியான தருணம் வந்துவிட்டது என்று தோன்றியது. நிச்சயம் ஏதோ ரகசியம் இவர்களிடம் இருக்கிறது. அதைக் கண்டுபிடிக்காமல் விடப் போவதில்லை.

‘மௌனமாக இருந்தால் என்ன பொருள்?’ என்றேன்.

அவள் சேலைத் தலைப்பைக் கண்களில் படர விட்டாள். ஓ, அழுதிருக்கிறாளோ? ‘ப்ளீஸ், மனோரமா, அழாதீர்கள்’ என்றேன். மிக அருகில் தான் இருந்தாள். நினைத்திருந்தால் நானே அவள் கண்ணீரைத் துடைத்திருக்க முடியும். ஆனால் பாழும் தமிழ்ப் பண்பாடு தடுக்கிறதே!

மனோரமா என்ற பெயரைக் கேட்டதுமே வெகுண்டவள் போல எழுந்து நின்றாள். ‘என் பெயர் மனோரமா என்று யார் சொன்னார்கள்?’ என்றாள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. மனோரமா என்று தானே அன்று காதில் விழுந்தது?

‘மங்களூரில் பூக்காரிகளுக்குப் பொதுவாக மனோரமா என்று தான் பெயர். நான் பூக்காரி அல்ல. இன்னொருமுறை மனோரமா என்றால் கெட்ட கோபம் வரும்’ என்று கோபமாகவே சொன்னாள். ‘எங்கம்மா எனக்கு வச்ச பேர், சித்ரா’ என்றாள்.

கோபத்திலும் அவள் அழகாக இருந்தாள். புகை படிந்த சித்திரம் போலிருந்தாள் என்று அசோகவனத்துச் சீதையைக் கம்பன் வர்ணிப்பது ஞாபகம் வந்தது. சித்ரா என்று பொருத்தமாகத்தான் பெயர் வைத்திருக்கிறார்கள்.

‘அப்பாடா, இப்போதாவது ஒரு உண்மையைச் சொன்னீர்களே, நன்றி’ என்றேன்.

புருவத்தைச் சுருக்கிக்கொண்டு, ‘ஏன், நான் இதற்கு முன் பொய் சொல்லியிருக்கிறேனா?’ என்றாள்.

‘அப்படியில்லை. உண்மையைச் சொல்லாமல் இருந்தாலே அது பொய் மாதிரி தானே?’

‘எல்லாவற்றையும் எல்லாரிடமும் சொல்லிவிட முடியாதல்லவா?’ கொஞ்சம் ஜாக்கிரதையாகப் பேசினாள்.

‘உண்மை தான். ஆனால் நூறு ரூபாய் நோட்டு கொடுப்பவனிடம்  ஐநூறு ரூபாய் நோட்டு கொடுப்பவனைப் பற்றிச்  சொல்லலாம் இல்லையா? மாதாமாதம் சிவராத்திரிக்கு மட்டும் ஏன் பூ விற்க வேண்டும் என்பதையும் விளக்கலாம் இல்லையா? போன மாதம் ஏன் வரவில்லை என்பதைத் தெரிவிக்கலாம் இல்லையா?’ என்று குரலில் நெகிழ்ச்சியோடு கேட்டேன்.

அவள் கொஞ்சம் இளகி வருவதுபோல் தெரிந்தது. விட்டுவிடக் கூடாது. பிடித்துக் கொள்ளவேண்டும். சற்று நெருங்கி, ‘நீங்கள் தவறாக நினைக்கவில்லை என்றால் ஒன்று சொல்லட்டுமா?’ என்றேன்.

சஸ்பென்சைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆவல் அவள் கண்ணில் புலப்பட்டது.  ‘ஆனந்தஜோதி படத்தில் வரும் தேவிகா மாதிரியே இருக்கிறீர்கள்’ என்று சொல்லி முடிப்பதற்குள் லேசாக வியர்த்துவிட்டது.

அவ்வளவு தான். அடிபட்ட வேங்கை போலத் துள்ளி எழுந்தாள். ‘எங்கே இன்னொரு தடவை சொல்லுங்கள்’.

அவளது வேகமும் கோபமும் எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. அவள் நின்ற வேகம் கை நீட்டி அடித்து விடுவாள் போல் தோன்றியது. ‘இல்லை, நீங்கள் ஆனந்தஜோதி தேவிகா மாதிரி இருக்கிறீர்கள்...’ என்றேன்.

‘அதனால் தான் கேட்கிறேன். நானும் பாஸ்கரும் ஆனந்தஜோதி படம் பார்த்தது உங்களுக்கு எப்படித் தெரியும்?’

ஓஹோ, அப்படியானால் அவன் பெயர் பாஸ்கரா? சினிமாவிற்குப் போகிற அளவுக்கு நண்பரா? ஒரு சுவாரஸ்யமான கதை இவளிடம் இருக்கிறது. முழுதாகக் கேட்டுத் தெரிந்து கொண்டால், எதிர்காலத்தில் எனது நினைவலைகள் எழுதும்போது பயன்படுத்திக் கொள்ளலாம்.

‘மேலே சொல்லுங்கள்’ என்றேன்.

அதற்குள் அவள் சுதாரித்துக் கொண்டுவிட்டாள். தேவையில்லாமல் தகவல்களைக் கக்கி விட்டோமோ என்று மருண்டாள். அப்போது தான் அவள் கழுத்தைப் பார்த்தேன். கால் விரல்களையும் பார்த்தேன். நிச்சயம் திருமணம் ஆகவில்லை. ஆக, இது வெறும் காதல் விஷயம் தான்.

அவள் மௌனமாக இருந்தாள். பிறகு, ‘இல்லை, அவருடன் நான் சினிமாவுக்குப் போகவில்லை’ என்றாள். அவளுக்குப் பயம் வந்துவிட்டது என்று எண்ணினேன்.

அவளை இன்னும் சற்று நெருங்கி, ‘சித்ரா! எதற்காகப் பயப்படுகிறீர்கள்? உங்கள் காதலைப் பெற்றோர்கள் விரும்பவில்லையா?’ என்றேன். அதற்கு முன் அவர்கள் இருவரையும் மனக் கண்ணில் அருகருகே நிற்க வைத்து ஜோடிப் பொருத்தம் எப்படி இருக்கிறது என்று கற்பனை செய்தேன். நல்ல பொருத்தம் தான். நிறம், உயரம், வடிவமைப்பு எல்லாமே பொருந்தி வந்தது. எந்தப் பெற்றோரும் இந்த ஜோடியை வெறுக்க முடியாது.

ஆனால் சித்ரா மேற்கொண்டு எதையும் சொல்ல முன்வரவில்லை. மெல்ல அழுது கொண்டே இருந்தாள். சற்று நேரம் ஆனதும் தன் அழுகையை யாரும் பார்த்து விடாமல் முந்தானையால் முகத்தைப் போர்த்திக்கொண்டு, ‘அந்தப் படம் பார்த்ததிலிருந்து, நீ தேவிகா மாதிரியே இருகிறாய் என்று சொல்லிக் கொண்டே இருப்பார். இப்போது தேவிகா மாதிரியே நான், நினைக்கத் தெரிந்த மனமே பாடும்படி ஆகிவிட்டது’ என்றாள்.

அவளைச் சமாதானப்படுத்தி, விடாமல் வற்புறுத்திக் கொண்டே வந்ததில், கிடைத்த விவரம் இது தான்.

மங்களூர் மனோரமா -3

பாஸ்கர், ஈரோட்டைச் சேர்ந்த இளைஞன். ஃபைனான்ஸ் கம்பெனி நடத்துகிற குடும்பம். ஈரோட்டுக்காரர்கள் மங்களூரிலும் இருந்ததால் அவர்களுக்குக் கந்துவட்டிக்குப் பணம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். பண வசூலுக்காக வாரம் ஒருமுறை பாஸ்கர் வருவான். இளங்கலை படித்திருந்தான்.

தாய் தந்தை இல்லாத குடும்பம் சித்ராவுடையது. அவளும் அண்ணன் மாதவனும் தான். மங்களூரில் வேர்க்கடலை உருண்டை தயாரித்துக் கடைகளுக்கு விற்கும் தொழிலில் இருந்த சித்தப்பா வீட்டில் வசித்து வந்தார்கள். அவருக்குக் குழந்தைகள் இல்லை என்பதால் இவர்கள் மேல்  பாசமாக இருந்தார். சித்தியும் அன்பானவர். சித்ராவுக்குப்  பத்தாம் வகுப்புக்கு மேல் படிப்பில் நாட்டமில்லாமல் போயிற்று. அதனால் வீட்டிலிருந்தபடியே தொழிலில் பலவகையிலும் ஒத்துழைப்பு தந்தாள்.

என்ன தான் முயன்றாலும் சித்தப்பாவின் வியாபாரத்தில் பெரிய வளர்ச்சி இல்லை. இன்னும் சில வருடங்களில் சித்ராவின் திருமணத்திற்குப் பெரிய தொகை வேண்டுமே! கூடுதலாக ஏதாவது தொழில் செய்யலாமா என்று யோசித்துக் கொண்டிருந்த போது தான் பாஸ்கர் குடும்பத்தினரின் அறிமுகம் கிடைத்தது.

அதே சமயம் துபாயிலிருந்து ஒரு நண்பர் அங்கு இதே போன்ற தொழில் செய்யும் பெரிய முதலாளி ஒருவருக்குத் திறமையான உதவியாளர் தேவைப்படுவதாகவும் நல்ல சம்பளம் கிடைக்குமென்றும், தான் சொல்லும் நபரிடம் அறுபதாயிரம் ரூபாய் கொடுத்தால் ஒரு மாதத்தில் விசா வாங்கி அனுப்புவதாகவும், சித்ராவின் திருமணத்திற்குப் பணம் சேர்க்க இதைத் தவிர வேறு நல்ல வழி கிடைக்காதென்றும் தொலைபேசியில் சொன்னார்.

உடனே ஈரோட்டுக்குப் போய் பாஸ்கர் குடும்பத்தைப் பார்த்து அறுபதாயிரம் ரூபாயைக் கந்துவட்டியில் வாங்கிக் கொடுத்துவிட்டு துபாய் போய்ச் சேர்ந்தார் சித்தப்பா. அது மட்டுமா, மூன்றே மாதத்தில் அவளுடைய அண்ணனுக்கும் விசா வாங்கிக் கொடுத்தார். இருவருக்கும் துபாயில் ஒரே கம்பெனியில் வேலை.

சித்ராவும் அவள் சித்தியும் முதலில் பயந்தார்கள். துபாயில் வேலை என்று பலபேர் ஏமாற்றப்பட்டிருப்பது அவர்களுக்குக் கிலியை உண்டாக்கியது. ஆனால், இவர்கள் இருவரும் நல்லவிதமாகப் போக முடிந்தது மட்டுமன்றி, இரண்டு சம்பளங்கள் ஒழுங்காக அவளுடைய வங்கிக் கணக்கிற்கு வந்து சேர்ந்த பிறகு தான் நிம்மதி ஏற்பட்டது.

கந்துவட்டி வசூலுக்காக வந்தபோது தான் பாஸ்கரை அவள் முதல்முறையாகப் பார்த்தாள். பார்த்த நிமிடமே அவனிடம் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டு விட்டது. அவனுக்கும் அவளிடம் அதே ஈர்ப்பு வந்திருக்கவேண்டும். அறுபதாயிரம் ரூபாய்க் கடனுக்கு அவள் திருப்பிச் செலுத்த வேண்டிய தொகை வாரம் ஒன்றுக்கு இரண்டாயிரம் வீதம் அறுபது வாரங்கள். வேர்க்கடலை வியாபாரம் தொடர்ந்து நடந்து கொண்டிருந்ததாலும், துபாயிலிருந்து பணம் வருவதாலும் பாஸ்கருக்குரிய தொகையைக் குறிப்பிட்ட நாளன்று திருப்பிச் செலுத்துவதில் சித்ராவுக்கு எந்த சிரமமும் இருக்கவில்லை. பாஸ்கரின் வசூல் ஒழுங்காக நடந்து கொண்டிருந்தது. சித்ரா மீது அவனையறியாமலேயே மிகுந்த மதிப்பும் மரியாதையும் ஏற்பட்டிருந்தது. தன்னை விடவும் இளையவளான, தாய் தகப்பனற்ற ஒரு பெண் இவ்வளவு பொறுப்புடன் நடந்துகொள்வது அவனுக்குப் பிரமிப்பாக இருந்தது.

ஆனால் மனித வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் சேர்ந்து தானே வரும்? துபாயில் அரசகுடும்பத்தைச் சேர்ந்த இருபிரிவினரில் செல்வாக்கில்லாத ஒரு பிரிவினருக்கு வேண்டியவராய் இருந்தார், சித்தப்பாவின் முதலாளி. அதனால் பொய் வழக்கில் சிக்கவைக்கப்பட்டு சிறைக்குப் போகவேண்டிவந்தது. அவருடைய தொழில் நசிந்துபோய், சித்தப்பாவும் இவள் அண்ணனும் வேலையிலிருந்து நீக்கப்பட்டார்கள். ஆனால் முதலாளி வசமிருந்த  அவர்களது பாஸ்போர்ட்டுகள் என்ன ஆயினவென்று யாருக்கும் தெரியவில்லை. அதனால் வேறு வேலையில் சேரமுடியாமலும் திரும்பி இந்தியா வர முடியாமலும் சிலமாதங்கள் தலைமறைவாக இருந்தார்கள். பிறகு  சில நல்லவர்கள் முயற்சியால் சிறைக்குப்போன முதலாளி விடுதலை ஆனார். ஆனால் அதற்கு அவர் மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டிவந்தது. அவருடைய லாபகரமான தொழிலை அப்படியே ஒரு போட்டியாளருக்கு எழுதிக்கொடுத்தார். கிடைத்த சொற்ப தொகையில் வேறொரு தொழிலை இப்போது தான் ஆரம்பித்திருக்கிறாராம். மீண்டும் சித்தப்பாவும் அண்ணனும் அவரோடு சேர்ந்து விட்டார்களாம். ஆனால் கிட்டத்தட்ட ஒரு வருடமாக அங்கிருந்து இவளுக்கு ஒரு பைசாவும் வரவில்லை.

இந்த விஷயங்களைத் தெரிந்து கொள்வதற்கே ஆறு மாதம் ஆனது சித்ராவுக்கு. அவர்களின் முகவரியும் தெரியாது. கொடுத்த தொலைபேசி எண்ணும் வேலை செய்யவில்லை. வங்கியில் அடிக்கடி போய் ஏதாவது பணம் வந்திருக்கிறதா என்று பார்த்தால் ஒன்றுமில்லை. வாரா வாரம் பாஸ்கரோ அவரது கூட்டாளிகளோ வந்து கேட்கும்போது சுளையாக இரண்டாயிரம் எங்கிருந்து வரும்? வங்கியில் இருந்ததெல்லாம் கரைந்து போயிற்று. வேர்க்கடலையில் வரும் பணம் வீட்டுச் செலவு போகச் சில வாரத் தவணைக்கே போதுமானதாயிருந்தது. அது மட்டுமல்ல, அவளுடைய தொழிலில் முதல் போடுவதற்கும் கையில் பணமில்லாமல் போயிற்று. அதனால், வீட்டிலிருந்து தொழில் செய்வதை விட்டு, முதலாளியிடமே கூலிக்குச் சேரவேண்டி வந்தது.

கந்துவட்டிக்காரர்கள் என்றாலே கொடூரமானவர்கள் என்பது சித்ராவுக்கு அப்போது தான் தெரிய வந்தது. இரண்டாவது தவணை தாமதமான உடனே, அவளுடைய சித்தப்பா பெயரிலிருந்த வீட்டை எழுதி வாங்கிக் கொண்டு இவளைப் பலவந்தமாகக் காலி செய்துவிட்டார்கள். மாதம் ஐநூறு ரூபாய்க்கு ஒரு ஒதுக்குப்புறமான பகுதியில் வாடகைக்குப் போனார்கள். சித்தி உடல் நலமற்றுப் போனார். சித்ரா இரண்டு மடங்கு உழைக்கத் தொடங்கினாள். காலையும் மாலையும் பூ விற்க முடிவு செய்தாள். மங்களாதேவி கோயிலில் நல்ல வியாபாரம் ஆகும் என்று சொன்னார்கள். ஆனால் அங்கு நடைபாதையில் கடை போடுவதற்கு முன்பணமாக இருபதாயிரம் ரூபாய் ஒரு அரசியல்வாதிக்குத் தரவேண்டுமாம். மற்றபடி, தின வாடகையாக இருபத்தைந்து ரூபாய் தரவேண்டும். பூ கொள்முதலுக்கு முன்பணமாக இரண்டாயிரம் ரூபாய் வேண்டும். இதற்கு அவள் எங்கு போவாள்?

மங்களூர் வசூலுக்கு வரும் பாஸ்கர் கடந்த ஆறு மாதங்களாக ஏனோ வரவில்லை. அவனை மைசூர் பக்கம் அனுப்பி விட்டாராம் அண்ணன். ஆகவே சித்ராவுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அவளுக்கு இப்போது பண உதவி செய்ய முன்வரப் போகிறவர்கள் யார்?
****
கல்லூரியிலிருந்து இப்போது தான் தொழிலுக்கு வந்தவன், பாஸ்கர். அதுவும் கொஞ்சம் கூட விருப்பமில்லாமல் தான். கந்துவட்டி என்றாலே சமூகத்தில் மரியாதையில்லாத தொழில் என்று ஆகிவிட்டபடியால் அதிலிருந்து எப்படியாவது விலகி வேறு தொழிலுக்குப் போய்விட வேண்டுமென்று தீவிரமாக இருந்தான். ஆனால் அண்ணன் விடுவதாக இல்லை. அவராகப் பிரித்துக் கொடுத்தாலொழிய இவன் பெயரில் எந்த சொத்தும் வங்கிக்கணக்கும் இல்லை. அண்ணனுக்கு இரண்டு பெண் குழந்தைகள். தந்தையின் மரணத்திற்குப் பிறகு தொழிலின் மொத்த நெளிவு சுளிவுகளும் அவருக்குத் தான் அத்துபடி. அப்பா இருக்கும் போதே அடியாட்கள் முதல் போலீஸ் வரை அவருக்குத் தான் கட்டுப்படுவார்கள். ஆகவே கந்துவட்டித் தொழிலில் தொடர்ந்து இருக்க வேண்டுமென்றால் ராமனுக்குப் பரதன் மாதிரி தான் இருந்தாக வேண்டும்.

பாஸ்கருக்கும் சித்ராவுக்கும் இருந்த உறவு கடன் கொடுத்தவருக்கும் வாங்கியவருக்குமான உறவு தான். மனதிற்குள் அவள் மீது காதலை வளர்த்துக் கொண்டிருந்தானே தவிர, அதை வெளிப்படையாக அவளிடம் சொல்லியதில்லை. திருமணம் என்று வந்தால் சித்ரா மாதிரியான ஒரு அனாதையான படிக்காத ஏழைப்பெண்ணை அவனுக்குக் கட்டிவைக்க அண்ணன் ஒருநாளும் சம்மதிக்க மாட்டார். அண்ணனைப் பகைத்துக்கொண்டு இவளை மணந்துகொள்ளும் அளவுக்குச் சொந்தக்காலில் நிற்கும் பலம் இன்னும் வரவில்லையே! அதனால் பொறுமையாக இருந்தான். சித்ராவைப் பார்க்கும் பொழுதெல்லாம் தன்னை அறியாமல் ஒரு புல்லரிப்பு ஏற்படுவதையும், பாரதிராஜா படம் மாதிரி வெள்ளைத் தேவதைகள் வந்து மலர் தூவுவது போன்ற  இன்ப அதிர்வு உண்டாவதையும் அவன் உணராமலில்லை. அவளுக்கும் அதே மாதிரி எண்ணம் இருப்பதையும் அவனால் புரிந்து கொள்ளமுடிந்தது.

கந்துவட்டிக்குப் பணம் வாங்கிய சில குடும்பத்தினர், தவணை தவறி விடும்போது, வசூலுக்குப் போன ஆண்களை வழிதவறிவிடப் பண்ணியதையும் அதனால்  பல குடும்பங்களில் தீராத சிக்கல்கள் ஏற்பட்டு விட்டதையும் அண்ணன் சொல்லியிருக்கிறார். ஒழுக்கம் மிகவும் முக்கியம், ஒழுக்கம் இல்லாத இடத்தில் மகாலட்சுமி குடியிருக்கமாட்டாள் என்று அடிக்கடி சொல்வார். அதனால் பாஸ்கர் எப்போதுமே பெண்களிடம் மிகவும் தள்ளி நின்றே  பேசுவான். அந்தக் காரணத்தினால் சித்ராவுக்கு அவனிடம் நெருக்கமாக எதையும் பேசுகிற அளவுக்குச் சந்தர்ப்பங்கள் கிட்டவில்லை. அது மட்டுமன்றி, பாஸ்கர் வரும்போதெல்லாம் அவனுடைய அடியாள் ஒருவனும் சற்று தொலைவில் நிற்பதுண்டு.
****
மைசூரிலிருந்து பாஸ்கர், மங்களூர் வந்தான். அது திடீர் ‘விசிட்’. கொஞ்சம் அகராதியான அரசியல்வாதி ஒருவரைச் சந்தித்து பாக்கி வசூல் செய்யவேண்டிய காரியம். நீண்டநாள் பாக்கி. இப்போது பகைத்துக் கொண்டால் நாளை அவரால் ஆகவேண்டிய காரியங்கள் தடைப்படலாம். எனவே கொஞ்சம் பவ்வியமாக அணுக வேண்டுமென்று அண்ணன் சொல்லியிருந்தார்.

தொழிலுக்கு வந்த ஒரே வருடத்தில் முக்கிய உபாயங்களையும் தந்திரங்களையும் பாஸ்கர் தெரிந்து கொண்டு விட்டான். ஆனால் ஒவ்வொரு மனிதனும் ஒரு தீவு தானே! ஆளுக்குத் தகுந்த புது உபாயத்தைக் கையாண்டாலன்றி தொழிலில் வெற்றி இல்லையே. கற்றுக்கொள்ள வேண்டியது இன்னும் நிறைய இருந்தது, அவனுக்கு.

அந்த அரசியல்வாதியைச் சந்தித்து வெற்றிகரமாக ஒரு பெரிய தொகையை வசூல் செய்துவிட்டான் பாஸ்கர். அண்ணனால் நம்பவே முடியவில்லை. பணத்தைக் கையில் கொண்டு வர வேண்டாம்,  மறுநாள் வங்கியில் கட்டிவிட்டு வந்தால் போதும் என்றார். எனவே இரவு மங்களூரில் தான் தங்க வேண்டும்.

திடீரென்று வந்ததால், அவன் வழக்கமாகத் தங்கும் ஓட்டலில் அறை காலி இல்லை. கடைசியில் கதிரியில் ஒரு ஓட்டலில் இடம் கிடைத்தது. வராது என்றிருந்த தொகை வசூலானதில் மனம் குதூகலத்தில் ஆழ்ந்திருந்தது. அறைக்குப் போய்க் குளித்துவிட்டு, சித்ராவைப் பார்க்க எண்ணி அவள் வீட்டுக்குப் போன போதுதான் நடந்த விஷயங்கள் தெரிய வந்தன. தான் மேற்பார்வை செய்துவரும் மங்களூர்க் கணக்குகளில் தனக்குத் தெரியாமலேயே அண்ணன் மற்றவர்களை ஈடுபடுத்தியது அவனுக்கு மிகவும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.  குடியிருந்த  வீட்டை எழுதி வாங்கிக்கொண்டு ஆதரவற்ற ஓர்  இளம்பெண்ணை நடுத்தெருவுக்குக் கொண்டுவந்த தன்  தொழில்மீது அவனுக்கு மீண்டும் வெறுப்பு வந்தது. எப்படியாவது அவளைப் பார்த்துவிட வேண்டுமென்று தனது அடியாளுக்குப் போன் செய்தான். இடம் தெரிந்தது. சித்ராவின் முன்னால் நின்றான் பாஸ்கர்.
*****
“அப்புறம் என்ன நடந்தது?” என்று ஆவலோடு கேட்டேன். கற்பனையை விட உண்மை சுவாரஸ்யமானது என்பார்களே, அது இது தானோ?

இரவு மணி எட்டை நெருங்கிக்கொண்டிருந்தது. இன்னும் அரை மணியில் பாலக்காடு வந்துவிடும். ரயில் ஊழியர் வந்தபோது இருவருக்கும் உணவு ஆர்டர் செய்தேன். எங்கள் இருக்கையைச் சுற்றி இன்னும் கூட யாரும் வரவில்லை. எனவே எங்கள் உரையாடல் தடையில்லாமல் தொடர்ந்தது.

சித்ரா இப்போது சற்று தெம்பாகத் தெரிந்தாள். தன் மனத்தில் இருந்த துயரங்களை நம்பிக்கையான ஒருவரோடு பகிர்ந்து கொண்டதால் ஏற்பட்ட தெம்பு அது.

“அவரைப் பார்த்த உடன் எனக்கு அளவில்லாத ஆத்திரம் தான் ஏற்பட்டது. கந்துவட்டியை சரியாகச் செலுத்திய போதெல்லாம் என்னிடம் அன்பானவர் போல் இருந்துவிட்டு, சித்தப்பாவும் அண்ணனும் துபாயில் என்ன ஆனார்களென்று தெரியாமல் திக்கற்றுப் போய், பாக்கி செலுத்த முடியாமலும் குடும்பம் நடத்த வழிதெரியாமலும்  நான் நின்றபோது தனது ஆட்களை அனுப்பி எங்கள் வீட்டைப் பிடுங்கிக் கொண்டவரை நான் எப்படி மன்னிக்க முடியும்? தன் மீது பழிவர வேண்டாமென்று தானே இப்படிச் செய்தார்? ஒரு முதலாளி மாதிரி நாலு பேரை வைத்துத் தொழில் செய்து கொண்டிருந்தவளை இன்று வேலைக்காரியாக ஆக்கி வைத்தவர் அல்லவா இவர்? என் வாய்க்கு வந்தபடி யெல்லாம் அவரைப் பேசிவிட்டேன். சித்தி கூட ஓடிவந்து என்னை அமைதிப்படுத்த முயன்றாள். நான் நிறுத்தவில்லையே!” என்று நிறுத்தினாள் சித்ரா.

“அப்புறம்?..”

“அப்புறம் தான் அந்த விசித்திரம் நிகழ்ந்தது. அதுவரை நான் சொன்னதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தவர், கண் கலங்கி நின்றார்.  ஓடி வந்து என்னை அழுந்தக் கை பற்றினார். வேகமாக இழுத்துக் கொண்டு உள்ளே வந்தார். பூஜையறை எங்கே என்றார். சுவரில் பார்வதி-பரமேசுவரனாக வினாயகர் முருகன் புடைசூழ ஒரு படம் மாட்டியிருந்ததைக் காட்டினேன். எனக்கு அது தான் பூஜையறை. மொத்த வீடே அந்த ஓர் அறை தானே! அந்தப் படத்திலிருந்து குங்குமத்தை விரலால் எடுத்து என் நெற்றியில் தடவினார். அதுவரை என் கையை விடவில்லை. ‘நீ நம்பினாலும் சரி, இல்லையென்றாலும் சரி, நடந்த விஷயங்களுக்கு நான் எவ்வகையிலும் பொறுப்பில்லை. ஆனால் என் ஆட்கள் இழைத்தது மன்னிக்கமுடியாத குற்றம் தான். இன்று முதல் நீ என் மனைவி. அது தான் நான் நடந்து விட்டவைகளுக்குச் செய்யக் கூடிய பிராயச்சித்தம்’ என்றார். நான் பதில் சொல்லும் வரை என் கையை விடவேயில்லை..”

கேட்கக் கேட்க எனக்கு நம்பவே முடியவில்லை. “நீங்கள் என்ன பதில் சொன்னீர்கள் சித்ரா ?” என்றேன்.

“இருங்கள். அவர் மேலும் சொன்னார்: ‘சித்ரா, இன்று என் தொழிலில் ஒரு பெரிய தொகையை வசூல் செய்திருக்கிறேன். இதை சொத்தில் எனக்குக் கொடுக்கும் பங்காக கணக்கில் வைத்துக்கொள்ளும்படி அண்ணனிடம் சொல்லிவிட்டு, நான் தனியாகத் தொழில் தொடங்கப் போகிறேன். இதே மங்களூரில் ஆஃபீஸ் ஆரம்பிக்கப் போகிறேன்.’ என்றார். அதற்கு நான் என்ன சொன்னேன் தெரியுமா?”

“சொல்லுங்கள் சித்ரா” என்றேன்.

 “மிஸ்டர் பாஸ்கர்! வெட்கத்தை விட்டுச் சொல்லுகிறேன். உங்களை என்று பார்த்தேனோ அன்றே என் மனதில் நீங்கள் நிறைந்துவிட்டீர்கள். ஆனால் இந்த சமுதாயத்திற்கென்று சில நெறிமுறைகள் இருக்கின்றன. அவற்றை எக்காரணம் கொண்டும் நான் மீற மாட்டேன். முதலாவது, உங்கள் அண்ணனுக்குத் தெரியாமல் இந்தத் தொகையை நீங்கள் எடுத்துக் கொள்வதை நான் அனுமதிக்க மாட்டேன். இது தொழிலுக்கு நீங்கள் செய்கிற துரோகமாகும். அப்புறம் யாருமே உங்களை நம்பமாட்டார்கள். எனவே உடனே இதை எடுத்துக்கொண்டு ஊருக்குச் செல்லுங்கள். இரண்டு, உங்கள் ஆட்கள் எடுத்துக்கொண்ட வீட்டை எப்பாடுபட்டாவது நான் உரிய பணத்தைக் கொடுத்து திரும்பப் பெற்றுக் கொள்ளுவேன். அதற்கு என்னுடைய சித்தப்பாவும் அண்ணனும் துபாயில் என்ன ஆனார்கள் என்று கண்டுபிடித்தாக வேண்டும். அது வரை நான் திருமணம் செய்துகொள்ள மாட்டேன். இது உறுதி. ஒரு குடும்பப் பெண்ணாகத்தான்  உங்களுக்கு நான் மனைவியாவேனே தவிர, பழைய கடன்காரியாக அல்ல. மூன்றாவது விஷயம், உங்கள் அண்ணனுடைய சம்மதமில்லாமல் இந்தத் திருமணத்திற்கு நான் ஒப்புக்கொள்ளமாட்டேன். தாய், தகப்பன் இல்லாத உங்களுக்கு அவர் தான் இனி தகப்பன் போன்றவர். அதனால் அவருடைய ஆசியில்லாமல் நான் உங்களோடு சேரமுடியாது.”

மனோகரா படத்தில் கண்ணாம்பா வசனம் பேசியமாதிரி உணர்ச்சிகரமாக இருந்தது சித்ராவின் பேச்சு. அம்மம்மா, இவள் சாதாரணமானவளல்ல! இப்படிப்பட்ட ஒருத்தியை மனைவியாக அடைய பாஸ்கர் உண்மையிலேயே கொடுத்துதான் வைத்திருக்க வேண்டும்!

“அப்புறம் எப்போது தான் உங்கள் கையை விட்டார், பாஸ்கர்?” என்றேன்.

“அவர் விட்டாலும் நான் விடவில்லையே” என்று நாணத்துடன் சிரித்தாள், சித்ரா. பாஸ்கர் மட்டும் இப்போது அவளைப் பார்த்தால் அசல் தேவிகா என்றே நம்பிவிடுவான்.

எனக்குப் பொறுமை யில்லை. “அந்த ஐநூறு ரூபாய் நோட்டு விஷயத்திற்கு எப்போது வருவீர்கள்?” என்றேன்.

அவள் கலகலவென்று சிரித்தாள். “எனக்குப் பூக்கடை வைக்க அவரிடமே கந்துவட்டிக்குக் கடன் வாங்கிக்கொண்டேன். அது தான் அவர் சொந்தமாகத் தொழில் தொடங்கிக் கொடுக்கும் முதல் கடன்! அதுவும் அவருடைய அண்ணனுக்குத் தெரிந்து தான்! காலையிலும் இரவிலும் மங்களாதேவி கோயிலில் பூ வியாபாரம் செய்கிறேன். பகலில் முதலாளி வீட்டில் வேர்க்கடலை தயாரிப்பது. சிவராத்திரி அன்று மட்டும் மஞ்சுனாதர் கோயிலுக்கு வந்துவிடுவேன். ஏன் என்றால் அந்த சிவபெருமானுக்கு முன்னால் தானே என்னைத் திருமணம் செய்துகொள்வதாக வாக்களித்தார் – அதனால்” என்றாள்.

ஒருவழியாக ரகசியங்கள் முடிவுக்கு வருவதாகப் பட்டது. ஆனாலும் அந்த ஐநூறு ரூபாய் நோட்டு ?

“ஆளை விட மாட்டீர்கள் போலிருக்கிறதே!” என்று மீண்டும் சிரித்தாள், சித்ரா. அதற்குள் கோழிக்கோடு வந்துவிட்டது. உணவு வந்தது. “நல்ல பசி சார். சாப்பிட்டுவிட்டு தான் இனி பேசுவேன்” என்று கை கழுவிக்கொண்டாள்.

“என்னை மனைவியாக ஏற்றுக் கொண்டதாக சிவபெருமான் முன்பு வாக்குறுதி கொடுத்தாரில்லையா, அதனால் மாதாமாதம் எனக்கு வீட்டு வாடகைக்காக ஐநூறு ரூபாய் கொடுக்கிறார். நான் எந்தக் கோவிலில் இருக்கிறேனோ அங்கு வந்து கொடுப்பார். அந்த நன்றிக்காக நான் அவருக்குப் பூ கொடுக்கிறேன். அதை எங்கள் இருவர் சார்பாகவும் அவர் கோவிலுக்குப் போய் சார்த்திவிடுகிறார்.  ஆகவே மீதி சில்லறையை நான் எப்படித் தர முடியும்?” என்று கலகலவென்று அவள் சிரித்தபோது அடுத்த பிரிவிலிருந்தும் சிலர் எட்டிப்பார்த்தார்கள்.  அவர்கள் வராமல் இருந்திருந்தால் தாங்கள் இருவரும் சேர்ந்து எப்போது சினிமாவுக்குப் போனார்கள் என்பதை அவள் சொல்லியிருக்கக் கூடும்.
****
ஈரோட்டில் இறங்கினாள் சித்ரா. ‘கல்யாணப் பத்திரிகை அனுப்புவேன். கட்டாயம் வாருங்கள்’ என்றாள். பாஸ்கர் வந்திருந்தான் அழைத்துப் போக.

மீண்டும் ஆனந்தஜோதி படத்திற்கு அவர்கள் போகக்கூடும். நீ தேவிகா மாதிரி இருக்கிறாய் என்று நூற்றி மூன்றாவது தடவையாக அவன் கூறுவான். ஆயிரத்து மூன்றாவது தடவையாக அவள் வெட்கப்படுவாள்.

சித்ராவின் மூன்று திட்டங்களும் நல்லபடி நிறைவேறி, அண்ணனின் சம்மதத்துடன் அவளுக்கு சம்பிரதாயமான திருமணம் நிகழ நாமெல்லாரும் சேர்ந்து வாழ்த்துவோமே!

(அதற்குள் மங்களூர் போகிறவர்கள் கதிரி மஞ்சுனாதர் கோயில் முன்பு அவள் கடை திறந்திருந்தால் தயவு செய்து அவளிடமே பூ வாங்குங்கள். ப்ளீஸ்!)
(முடிந்தது. அப்பாடா!)
© Y.Chellappa
குறிப்பு:எனது இன்னொரு வலைப்பூவான செல்லப்பா தமிழ் டயரி படித்தீர்களா?

3 கருத்துகள்:

  1. சித்ரா பாஸ்கர் திருமண வாழ்த்துக்கள் அய்யா. தாங்கள் விவரித்த விதமும் அருமை.

    பதிலளிநீக்கு
  2. தமிழ்ப் பண்பாடு தடுத்திருக்கா விட்டால் கதையில் வர்ணனை அதிகம் இருக்கும் போலே... ஹிஹி...

    பாஸ்கர் தேவிகா... மன்னிக்கவும்... பாஸ்கர்-சித்ராவின் எண்ணங்கள் படியே விரைவில் இணையட்டும்...

    எழுத்துநடை அபாரம் ஐயா... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  3. மிக்க நன்றி நண்பர்களே! எழுத வேண்டியவை இன்னும் நிறைய இருக்கின்றன. சில பாத்திரங்கள் தங்களை சீக்கிரமாக முடிக்கச் சொல்கிறார்கள். சித்ராவுக்கும் பாஸ்கருக்கும் எவ்வளவு எழுதினாலும் திருப்தி வரவில்லை, இன்னும் கொஞ்சம் எழுதுங்களேன் என்று கைபிடித்து இழுத்துக்கொண்டே போனார்கள்....(ஒரே மூச்சில் எழுதினேன்). நன்றாக இருப்பதாக யாராவது பாராட்டும்போது மகிழ்ச்சியாகத் தான் இருக்கிறது!

    பதிலளிநீக்கு