திங்கள், ஏப்ரல் 01, 2013

ஒரு நாள் நிறுத்த மாட்டாயா? (கவிதை)


காலம் காலம் காலமாய்
கனவுகள் எத்தனை சேர்த்துவிட்டேன்!
கண்ணில் சேர்த்த கனவுகளைக்
கவிதை யாக்குதல் எப்போது?
 
தானாய்ச் சேர்ந்த கனவுகளும்
தழுவிப் பிடித்த கனவுகளும்
வீணாய்ப் போக விடலாமோ?
விரைவில் எழுத வேண்டாமா?
 
பத்து விரலும் ஒத்துழைத்தால்
பக்கத் திருந்து தொல்லை வரும்
படுக்கப் போகும் வேளைதான்
பளிச்சென் றே சொல் தேடிவரும்
 
ஒருசொல் வருதென் றுட்கார்ந்தால்
மறுசொல் காற்றில் மறைந்துவிடும்
வருசொல் லெல்லாம் ஆழமிலா
வருத்தச் சொல்லாய் முடிந்துவிடும்!
 
நித்திரை போகும் நிம்மதியும்
நில்லா தாகும் கவிதையெனும்
நல்லா ளொருத்தி நம்மிடத்தில்
நாளும் வருதல் சாத்தியமா?
 
இதயம் நிறைந்த கனவுகளை
எழுத்தில் வடிக்கும் உளிதேடி
இத்தனை நாளும் பொறுத்துவிட்டேன்,
இறைவா எனக்கோர் வரம் வேண்டும்
 
ஒரு நாள் முழுதும் எனக்கென்றே
ஒதுக்கித் தாராய்! இல்லையெனில்
ஓடிச் செல்லும் காலத்தை
ஒரு நாள் நிறுத்த மாட்டாயா?
 
-கவிஞர் இராய. செல்லப்பா
(c) Y.Chellappa
குறிப்பு:எனது இன்னொரு வலைப்பூவான செல்லப்பா தமிழ் டயரி படித்தீர்களா?


1 கருத்து:

  1. எழுத நினைக்கும் எல்லோருக்கும் தோன்றும் உணர்வுகளை அழகிய கவிதையாக படைத்து விட்டீர்கள்.. நன்றி!

    பதிலளிநீக்கு