வெள்ளி, ஏப்ரல் 12, 2013

ஆலப்பாக்கம் அஞ்சலை -2

இவ்வரிசையில் இதற்கு முந்தைய பதிவு:
ஆலப்பாக்கம் அஞ்சலை-1

தலித்துகளுக்கு எதிரான இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்கள் குறைந்தது ஆயிரம் பேர் என்று அடுத்த நாள் செய்தித்தாள்களில் வந்தது. திட்டமிட்ட சதி என்பதை புகைப்படங்களுடன் வெளியிட்டிருந்தார்கள். தலித்துகளின் வீடுகள் அடையாளமின்றி தரைமட்டமாகிவிட, அருகிலிருந்த மற்றவர்களின் வீடுகள் துளியும் பாதிக்கப்படாமல் இருந்தது எப்படி என்று கேள்வி எழுப்பின. நாடெங்கிலும் இருந்து தலித் தலைவர்கள் ஆலப்பாக்கத்தில் முகாமிட ஆரம்பித்தனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு கேட்டும் தீயினால் பாதிக்கப்படாத வீடுகள் கட்டித்தரக் கோரியும் சாலை மறியல்கள் தொடர்ந்து நடைபெறலாயின.


தப்பி ஓடிய தலித்துகள் மீண்டும் வந்தால் மறுபடியும் தாக்கப்படலாம் என்ற அச்சம் நிலவியதால், தீயில் மாண்டு போனவர்களுக்கு இறுதிச்சடங்கு செய்யும் பொறுப்பை அரசாங்கமே எடுத்துக்கொள்ள வேண்டியதாயிற்று. நிரந்தரமாக ஒரு போலீஸ் படை அவ்வூரிலேயே நிறுத்தப்பட்டது.

நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய குடிசை அமைக்க ஒரு தொகை தரவும், அவர்கள் பெற்றிருந்த வங்கிக் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யவும் அரசுத் தரப்பில் ஒப்புக் கொண்டார்கள். எற்கெனவே அங்கு குடியிருந்த தலித்துகள் எவ்வித அச்சமுமின்றி மீண்டும் வந்து குடியேறலாமென்று உறுதி தரப்பட்டது.  

ஆலப்பாக்கம் வங்கியிலிருந்து கடன் பெற்றவர்களின் பட்டியல் கோரப்பட்டு, சில மாதங்களில் அந்தத் தொகை முழுமையாக அரசிடமிருந்து வங்கிக்குத் தரப்பட்டது. வேறு வழியில் இந்தத் தொகை வசூலாகியிருக்கவே முடியாது என்று பெருமூச்சு விட்டது வங்கி நிர்வாகம். அது மட்டுமின்றி, மீண்டும் அவர்கள் வந்தால் மறுபடியும் உரிய முறைப்படி கடன்கள் பெறுவதில் எந்தத் தடங்கலும் இருக்காது என்று வங்கி சார்பில் அறிக்கையும் வெளியிட்டது.
அப்படியும் நிலைமை சரியாகச் சில வருடங்கள் பிடித்தன.
****
இதெல்லாம் நான் சென்னையிலிருந்தபடி பத்திரிக்கைகள் வாயிலாகத் தெரிந்து வைத்திருந்த செய்திகள் தாம். அஞ்சலையின் வாயினால் ஒருமுறை கேட்டுக்கொள்ள வேண்டியதாயிற்று.

அன்று இரவில் உயிருக்காகத் தப்பி ஓடிய அஞ்சலை, இருட்டில் சரியான வழி தெரியாமல் அங்கும் இங்கும் அலைமோதி, கடைசியில் உப்பனாற்றங்கரை யோரம் மயங்கி விழுந்துவிட்டாள். (கடலோரம் சிறிய குட்டை மாதிரி இருந்தது உப்பனாறு). ஒரு படகோட்டி அவளைப் பரங்கிப்பேட்டை வரை கொண்டுபோய்ச் சேர்த்தான். அங்கு ஒரு ஆஸ்பத்திரியில் சில நாள் இருந்தபின் அவளுக்கு நினைவு திரும்பியது. “என் கணவர் எங்கே, என் குழந்தை எங்கே” என்று கேட்டுக்கொண்டே இருந்தாள். யாருக்கும் பதில் தெரியவில்லை. ஒரு வழியாக அவளை நெய்வேலிக்கு பஸ் ஏற்றி அனுப்பினார்கள். தகப்பன் வீடு வந்து சேர்ந்தாள். எல்லாருமாகச் சேர்ந்து கணவனையும் குழந்தையையும் தேடினார்கள். ஒரு தகவலும் கிடைக்கவில்லை.

நிச்சயமாக அவர்கள் தீயில் சாகவில்லை என்று அவளுக்குத் தெரியும். தப்பி எங்காவது ஓடிப் போய் பத்திரமாகத் தான் இருப்பார்கள் என்று நம்பினாள். ஆலப்பாக்கத்திற்கு மீண்டும் வர அஞ்சினாள். யாருமில்லாத அனாதையாக எப்படிக் காலம் கழிப்பது என்று புரியவில்லை. வந்தாலும் என்ன தொழில் செய்வது, நில உடைமையாளர்கள் மீண்டும் வேலை கொடுப்பார்களோ மாட்டார்களோ என்று கவலை. ஒவ்வொரு நிமிடமும் காணாமல் போன தன் குழந்தை மீதே சிந்தனை. யார் அவனுக்குப் பால் கொடுப்பார்கள்? கழுவி விடுவார்கள்? மாற்று உடை கூட இல்லையே?

போலீசுக்குப் போனாள். கண்டுபிடித்துத் தரும்படி புகார் கொடுத்தாள். வெறும் பேரை வைத்துக்கொண்டு எப்படி கண்டுபிடிப்பது? போட்டோ இருக்கிறதா என்றார்கள். அப்போது தான் அவளுக்கு நினைவுக்கு வந்தது, வங்கியில் அவள் கடன் பெற்ற போது போட்டோ எடுத்தது. அவளும் கணவனும் குழந்தையும் இருக்கும் போட்டோ. கல்யாணமானவுடன் ஸ்டூடியோவிற்குச் சென்று ஒரு போட்டோ எடுத்துக்கொண்டார்கள். அதற்குப் பின் இந்த போட்டோ தான் இரண்டாவது. போட்டோ எடுத்த செலவுக்காக வங்கியில் இருபது ரூபாய் கொடுத்தார்கள். அதை வைத்துத் தான் சிறியதாக ஃப்ரேம் போட்டு வீட்டில் மாட்டினாள். அதெல்லாம் தான் தீயில் பொசுங்கிவிட்டதே! மீதி இரண்டு போட்டோக்கள் இருப்பது வங்கியில் தான். அவர்களிடம் தான் கேட்கவேண்டும்.

காலனியில் இன்னும் சகஜ நிலைமை திரும்பியதா இல்லையா என்று தெரியாத நிலையில் வங்கியின் பக்கம் போக அவளுக்கு அச்சம். தகப்பனை அனுப்பினாள். வங்கியில் கிடைத்த பதில், கடன் தொகையை திருப்பிக் கட்டச் சொல்லுங்கள், பிறகு போட்டோ தருகிறோம் என்பது தான்.

கடனைத்தான் அரசாங்கம் திருப்பிச் செலுத்திவிட்டதே என்று கேட்கலாம்.  வங்கியைப் பொருத்தவரை, அரசாங்கம் அளித்த தொகை, நிபந்தனைக்கு உட்பட்டது - அதாவது, இன்னும் இரண்டு வருடங்களுக்குள் கடன் பெற்றவர் திருப்பிச் செலுத்தவில்லை யென்றால் மட்டுமே இந்தத் தொகையை கடனுக்கு வரவு வைக்கலாம், அதுவரை இது வேறு கணக்கில் தான் இருக்கும்.

இதற்கிடையில் அஞ்சலை சும்மா இருக்கப் பிடிக்காமல் ஒரு சிற்றுண்டிக் கடையில் –மிலிட்டரி ஓட்டல்- பாத்திரம் கழுவுதல் முதலிய துப்புரவுப் பணிகளைச் செய்யலானாள். வயிற்றுக்கு உணவும், ஒரு நாளைக்குப் பத்து ரூபாயும் என்று பேச்சு. முதலாளி நல்லவர். பணத்தை அவரிடமே விட்டுவைத்தாள். இரண்டாயிரம் சேர்ந்ததும் வங்கிக்குப் போய்க் கடனை அடைத்துவிட்டு, போட்டோவைத் திரும்ப வாங்கிக்கொண்டு போலீஸ் மூலம் குழந்தையையும் கணவனையும் தேடவேண்டும் என்று சொன்னாள். இவளுடைய நம்பிக்கையைப் பார்த்து அவருக்கு பிரமிப்பு தான் ஏற்பட்டது. அவர்கள் இருவரும் உயிரோடிருக்க வாய்ப்பில்லை என்றே கருதினார். இருந்திருந்தால் இவ்வளவு நாளாக வந்திருக்க மாட்டார்களா? ஒரு ஏழைப்பெண்ணின் கனவுகளை ஏன் குலைக்க வேண்டும் என்று ‘சரிம்மா, உனக்கு நல்லதே நடக்கும்’ என்றார்.

எப்படியும் ஒரு வருடத்திற்குள் இரண்டாயிரம் சேர்ந்துவிடும் என்றே எண்ணினாள். ஆனால், திடீரென்று தகப்பன் உடம்பு சரியில்லாமல் படுத்து விட்டான். மூட்டை தூக்குகிற வேலை. உடம்பு ஒரே மாதிரியாகவா இருக்கும்? ஓய்வு கேட்டது. ஒரு மாதம் போல் அவரால் எழுந்திருக்க முடியவில்லை. பெற்ற தகப்பன் ஆயிற்றே! எல்லா செலவும் அஞ்சலை பணத்தில் தான்.  

இதற்கிடையில் அஞ்சலை சிற்றுண்டிக் கடையின் சில நெளிவு சுளிவுகளைக் கற்றுக்கொண்டுவிட்டாள். தயாரித்த பண்டங்களை வீணாக்காமல் விற்பனை செய்தாலே வருமானம் பெருகும் என்று புரிந்தது. பாத்திரம் கழுவும் வேலையிலிருந்து புரொமோஷன் கிடைத்தது. சாம்பாரோ சட்னியோ அளவோடு பரிமாறினாள். வீண் என்ற பேச்சுக்கே இடமில்லை. குறைந்த செலவில் அதிக வருமானம் ஈட்ட முடியும் என்று முதலாளிக்குக் காட்டினாள். உள்ளுக்குள்ளிருந்த துயரத்தை மறைத்து எப்போதும் புன்சிரிப்போடிருந்தாள். தொழில் நகரமான நெய்வேலியின் முக்கிய இடத்தில் இருந்த அந்தக்கடைக்கு  இப்போது வாடிக்கையாளர்கள் அதிகம். அவளுக்கும் சம்பளம் உயர்ந்தது.

கையில் இரண்டாயிரமும், செலவுக்கு மேற்கொண்டு நூறு ரூபாயும் எடுத்துக் கொண்டு ஆலப்பாக்கம் வருவதற்காக அன்று கிளம்பினாளாம் அஞ்சலை. கடலூரில் பஸ் மாறுவதற்காக நின்று கொண்டிருந்தவள், எதிர்ப்புறமாக சென்னை செல்லும் வண்டியில் என்னைப் பார்த்துவிட்டாளாம். ஆகவே தான் ஓடி வந்தாளாம். இன்று வேலையை முடிக்காமல் சாப்பிடுவதில்லை என்று வைராக்கியத்தோடு இருந்தாளாம்.

“இந்தாருங்கள், பணம். எனக்கு எப்படியாவது அந்த இரண்டு போட்டோவையும் கொடுத்து விடுங்கள்” என்று கெஞ்சினாள்.

இப்படியும் ஒரு பெண் இருப்பாளா என்று எனக்கு ஆச்சரியம். நான் இப்போது அந்த வங்கியின் மேலாளராக இல்லை, வேறு ஊரில் இருக்கிறேன் என்பதால் அவளிடம் பணம் வாங்கும் அதிகாரம் எனக்கு இல்லை என்று சொன்னேன். அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை. “இல்லீங்க, எனக்கு நீங்க தான் உதவி செய்யணும். உங்க கால்ல வேணா விழறேங்க” என்றாள் கண்ணீருடன்.  

அதே சமயம், அவளை வங்கிக்குப் போய்ப் பணம் கட்டு என்று சொல்லவும் என் தார்மீகம் இடம் கொடுக்க வில்லை. வசதியுள்ள கடன்காரர்கள் ஆயிரக்கணக்கானவர்கள்  வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாதிருக்கும்போது, அரசாங்கம் அவளுடைய கடனுக்கு உரிய தொகையை வங்கிக்குக் கொடுத்துவிட்ட நிலையில், இந்த ஏழைப் பெண்மணியின் பணத்தைக் கோரிப்பெறுவது நியாயமாகப் படவில்லை எனக்கு. இருந்த உடைமைகளை எல்லாம் இழந்தும், நம்பிக்கை ஒன்றே பிடிப்பாய் உழைக்கும் அஞ்சலை எனக்கு பாரதியின் புதுமைப் பெண்ணாகவே தோன்றினாள். இவளுக்கு எப்படியும் உதவி செய்தாக வேண்டும், அதை விட முக்கியம், இந்த இரண்டாயிரத்தைக் காப்பற்றிக் கொடுத்தாக வேண்டும். ஏனென்றால் அதன் மதிப்பு இரண்டாயிரமல்ல, அவளின் வேர்வையின் மதிப்பு. காணாமல் போன கணவன் மற்றும் குழந்தையின் உயிர்களின் மதிப்பு. இவளை வங்கிக்கு அனுப்பினால் பணத்தை வாங்கிக்கொண்டு தான் போட்டோவைத் தருவார்கள். அது அவர்களின் கடமை. அதன் பின் இவளது கணக்கில் எற்கெனவே அரசு கொடுத்த இரண்டாயிரம் ரூபாய் அரசுக்குத் திருப்பி அனுப்பப்படும். அது தேவை தானா?

சரி, அடுத்த பஸ்சில் சென்னை போகும் யோசனையைக் கைவிட்டேன். “கொஞ்சம் பொறுமையாக இரு” என்று சொன்னேன். தொலைபேசியில் ஆலப்பாக்கம் கிளையைத் தொடர்பு கொண்டேன். விவரம் கேட்டேன். ஒரு ஏழைப் பெண்ணை இப்படி அலைக்கழிக்கலாமா, இரண்டு போட்டோவில் ஒன்றையாவது கொடுத்திருக்கலாமே என்றேன்.  
பதில் சொன்னவர் ஓர் இளைஞர். என்னை நன்றாகத் தெரிந்தவர். அவர் அங்கிருப்பார் என்பது எனக்குத் தெரியாது. “கொஞ்சம் பொறுங்கள். திரும்பக் கூப்பிடுகிறேன்” என்றார். அரைமணி கழித்து அழைத்தேன். அவர் மகிழ்ச்சியோடு “நான் இந்தக் கிளைக்கு வந்து ஒரு வாரம் தான் ஆகிறது. கடலூரில் ஒரு லாட்ஜில் தான் தற்காலிகமாகத் தங்கியிருக்கிறேன். உள்ளூர் விஷயங்களை இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாகத் தெரிந்துகொண்டு வருகிறேன். இந்த அஞ்சலை என்பவரின் பெயரில் கடன் ஏதும் இல்லை. அவரது கணவர் பெயரில் தான் இருக்கிறது. அதுவும் அரசு வழங்கிய உதவித் தொகைக்குச் சமமான கடன் தொகை தான் என்பதால் அவர் திருப்பிச் செலுத்தாவிட்டாலும் வங்கிக்கு நஷ்டமில்லை. போட்டோ வேண்டும் என்று விண்ணப்பம் வந்தால் உடனே கொடுத்து விடுகிறேன்” என்றார். உள்ளதை உள்ளபடி புரிந்துகொண்டு உதவக்கூடியவர்கள் இல்லாமலா போவார்கள்?  

“ஒன்று செய்யுங்கள். அந்தப் பெண் இப்போது கடலூர் பஸ் நிலயத்தில் தான் இருக்கிறாள். நீங்கள் எப்படியும் இங்கு தானே வரவேண்டும்? நான் ‘மோகன் கார்மென்ட்ஸ்” அருகில் இருக்கிறேன். வரும்போது போட்டோக்களைக் கொண்டுவந்து விடுங்கள். அவளிடம் விண்ணப்பக் கடிதம் வாங்கிக் கொள்ளலாம்” என்றேன். சரியென்றார். அஞ்சலையிடம் சொன்னேன். காணாமல் போனவர்கள் அப்போதே கிடைத்துவிட்டாற் போன்ற மகிழ்ச்சி அவள் முகத்தில்.
***
சில ஆண்டுகள் கழிந்தன. கடலூரைச் சின்னாபின்னமாக்கிய சுனாமி வந்து போன பின் ஒரு நாள். அதே கடலூர் பஸ் நிலையம். மாலை நேரம். பஸ் இன்னும் வரவில்லை. இரவு ஏழுமணிக்கு ‘பாயிண்ட் டு பாயிண்ட்’ பஸ்சுக்கு ஒரு டோக்கன் வாங்கிக்கொண்டு நின்றிருந்தேன்.

ஒரு பெண். பார்த்தாலே மனநோயாளி என்பது தெரிந்தது. கையில் ஒரு துணிப்பை. நின்றிருந்தவர்கள் ஒவ்வொருவராய் ஏதோ கேட்டுக் கொண்டிருந்தாள். எல்லாரும் அவளை, “சீ..போ..” என்று விரட்டிக் கொண்டிருந்தார்கள். அவள் உடனே நகருவதாயில்லை. என்னிடமும் வந்தாள். “என் புருஷன் இல்லாட்டி பரவாயில்ல, எம் பையனயாவது கண்டுபிடிச்சிக் குடுங்க..” என்றாள். பையிலிருந்து ஒரு ஃப்ரேம் போட்ட சிறிய போட்டோவைக் காட்டினாள். போட்டோவின் மீது ஒரு வங்கியின் ரப்பர்ஸ்டாம்ப் இருந்தது. கணவன், மனைவி, ஒரு ஆண் குழந்தை மூவர் அடங்கிய போட்டோ.  

“அஞ்சலையா நீ?” என்று அதிர்ச்சியுடன் கேட்டேன். அவள் அதற்குள் நகர்ந்து போய் அடுத்து நின்றிருந்த  ஒருவரிடம் போட்டோவைக் காட்டி “என் புருஷன் இல்லாட்டி பரவாயில்ல, எம் பையனயாவது கண்டுபிடிச்சிக் குடுங்க..” என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

‘சுனாமியில சொத்து சொகமெல்லாம் போயிட்டதாம். புருஷனும் கொழந்தையும் எறந்துட்டுதாம். அதான் இவ பைத்தியமா அலயறா” என்று விளக்கம் சொன்னாள், வேர்க்கடலை விற்கும் சிறுமி. (அவளே தான்!) இப்போது நன்கு வளர்ந்து விட்டிருந்தாள். பத்து ரூபாய் கொடுத்தேன். மூன்று பொட்டலம் தான் கொடுத்தாள். சுனாமிக்குப் பிறகு விலைவாசி ஏறிவிட்டதாம்.

அஞ்சலையின் உண்மைக் கதையை அவளுக்கு யார் சொல்லப் போகிறார்கள்?
© Y.Chellappa
Email: chellappay@yahoo.com  
குறிப்பு:எனது இன்னொரு வலைப்பூவான செல்லப்பா தமிழ் டயரி படித்தீர்களா?


4 கருத்துகள்: