ஞாயிறு, ஏப்ரல் 07, 2013

மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு சத்யாவின் கதை – 2



இவ்வரிசையில் இதற்கு முந்தைய பதிவு:

மூன்றாம் வகுப்பு 'அ' பிரிவு சத்யாவின் கதை-1

எங்கள் பள்ளி, ஓர் இடை நிலைப் பள்ளி. (‘மிடில் ஸ்கூல்’). எட்டாவது வரை வகுப்புகள் உண்டு. ஆனால் ஆறாவது வகுப்பில் மொத்தம் 15 மாணவர்களும் ஏழாவதில் 13 மாணவர்களும் தாம் இருந்தனர். எனவே எட்டாம் வகுப்பு அடுத்த ஆண்டு தான் தொடங்கப்படும் என்று அறிவித்திருந்தார்கள். அதைப் பற்றி எந்த பெற்றோரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. ஆறாவது வகுப்பிற்குத் தேர்ச்சி பெற்று விட்டாலே, ஆண்களாயின் ‘போர்டு ஹைஸ்கூல்’ எனப்படும் அரசினர் ஆண்கள் உயர்னிலைப் பள்ளியிலும், பெண்களாயின் ‘கான்வெண்ட்டு’ என்று அழைக்கப்படும் ‘லிட்டில் ஃபிளவர் ஹைஸ்கூ’லிலும் சேர்ந்து விடுவதே வாடிக்கையா யிருந்தது. அந்த இரண்டு உயர்நிலைப் பள்ளிகளிலும் இடம் கிடைக்காதவர்களும், பொதுவாகவே குறைந்த மதிப்பெண் எடுப்பவர்களும் மட்டுமே ஆறாம் வகுப்பிற்கு மேல் மிடில்ஸ்கூலில் படிப்பார்கள் என்று ஒரு கருத்து நிலவியது. ஆகவே ஒரு நல்ல நாளில் நான் டி.சி. பெற்றுக் கொண்டு அரசினர் உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்ந்துவிட்டேன். வீட்டிலிருந்து பள்ளி சற்று தொலைவில் இருந்ததால் சத்யா என்னவானாள் என்பதை உடனடியாகத் தெரிந்து கொள்ள முடியால் போயிற்று.




ஒரு ஞாயிற்றுக்கிழமையில் பால்காரர் வீட்டுக்குப் போக நேர்ந்தது. அப்படியே சத்யா வீட்டில் யார் இருக்கிறார்கள் என்று பார்த்தேன். பூட்டிக் கிடந்தது!
“அய்யரு, அவங்க அக்கா ஊருக்குப் போனாருங்க. அரக்கோணம் பக்கத்துல.  அந்த அம்மாவுக்கு ஒடம்பு முடியலயாம். இன்னிக்கோ நாளைக்கோன்னு இழுத்திக்கினு இருக்காங்களாம்.அதனால, சத்யாவ அந்த ஊருலேயே பள்ளிக்கூடம் சேர்த்துட்டாங்களாம். அய்யரும் வேலையை அரக்கோணத்துக்கே மாத்திக்கிட்டாராம். இனிமே அவங்க வரமாட்டாங்க தம்பி” என்றார்,பால்காரர். சிறியவர்களை அவர் தம்பி என்று தான் அழைப்பார்.
 
எனக்கு திடீரென்று ஏதோ ஒன்றை இழந்து விட்டாற்போல் உணர்வு. இன்னதென்று தெரியவில்லை.

வீட்டில் சொன்னேன். அப்படியா என்று அக்கம் பக்கம் எல்லாருக்கும் ஒரே ஆச்சரியம். “நல்லா படிக்கிற பொண்ண இப்படியா வேற ஸ்கூலுக்கு மாத்துவாங்க“ என்று அம்மா ஆதங்கப்பட்டாள். “அவ இருந்தவரை நீங்க ரெண்டு பேரும் போட்டி போட்டுக்கொண்டு படிப்பீங்க. சரி, ஒன்னொட புது ஸ்கூல்ல யார் நல்லா படிக்கிறானோ அவனோட இனிமேல் நீ போட்டி போடணும்” என்றார்.

அதற்குப் பிறகு சத்யாவைப் பற்றி யாரும் பேசவில்லை. எனக்கு மட்டும் ஒரு வருத்தம் இருந்துகொண்டே இருந்தது. அது, நான் எழுதிக் கொடுத்து சத்யாவின் பெயரால் ‘கண்ணன்’ இதழுக்கு அனுப்பிய விடுகதை ஏன் இன்னும் வெளிவரவில்லை என்று. அந்த வருத்தமும் விரைவில் நீங்கியது. ஜூலை மாதத்தில் கண்ணன் அதை வெளியிட்டது. ஓடிப்போய் ஒரு பிரதி வாங்கிவந்து பால்காரர் வீட்டில் கொடுத்தேன். சத்யாவின் அப்பாவோ அம்மாவோ வேறு யார் வந்தாலும் இதைக் கொடுத்துவிடுங்கள் என்று ஒரு கவரில் போட்டு சத்யா என்று முகவரி எழுதிக் கொடுத்தேன். அத்தோடு அவள் நினைவு என்னை விட்டு அகன்றுவிட்டது எனலாம்.
****
மூன்று வருடங்கள் உருண்டோடிவிட்டன. நான் 7, 8, 9 ஆம் வகுப்புகள் தேன்கனிக்கோட்டையில் படிக்கவேண்டி நேர்ந்தது. அந்த ஊரில் என் தாத்தாவும் பாட்டியும் மட்டும் இருந்தனர். அவர்களுக்கு உதவியாக இருக்கட்டுமென்று என்னை அங்கே அனுப்பியிருந்தார்கள். ஒன்பதாவது முடித்து விட்டு ரிசல்ட்டுக்காகக் காத்திருந்த போது என் பாட்டி இறந்து போனார். தாத்தா ராணிப்பேட்டைக்கே திரும்பிவிடுவதாக முடிவானது. எனவே நான் மீண்டும் ராணிப்பேட்டையில் அதே அரசினர் உயர்னிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு சேர்ந்தேன். இடையில் ஒருமுறை தேன்கனிக்கோட்டைக்குச் செல்லவேண்டி வந்தது. ராணிப்பேட்டையிலிருந்து வேலூர் போய் கிருஷ்ணகிரி – ஹொசூர் வழியாகப் பயணம் செய்ய வேண்டும். வேலூர் பஸ் நிலையத்தில் தற்செயலாக நான் பார்க்க நேரிட்டது – சத்யாவின் அம்மாவை.    

கையில் ஒரு பெரிய துணிப்பை. அதில் நிறைய சிறுசிறு காகிதப் பொட்டலங்கள். கிட்டத்தட்ட நூறு பொட்டலங்கள் இருக்கலாம். மிக்சர், காராபூந்தி போன்றவை.

அவரை நான் அதிகம் பார்த்ததில்லை. ஆனால் அவர் என்னை உடனே தெரிந்துகொண்டுவிட்டார். “செல்வம் தானேப்பா நீ?” என்றார். தலை யசைத்தேன். சத்யாவும் அப்பாவும் அவள் தம்பியும் நலமா என்றேன்.

மூன்று வருடங்களில் அவர் உடல் மெலிந்திருந்தது. முகம் வற்றிப் போன மாதிரியும் தோன்றியது. நான் கேட்டவுடன் இன்னும் வேதனை படிந்தது அவர் முகத்தில். “இப்படி நிழலில் வாப்பா” என்று ஓரமாக அழைத்துக் கொண்டு போனார். மூடிய தேனீர்க் கடை ஒன்றின் திண்ணை போன்ற மரப் பலகையில் இருவரும் உட்கார்ந்தோம். பையிலிருந்து ஒரு பொட்டலத்தை எடுத்து ”இந்தாப்பா, சாப்பிடு” என்றார். நல்ல மொறுமொறுவென்று இருந்தது காராபூந்தி.

“சத்யாவோட அத்தை அரக்கோணம் பக்கத்துல இருக்காங்க. அவங்களுக்கு ஒடம்பு சரியில்ல. பார்த்துக்க யாரும் இல்லேன்னு தான் நாங்க போனோம். அவங்களுக்கு ஊரில நெலபொலம் இருக்கு. சொந்த வீடு இருக்கு. பிள்ளை குட்டிகள் கிடையாது. அதனாலே நாங்க போன ஒடனே, சொத்து எல்லாத்தையும் சத்யாவோட அப்பா பேருக்கு மாத்திட்டாங்க. இனிமேல நீங்க எல்லாரும் இங்க தான் இருக்கணும்னு சொல்லிட்டாங்க. அது மட்டுமில்லாம, நாங்க போன மறு நாளே சீரியஸா படுத்துட்டாங்க. வேற வழியில்லாம இவரும் வேலைய அரக்கோணத்துக்கே மாத்திக்கிட்டார். சத்யாவையும் உள்ளூரிலேயே ஸ்கூல்ல சேர்த்துட்டோம். அவளுக்கு கொஞ்சம் கூட விருப்பமே இல்ல. என்ன பண்றது? அத்தையோட நோயோ தீர்ர மாதிரி தெரியலே. இந்த மூணு வருஷத்தில இருந்த சொத்தையெல்லாம் வித்து டாக்டருக்கும் ஆஸ்பத்திரிக்கும் தான் செலவழிச்சிருக்கோம். அது மட்டுமா ? ராணிப்பேட்டை வீட்டையும் இப்ப வித்தாச்சு. மருந்து செலவு இழுத்துகிட்டே போகுது. அதான் நானும் எதாவது கைத்தொழில் செய்யணும்னு இதோ மிக்சர், காராபூந்தி, முறுக்கு பண்ணி வேலூர்ல மொத்தமா ஒரு கடைல போட்டுக்கிட்டிருக்கேன். சத்யாவும் பாவம், ஸ்கூலுக்குப் போய்வந்த பின்னால எனக்கு ஒத்தாசையா இருக்கா” என்று வருத்தம் தோய்ந்த குரலில் சொன்னார்.

இப்படியும் மனிதர்களுக்குத் துன்பம் வருமா என்று தோன்றியது. “இப்போது டென் த் ஆயிற்றே, நிறைய படிக்கவேண்டுமே, அவளுக்கு இந்த வேலையெல்லாம் கொடுக்காம லிருந்தால் நன்றாக இருக்கும்” என்றேன்.

“ஆமாண்டா கண்ணு. நானும் அதத் தான் சொல்றேன். கேக்க மாட்டேங்கறா. நீ சொன்னதா சொல்றேன். சரி, நீ எப்படி படிக்கிறே?”

சொன்னேன். மூன்று வருடங்கள் வெளியூரில் படித்துவிட்டு மீண்டும் ஊருக்கே திரும்பியதைச் சொன்னேன். “திரும்பவும் ராணிப்பேட்டை வரும்போது சத்யாவும் வருவாளா?” என்றேன்.

“கட்டாயம் வருவோம். ஒங்க வீட்டுக்கு நிச்சயமா வர்றோம். நான் வரட்டுமாப்பா?” என்று அவர் கிளம்பினார். வேகமாக நடந்தார்.

எனக்கு திடீரென்று ஒரு யோசனை தோன்றியது. அருகிலிருந்த பேப்பர் கடைக்கு ஓடினேன். சத்யாவின் விடுகதை வெளியாகியிருந்த ‘கண்ணன்’ இதழ் எங்காவது கிடைக்கிறதா என்று இரண்டு மூன்று கடைகளில் பார்த்தேன். நல்ல வேளை ஒரு கடையில் கிடைத்தது. அதைக் கொண்டுபோய் அவரிடம் கொடுத்தேன். “இதை மறக்காமல் சத்யாவிடம் கொடுங்கள். அவளுக்கு இதில் ஓர் ஆச்சரியம் இருக்கிறது. என்னவென்று நான் சொல்லமாட்டேன். அவள் கண்டுபிடிக்கட்டும்” என்றேன்.

சத்யாவின் தாயார் ஒன்றும் புரியாமல் சரி என்று தலையாட்டினார்.
****
மேலும் நான்கு ஆண்டுகள் ஓடி விட்டன. சத்யாவைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை. குறைந்த பட்சம், கண்ணன் இதழ் வந்ததற்கு நன்றி தெரிவித்தாவது ஒரு கடிதம் எழுதியிருக்கக்கூடாதா என்று மனதில் ஒருபக்கம் எதிர்பார்ப்பு இருந்துகொண்டே இருந்தது.  

நான் பி.எஸ்.சி. முதலாண்டு படித்துக் கொண்டிருந்த பொழுது ரயிலில் காட்பாடி வரை பயணம் செய்யவேண்டி இருந்தது. என்னுடன் தினகரன் என்ற பழைய நண்பனும் இருந்தான். அவன் எட்டாம் வகுப்பி லிருக்கும்போது அவன் தந்தை காலமாகிவிட்டபடியால், பெங்களூரிலிருந்த அவனது மாமா அவனைத் தன்னோடு அழைத்துக்கொண்டார். பதினொன்றாம் வகுப்பு தேறிய உடனேயே தான் வேலை பார்த்த பின்னி மில்லில் அவனுக்கும் வேலை வாங்கிக் கொடுத்துவிட்டார். அது மட்டுமல்ல, தன் மகளையும் அவனுக்குத் திருமணம் செய்துவைத்துவிட்டார். வீட்டோடு மாப்பிள்ளை. (அப்போதெல்லாம் 18 வயது ஆனதா என்று கவனிப்பதில்லையோ!).

அலுவலக வேலையாக அவன் காட்பாடி போகிறானாம். ஐந்து வருடங்களுக்கு முன்பு பார்த்தவன் ஆயிற்றே! நிறைய விஷயங்கள் பேசினோம்.

“அவனவன் பி.எஸ்.சி., எம்.எஸ்.சி.,  படித்துவிட்டு வேலை கிடைக்காமல்  இருக்கிறான். உன் பாடு ஜாலி, லெவெந்த் முடித்த உடனே உனக்கு வந்த அதிர்ஷ்டம் பார்த்தாயா?” என்றேன்.

அவன் முகத்தில் அவ்வளவு வெட்கம் ! “என் மாமா பொண்ணுக்கு என்மேல ரொம்ப நாளாவே ஒரு கண். அது தாண்டா காரணம்” என்றான். கூடவே, “ஏண்டா, உனக்கு யாரும் லவ்வர் கிடையாதா?” என்றான்.

அது நாள் வரை நான் லவ் கிவ் என்று எப்போதும் சிந்தித்தது கிடையாது. அது மட்டுமின்றி என்னை லவ் பண்ணுவதாக எந்தப் பெண்ணும் சொன்னதும் கிடையாது. “அப்படியா, பி.எஸ்.சி படிக்கிறாய், அதுவும் ஃஃபஸ்ட் ரேங்க்கு எடுப்பவன். உன்னை யாரும் லவ் பண்ணலேன்னா ஆச்சரியமா இருக்கே” என்றான்.

“உன் கூட திருப்பாவை திருவெம்பாவை போட்டிக்கு வந்தாளே, சிவப்பாக ஒரு பெண், அவள் கூட வா உன்னை லவ் பண்ணலே?” என்றான்.

அப்போது தான் எனக்கு நினைவு வந்தது. ஒரு மார்கழி மாதத்தில் தினமும் பள்ளி மாணவர்களுக்கு திருப்பாவை திருவெம்பாவை சொல்லித்தந்தார்கள். முடிவில் மனப்பாடமாக ஒப்பிக்கும் போட்டி. அதைத் தான் சொல்கிறான். என்னோடு போட்டிக்கு வந்தவள் வேறு யாருமில்லை, சத்யாவே தான். வழக்கம் போலவே எங்கள் இருவரையும் சமமான திறமை உடையவர்களாக முடிவு செய்து இரண்டு பேருக்குமே முதல் பரிசு கொடுத்தார்கள். விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு புத்தகம் தான் பரிசு. அந்தப் போட்டி நடந்த அன்று தினகரன் எங்கள் வீட்டுக்கு வந்திருந்தான். அதனால் அவனுக்குத் தெரிந்திருக்கிறது.

‘அட, இப்படியொரு நினைவு நமக்குத் தோன்றவில்லையே’ என்று எண்ணிக்கொண்டேன். சத்யா இப்போது எவ்வளவு உயரமாகவும் அழகாகவும் வளர்ந்திருப்பாள் என்று மனதிற்குள் பளீரென்று ஒரு மின்னல். இன்னும் ‘வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்’ பாடுவாளோ? குரல் நிச்சயம் இன்னும் அழகாகத்தான் மாறி இருக்கும்!

எனக்கே வியப்பாக இருந்தது. சத்யாவைப் பற்றி நான் இதுவரை ஏன் இப்படியெல்லாம் நினைக்காமல் போனேன்? அது சரி, அவள் என்னைப் பற்றி எப்போதாவது நினைத்திருப்பாளா? நினைத்திருந்தால் ஏன் ஒரு கடிதம் கூடப் போடவில்லை?

“என்னடா, அந்தப் பொண்ணப் பத்திக் கனவு காண்கிறாயா?’ என்று சிரித்தான் தினகரன்.  

“அதில்லையப்பா. நீ நினைக்கிற மாதிரி பொண்ணு இல்லை அவள்” என்று நடந்த கதையைச் சொன்னேன். அமைதியாகக் கேட்டுக் கொண்டவன், “நீ வேண்டுமானால் பாரேன், அந்த சத்யா நிச்சயம் உன் மேல காதல் கொண்டுதான் இருப்பாள். அவளுக்கு விடுகதை எழுதிக் கொடுத்ததையும், அது கண்ணன் இதழ்ல வந்ததையும் அந்த காப்பிய நீ அவங்க அம்மா கிட்ட கொடுத்தனுப்பினதையும் பார்த்தா நிச்சயமா எந்தப் பொண்ணுமே ஒம்மேல ஆசையாத்தான் இருப்பா. நீ கொஞ்சம் முயற்சி பண்ணினாப் போதும், உன் காதல் வெற்றி தான்” என்றான்.

ரயில் நின்றது. இருவரும் அவரவர் வழியில் பிரிந்தோம். அவன் சந்தோஷமாக நடந்தான், நான் சஞ்சலத்தோடு நடந்தேன். அடுத்த டெர்ம் ஃபீஸ் கட்டுவதற்கு என்ன செய்வது யாரிடம் கேட்பது என்ற கவலை தான் எனக்குப் பெரிதாகப் பட்டதே தவிர, யாரை எப்படிக் காதலிக்க முயற்சிப்பது என்பதல்லவே!
****
ஒரு மாதம் ஆகியிருக்கும். நான் கல்லூரியிலிருந்து வருவதற்கு நேரமாகிவிட்டது. முத்தமிழ் மன்ற விழா. கவியரங்கத்தில் நானும் ஒரு கவிஞன். விழா முடிந்து சாப்பாடும் முடிய எட்டு மணி. நான் வீடு வந்து சேரும்போது ஒன்பது மணி.

அம்மா கதவைத் திறந்தார். “அரக்கோணத்திலிருந்து தர்மனாதன் சாரோட பொண்ணு வந்திருந்தாள்” என்றார். “யாரது, சத்யாவா?” என்றேன், வியப்புடன். ஒரு வேளை தினகரன் சொன்னது பலிக்கப் போகிறதோ?

“அவங்க வீட்ட வித்துட்டாங்களாம். அதற்கு ஏதோ கையெழுத்து போடணுமாம். அதற்காக வந்தாளாம்”.

“வேறு ஏதும் விசேஷம் இல்லையா? “ என்று எதிர்பார்ப்புடன் கேட்டேன்.

“ஆம், ஒரு கவர் உங்கிட்ட கொடுக்கச் சொன்னா” என்று ஒரு பழுப்பு நிறக் கவரைக் கொடுத்தார், அம்மா.

தினகரா, உன் வாய்க்குச் சர்க்கரை தான் போட வேண்டும் என்று எண்ணிக்கொண்டேன். கவரைப் பிரித்து உள்ளிருந்த காகித மடிப்பை எடுத்தேன். அம்மா தூங்கிய பின் படிக்கலாம் என்று சட்டைப்பையில் வைத்துக் கொண்டேன்.

“இங்கயே படிக்கலாம், அவள் என்ன காதல் கடிதமா எழுதியிருக்கப் போகிறாள்?” என்றார் அம்மா.

“ஏம்மா அப்படிச் சொல்றே?” என்று புரியாமல் கேட்டேன்.

“பின்ன என்னடா, பதினொண்ணாம் கிளாஸ் படிக்கும்போதே அவளுக்குக் கல்யாணம் ஆயிடிச்சாம். அப்பா போய்ட்டாராம், அதனால துக்கத்துக்கு வந்த பெரியவங்க பாத்து முடிவு பண்ணதாம்.  கையில ரெண்டு கொழந்தெயோட தான் இங்க வந்தா” என்றார் அம்மா.

எனக்கு எங்கோ இடி விழுந்த மாதிரி இருந்தது. அப்படியானால் என்ன தான் எழுதியிருக்கப் போகிறாள் இந்தக் கடிதத்தில்?

“செல்வம், வணக்கம். உன்னை நேரில் பார்க்க முடியாமல் போனது வருத்தமாகத்தான் இருக்கிறது. எனக்கு ‘கண்ணன்’ இதழிலிருந்து இரண்டு ரூபாய் மணியார்டர் வந்திருந்தது. நீ எனக்காக எழுதிக்கொடுத்தாயே விடுகதை, அதற்காகத் தான். வாழ்க்கையில் நாம் என்னென்னமோ நினைக்கிறோம், அது வேறு என்னவிதமாகவோ முடிகிறது. யாரிடமும் கடன் வைத்துக் கொள்ளக்கூடாது என்று அப்பா சொல்லுவார். அதற்காகவே வீட்டையும் விற்று இருந்த கடனையெல்லாம் கொடுத்தபிறகே அவர் உயிர் போயிற்று.

“நீயும் நானும் சிறுவர்களாக நவராத்திரி கொலு வைக்கும் வீடுகளுக்கெல்லம் போய்வருவோமே இன்றும் நினைவில் இருக்கிறது. உன்னை ஒரு முறையாவது பார்க்கவேண்டும் என்று எப்போதாவது தோன்றும். ஆனால் நம் சமுதாயத்தில் பெண்களுக்கு அவ்வளவு தூரம் சுதந்திரம் இருக்கிறதா, சொல்! என் திருமணத்திற்கும் உன்னை அழைக்க முடியாதபடி ஒரு துக்கமான சூழ்நிலை. மன்னித்துவிடு. என் குழந்தைகளையாவது உனக்குக் காட்ட வேண்டுமென்று தான் வந்தேன். அதுவும் நேரவில்லை.

கண்ணனிடமிருந்து வந்த இரண்டு ரூபாயும் இதில் வைத்திருக்கிறேன். இது உனக்குச் சேர வேண்டிய பணம். இதை உனக்குத் தராமல் பாக்கி வைத்தால் அப்பாவின் ஆத்மா என்னை மன்னிக்காது. அதனால் தான். தவறாக நினைக்காதே.

நீ ஆண்பிள்ளை. உனக்குச் சுதந்திரம் உண்டு. என்றாவது அரக்கோணம் வந்தால் என் வீட்டிற்கு வா. அவரிடமும் உன்னைப் பற்றிச் சொல்லியிருக்கிறேன். ரொம்ப நல்லவர். வரட்டுமா? – அன்புடன்: சத்யா.”

துக்கம் தாளமுடியாமல் விம்முகிறேன். அடக்க முடியாமல் “அம்மா” என்று உரத்த குரலில் அழுதே விடுகிறேன். “என்னடா எழுதியிருக்கிறாள்? ஏன் அழுகிறாய்?” என்று அம்மா அதிர்ச்சியோடு என்னிடமிருந்த கடிதத்தை வாங்கிப் படிக்கிறார்.

“ஏதொ புருஷன் நல்லவன் என்கிறாள். சந்தோஷமாக இருக்கட்டும். நீ அங்கெல்லாம் போகவேண்டாம். குழந்தைகள் இரண்டும் மணிமணியாக இருக்கிறது. பிழைத்துக்கொள்ளும்” என்றார் அம்மா.
எங்கிருந்தாலும் வாழ்க என்ற பாடல் என் நெஞ்சில் எதிரொலித்தது.
*****
© Y.Chellappa
Email: chellappay@yahoo.com
குறிப்பு:எனது இன்னொரு வலைப்பூவான செல்லப்பா தமிழ் டயரி படித்தீர்களா?


5 கருத்துகள்:

  1. இது நிஜமாக இருக்க வேண்டும் என்றும் இருக்கிறது, கற்பனையாக இருக்க வேண்டும் என்றும் தோன்றுகிறது. நெகிழ வைக்கும் பதிவு ஐயா. எழுத்து ரொம்பவுமே முன்னேறியிருக்கிறது. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. நன்றி. உண்மைகள் கற்பனையைத் தேடிப்போவதும், கற்பனைகள் உண்மையோடு கலந்து ரசாயன மாற்றம் அடைவதும் தானே இலக்கியத்தின் தோற்றுவாய், கவிஞரே?

    பதிலளிநீக்கு
  3. அருமையான கதை!( நிஜம்?) மனம் நெகிழ வைத்து விட்டது. இன்னும் ஒரு 15 பக்கங்களுக்கு கதையை நீட்டி ஒரு திரைக்கதை அமைத்து விடலாம். சூப்பர்! சத்யாவிற்கு திருமணமாகிவிட்டது மனம் கனத்து போனது! மனசுக்குள் புதைந்து போன அழகான காதல் கதை! நீங்கள் விருப்பபட்டால் இதை பத்திரிக்கைக்கு அனுப்ப முயற்சிக்கலாம். அல்லது சரி என்றால் நான் பத்திரிக்கைக்கு அனுப்பி பகிர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. கொஞ்சம் பொறுங்கள். நான் இந்தியா திரும்பியவுடன் இவை புத்தகமாக வெளிவரும். 1-1-2014 அன்று !

    பதிலளிநீக்கு
  5. எங்கிருந்தாலும் வாழ்க..!

    மனதில் பதிந்த அழகான கதை.!

    பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு