திங்கள், ஏப்ரல் 29, 2013

மங்களூர் மனோரமா -1

மங்களூரில் கதிரி என்ற பகுதியில் சில வருடங்கள் குடியிருந்தோம். ஒரு குன்றாக இருந்து குடியிருப்பான பகுதி. அங்கிருக்கும் மஞ்சுநாதர் (சிவன்) கோவில் பிரசித்தி பெற்றது.
கதிரி மஞ்சுநாதர் கோவில், மங்களூர் 
இரவில் ஏழுமணிக்கு முன்பாக வீடு வந்து சேரும் பாக்கியம் மாதத்தில் சிலநாட்கள் கிடைப்பதுண்டு. அப்போது கோவிலுக்குச் செல்லும் பாக்கியமும் கிடைக்கும். கேரளப் பாணியில் கோபுரமின்றி ஓடுவேய்ந்த உயரம் குறைந்த  ஆனால் பரப்பளவில் பெரிய கோவில். எவ்வளவு கூட்டம் வந்தாலும் அடங்கக்கூடிய பெரிய பிராகாரம். புராணகாலத்துப் பரசுராமர் ஏற்படுத்திய கோவில்.

நுழைந்தவுடன் வடக்கில் துர்க்கை சன்னதி. தெற்கில் ஐயப்பன். கிழக்கில் விநாயகர். ‘மஞ்சுநாதர்’ என்ற திருநாமத்தோடு சிவபெருமானின் கழுத்தளவேயான விக்கிரகம். கொடிமரத்தின் எதிரே படியேறிப்போனால் குன்றின்மீது வற்றாத ஊற்று உண்டு. அதிலிருந்து வரும் நீர் தான் அபிஷேகத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது. குன்றின்மீது அழகிய மலர்வனம். தென்னை, பாக்கு மரங்கள்.

மங்களூரில் நிறைய கோவில்கள் உண்டு. ஊருக்கே பெயர் அமையக் காரணமான ‘மங்களாதேவி’ ஆலயம், இனிய பசுமையான தென்னைவனத்தின் நடுவே அமைந்திருக்கும். வருடம் முழுதும் உற்சவங்கள். வெள்ளிக்கிழமையன்று விசேஷம். தீபாலங்காரத்தில் மின்னுவாள், மங்களாம்பிகை.

ஷரவு-கணபதி என்று இன்னொரு பிரபலமான கோவில். ஹம்பனகட்டாவில் முக்கியமான இடத்தில் இருக்கிறது. ஷரவு என்றால் சிவன். சிவனும் கணபதியும் மட்டுமே இருப்பதால் அந்தப் பெயர். அம்மனுக்கு இங்கு சன்னிதி கிடையாது.

குதிரோளி கோகர்ண நாதர் கோவில் என்று இன்னொரு பெரிய சிவன் கோவிலும் உண்டு. ராஜீவ் காந்தி திறந்துவைத்த கோவில். பெரிய குளம், கரை ஓரம்  உயரமான சிவன் பொம்மை, சிறுவர் பூங்கா, ஆஞ்சனேயருக்கும் சனீஸ்வரனுக்கும் தனிச் சன்னதிகள், இரண்டு கல்யாண மண்டபங்கள் என்று பல அம்சங்கள் இருக்கும். அமெரிக்கக் கோவில்கள் மாதிரி பளிச்சென்று இருக்கும்.

ஆனாலும் கதிரி மஞ்சுநாதர்  கோவிலுக்குத் தான் நான் அடிக்கடி போவதுண்டு. வீட்டின் அருகில் இருப்பதும் மிக விசாலாமாக இருப்பதும் தான் முக்கிய காரணங்கள்.
****
எங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து வெளிவந்து இடது புறம் திரும்பினால் இரண்டு மருத்துவமனைகள். சற்று இறங்கித் திரும்பினால் புதிதாக ஒரு எட்டுமாடிக் குடியிருப்பு இருக்கும். அடுத்துக் கீழிறங்கினால் ஒரு சூப்பர் மார்க்கெட். அப்புறம் சில வீடுகள். பிறகு காலியிடம். அது தான் கோவிலுக்கு வரும் வண்டிகள் நிறுத்தும் இடமாகப் பயன்பட்டது. அப்புறம் கோவில் தான். வலதுபுறம் சில தேனீர்க்கடைகளும் இளனீர்க் கடைகளும் கோவிலை ஒட்டி சில பூக்கடைகளும் இருக்கும்.

‘மாத சிவராத்திரி’ என்று ஒவ்வொரு மாதமும் மஞ்சுநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெறும். அதனால் கூட்டம் அதிகம் வந்ததாகத் தெரியவில்லை. ஆனால் அன்று அதிகமான ‘திடீர்’ பூக்கடைகள் தோன்றியிருக்கும். வழக்கமான பூக்கடைகளில் நம்மூர் மாதிரி ‘வாங்கம்மா, வாங்க சார்’ என்று போட்டி போட்டுக்கொண்டு யாரும் கூப்பிட மாட்டார்கள். கடையருகில் போய் விலை கேட்டாலும் அலட்சியமாகத்தான் பதில் வரும். (கடைக்காரர்கள் வசதியானவர்கள்). இந்தத் திடீர் பூக்கடைகளில் மட்டும் அந்த இங்கிதம் இருக்கும். வாங்க வாங்க என்று வரிந்து கூப்பிடுவார்கள். ஆகவே அம்மாதிரிக் கடைகளில் மட்டும் தான் நான் பூ வாங்குவது வழக்கம்.

பெரும்பாலும் ஆண்கள் தான் பூ விற்பார்கள் இவ்வூரில். ஒரே ஒரு பூக்கடையில் மட்டும் ஒரு பெண்மணி. அதுவும் தமிழ்ப் பெண்மணி இருப்பாள். என்னுடைய இருபது ரூபாயில் அவள் மாடி வீடு கட்டிவிட முடியாது என்றாலும், தமிழருக்குத் தமிழர் உதவுவது தான் தமிழ்ப் பண்பாடு என்பதால்  அவளிடம் தான் நான் பூ வாங்குவேன்.      

அவளுக்கு சுமார் இருபத்தைந்து வயது இருக்கலாம். மழைக்காலத்தில் மலர்ந்த பூ மாதிரி இருப்பாள். (சில நடைமுறை காரணங்களால் அதிகம் வர்ணிக்க முடியவில்லை, மன்னிக்கவும்).  நாலு காலில் ஒரு கால் இல்லாமல் சில செங்கற்களைக் கொண்டு ஈடு செய்யப்பட்ட பழைய மேஜை. அதன் மீது ஒரு கித்தான் பை. மூன்று தட்டையான மூங்கில் கூடைகளில் பூ. ஒன்றில் அனேகமாக அரளிப்பூ. இன்னொன்றில் வாசனையில்லாத ‘காக்கடா’ என்னும் வெள்ளை மல்லிகை. மூன்றாவதில் எப்போதாவது கிடைக்கும் விலை உயர்ந்த உடுப்பி (இருவாட்சி) மல்லிகை. மருக்கொழுந்தும் துளசியும் கூட சில சமயம் இருக்கும். இதுதான் அவள் கடை.

பூவுக்கென்று என்னுடைய பட்ஜெட் இருபது ரூபாய் தான். அவள் கொடுக்கும் பூவை வாங்கிக் கொள்வேன். சில சமயம் இரண்டு முழம் தருவாள். சில சமயம் ஒரே முழம். (பூவுக்குப் பேரம் பேசக் கூடாது என்று கிருபானந்த வாரியாரோ, யாரோ சொன்ன ஞாபகம்). அர்ச்சனைக்கும் உண்டியலில் போடுவதற்கும் சேர்த்து இன்னொரு இருபது ரூபாய். கர்ப்பூர ஆரத்தி பார்த்துவிட்டு, எல்லா சன்னதிகளையும் தரிசித்துவிட்டு, பிராகாரத்தை மூன்று முறை சுற்றி வந்தால் சுமார் முக்கால் மணி நேரம் ஆகியிருக்கும். மனதுக்கு நிம்மதி, நாற்பதே ரூபாயில்.

அப்படித்தான் ஒரு மாத சிவராத்திரி நாளன்று கோவிலுக்கு வந்தேன். அவளிடம் பூ வாங்கிக் கொண்டேன். இரவு எட்டு மணி இருக்கும். மழை லேசாகத் தூறிக் கொண்டிருந்தது. நூறு ரூபாய் நோட்டுக்கு அவளிடம் சில்லறை இல்லை. ‘வரும்போது வாங்கிகொள்கிறேன்’ என்று விரைவாகக் கோவிலுக்குக் கிளம்பினேன். எனக்குப் பின்னால் ஓர் இளைஞன். அவனும் பூ கேட்டான். எவ்வளவு முழம் வேண்டும் என்று சொல்லவில்லை. இவளும் கேட்கவில்லை. கொடுத்தாள். (ஐம்பது ரூபாய்க்குக் கொடுத்திருப்பாள் என்று தோன்றியது). ஐநூறு ரூபாய் நோட்டை நீட்டினான். நூறு ரூபாய்க்கே இல்லாத சில்லறை ஐநூறு நோட்டிற்கு எப்படி வரும்? அவனும் என் மாதிரியே கோவிலுக்கு விரைந்தான். வரும்போது பாக்கியை வாங்கிக்கொண்டால் போயிற்று. பூக்காரிகள் ஒருபோதும் ஏமாற்றுவதில்லை.

கோவிலுக்குள் நுழைந்தோமோ இல்லையோ மழை தீவிரமாகியது. சுமார் ஒருமணி நேரம் அடித்து ஓய்ந்தது. அதன் பிறகு தான் வெளியே வந்தேன். மழையின் காரணமாக பூக்காரி எதிரிலிருந்த தேனீர்க் கடையில் தஞ்சம் அடைந்திருந்தாள். என்னைப் பார்த்ததும் ‘சார்’ என்று ஓடிவந்து மீதி எண்பது ரூபாயைக் கொடுத்தாள். என் பின்னால் தான் அந்த இளைஞனும் வந்துகொண்டிருந்தான். அவளைப் பார்த்துக்கொண்டே நடந்தான். இவளும் பார்த்தாள். ஆனால் கூப்பிடவில்லை. பாக்கியும் தரவில்லை. அவனாவது வந்து கேட்கமாட்டானா? இல்லை. ஒருவேளை மறந்துவிட்டானோ? ஐநூறு ரூபாயை யாராவது மறப்பார்களா? அவன் ஒரு ஆட்டோவில் ஏறிக் கிளம்பி விட்டான்.

தெருவிளக்கின் ஒளியில் அவள் முகம் தெளிவாகத் தெரிந்தது. அவனுக்குச்  சில்லறை தராமல் போனோமே என்ற குற்ற உணர்வு இருக்கிறதா என்று பார்த்தேன். இல்லை. தனக்கு இன்று நானூற்றைம்பது ரூபாய் லாபம் என்ற திடீர் சந்தோஷம் தெரிகிறதா என்று பார்த்தேன். இல்லை. அதற்குள் மழை நின்றது. மணி ஒன்பதுக்கு மேல் ஆகிவிட்டது. கடையைக் கட்டிக்கொண்டு கிளம்பினாள்.       

அவள் ஏன் அவ்வளவு பெரிய தொகையைக் கொடுக்காமல் ஏமாற்றினாள்? பூக்காரிகளும் ஏமாற்றக் கூடியவர்கள் தானோ? அவனும் தான் எப்படி அதைக் கேட்காமல் போனான்? விஷயம் மனத்தை அரித்தது. விடை காணாவிட்டால் தலையே வெடித்து விடும்போல் இருந்தது. ‘அவள் குனிந்து வீடு பெருக்கினாள்; மனம் குப்பையாச்சு’ என்று யாரோ எழுதிய புதுக்கவிதை ஞாபகம் வந்தது. அடுத்த ‘மாத சிவராத்திரி’ வரும்போது அவளை நேரிலேயே கேட்டுவிடவேண்டும் என்று முடிவு செய்து கொண்டு உறங்கப்போனேன்.
****
அன்று மாத சிவராத்திரி மட்டுமல்ல, வெள்ளிக்கிழமையும் சேர்ந்துகொண்டது. மஞ்சுநாதர் கோவிலுக்கு நல்ல கூட்டம். பூக்காரிக்கு நல்ல வியாபாரம். ஆனாலும் என்னப் பார்த்தவுடன் முகம் மலர்ந்து ‘வாங்க சார்’ என்றாள். என்னிடம் இருபது ரூபாய் நோட்டு இருந்தது. ஆனாலும் அவளிடம் பேசுகிற சாக்கில் போன மாத நானூற்று ஐம்பது ரூபாய் விஷயத்தைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதால், நூறு ரூபாய் நோட்டையே கொடுத்தேன். ‘கூட்டமா இருக்கே! வரும் போது சில்லறை வாங்கிக்கொள்கிறேன்’ என்று பூவை மட்டும் பெற்றுக் கொண்டேன்.

அப்போது மீண்டும் எதிர்பாராதவிதமாக அதே இளைஞனும் பூ வாங்க வந்தான். இவள் அவனை வரவேற்கவுமில்லை. பார்த்துத் துணுக்குறவுமில்லை. அனிச்சையாக இரண்டோ மூன்றோ முழம் போட்டுக்கொடுத்தாள். அவனும் ஏதும் பேசவில்லை. இப்போதும் ஒரு ஐநூறு ரூபாய் நோட்டைக் கொடுத்தான். சில்லறை வாங்காமலேயே கோவிலுக்குள் நுழைந்தான்.

எனக்குப் பகீரென்றது. இன்றைக்கு எப்படியும் இந்த விஷயத்தைத் துப்பறிந்தாக வேண்டுமென்று முடிவு செய்தேன். நிச்சயம் இன்றைக்கு அவன் சில்லறை வாங்காமல் போகப் போவதில்லை. அப்படி வாங்கும்போது போன மாதம் தான் வாங்காமல் விட்டுப் போன சில்லறை நினைவுக்கு வராமலா போகும்? இவள் என்னதான் செய்யப்போகிறாள் பார்த்துவிட வேண்டும்.   

ஒரு கிராமத்தில் ஒரு சாமியார். எப்போதும் கடவுளைப் பற்றியே தியானத்தில் இருக்கிறார். எதிர்வீட்டில் ஒரு தேவதாசி. தினமும் அவளைத் தேடிக்கொண்டு பல   ஆண்கள் வந்து போகிறார்கள். ஒரு பூகம்பத்தில் கிராமம் அழிகிறது. சாமியாரும் தேவதாசியும் மரணமடைகிறார்கள். தேவதாசி சொர்க்கத்திற்கும் சாமியார் நரகத்திற்கும் போகிறார்கள்.

இது எந்த வகையில் நியாயம் என்று சாமியார் எமனிடம்  கொதிக்கிறார். ‘இருபத்து நாலு மணி நேரமும் தியானம் செய்தவனுக்கு நரகம், எப்போதும் இன்பம் மட்டுமே துய்த்த இவளுக்கு சொர்க்கமா?’ என்று புலம்புகிறார்.
எமன் சிரிக்கிறான். ‘நீ தியானம் செய்ய அமர்ந்ததென்னவோ உண்மை தான். ஆனால் என்ன தியானம் செய்தாய்? எதிர்வீட்டில் இருக்கும் தேவதாசிப்பெண் எப்போது திருந்தப்போகிறாள்,  தீய வழியில் போய்க்கொண்டே இருக்கிறாளே – என்று தானே தியானம் செய்தாய்? கடவுளை விடவும் அந்தப் பெண்ணைத் தானே அதிக நேரம் நினைத்துக் கொண்டிருந்தாய்? ஆகவே தான் அவளுக்குடையதான  நரகம் உனக்கு வந்தது. அவளோ, எந்த ஆண்மகனோடு படுக்க நேர்ந்தாலும், எதிர்வீட்டு சாமியார் மாதிரி எப்போதும் இறைவனின் நினைவாகவே வாழும் சந்தர்ப்பத்தை எனக்குக் கொடுக்கமாட்டயா, இந்தத் தீய வாழ்க்கையிலிருந்து ஒரே ஒரு நாள் விடுதலை கொடுக்க மாட்டாயா – என்று ஒவ்வொரு நாளும் வேண்டிக்கொண்டே இருந்தாள். அதாவது உண்மையான தியானத்தில் இருந்தாள். அதனால் தான் உன்னுடைய சொர்க்கம் அவளுக்குப் போய்விட்டது’ என்றானாம் எமன்.

கோவிலில் என் நிலைமையும் அதே தான். மனம் இறைவனோடு ஒன்றவேயில்லை. கைகள் கூப்பிய நிலையில் கர்ப்பூரத்தை ஒற்றிக் கொண்டனவே தவிர,  அந்த இளைஞனின்  ஐநூறு ரூபாய் நோட்டு தான் கண்ணில் தெரிந்துகொண்டே இருந்தது. அவசரம் அவசரமாகப் பிராகாரத்தைச் சுற்றிவிட்டுப் பூக்காரியிடம் வந்தேன். மீதி சில்லறை கொடுத்தாள். அந்த இளைஞன் இன்னும் வரவில்லை. ஆகவே சற்றுத் தள்ளி நின்றுகொண்டேன்.

அரை மணி ஆனபின்னும் அவனைக் காணவில்லை. ஒருவேளை எனக்கு முன்பாகவே வந்து போயிருப்பானோ? எதற்கும் இன்னும் கொஞ்சநேரம் பார்க்கலாம் என்று முடிவு செய்தேன்.

அவன் வந்தான். ஆனால் கோவில் வாசலில் அவன் வருவதைப் பார்த்தவுடனேயே ஒரு ஆட்டோக்காரர் ஓடிப்போய் அவனருகில் வண்டியை நிறுத்தினார். அவசரமாக அதில் ஏறிக்கொண்டு அவன் போயே விட்டான்!

எனக்குத் தலையில் அடித்துக்கொள்ள வேண்டும் போல் இருந்தது. இப்போது என்ன செய்வது? பூக்காரியிடமே போய்க் கேட்பதா? ‘சரி தான், உங்க வேலையைப் பார்த்துக்கொண்டு போங்க’ என்று சொல்லிவிட்டால்? அப்புறம் இந்த ரகசியத்திற்கு விடை கிடைக்காமலே போய்விடுமே! தொலையட்டும், இன்னொரு மாதம் பொறுத்துத் தான் பார்ப்போமே என்று அலுத்துக்கொண்டு ஒருவழியாக வீடு போய்ச் சேர்ந்தேன்.
****
அடுத்த மாதம் அதே நாள் வந்தது. சனிப் பிரதோஷம் வேறு சேர்ந்து கொண்டது. ஆகவே கூட்டமாகத்தான் இருக்கும் என்று தோன்றியது. எப்படியிருந்தாலும் சரி, இன்று அவளிடம் கேட்டே ஆகவேண்டும். போனமாதம் மாதிரி அவன் தப்பிவிடக்கூடும். ஆகவே எச்சரிக்கையாக  அவனுடனேயே போய் அவனுடனேயே திரும்பிவரவேண்டும் என்று முடிவு செய்து கொண்டேன். ஆனால் அவன் இன்று வருவான் என்பதற்கு என்ன உத்தரவாதம் என்று எனக்குள்ளேயே ஒரு கேள்வியும் எழாமலில்லை.

அலுவலகத்திலிருந்து வந்து குளித்து உடை மாற்றிக்கொண்டு கோவிலுக்குக் கிளம்பினேன். சூப்பர்மார்கெட் அருகில் ஒரு பழைய நண்பர் பிடித்துக்கொண்டார். பத்து நிமிடத்தில் அவரிடமிருந்து கழன்றேன். வாகனத்தை நிறுத்தி டோக்கன் பெற்றுக்கொண்ட போது இரவு மணி ஏழரை. வானம் தெளிவாக இருந்தது.

பூக்கடையை நெருங்கினேன். ‘வாங்க’ என்ற பழக்கமான குரலை எதிர்பார்த்தேன். அது இல்லை. ஒரு பெண் குனிந்து தரையில் எதையோ தேடிக் கொண்டிருப்பதுபோல் தெரிந்தது. ‘பூ குடுங்க’ என்று நூறு ரூபாய் நோட்டை நீட்டினேன். ‘ஏனு ஹூ பேக்கு?’ (‘என்ன பூ வேண்டும்’) என்று கன்னடத்தில் கேட்டாள் ஒரு முதியவள். அதிர்ச்சியாக இருந்தது எனக்கு. ஒருவேளை  இது வேறு கடையோ என்று கவனமாகப் பார்த்தேன். இல்லை, அதே மேஜை, அதே  கூடைகள் தான். ‘அவள் எங்கே போனாள்?’ என்று நானும் கன்னடத்தில் கேட்டேன். ‘மனோரமாவைக் கேட்கிறீர்களா? அவள் ஈரோடு போய்விட்டாள். இனி வர மாட்டாள்’ என்று பதில் வந்தது.
அப்போது தான் அவள் பெயர் மனோரமா என்று தெரிந்தது.
(நாளை இதழில் முடியும்).
இவ்வரிசையில் அடுத்த பதிவினைப் படிக்க:
மங்களூர் மனோரமா –(2,3)


© Y.Chellappa
குறிப்பு:எனது இன்னொரு வலைப்பூவான செல்லப்பா தமிழ் டயரி படித்தீர்களா?


5 கருத்துகள்:

  1. சுவாரஸ்யமாக செல்கின்றது....

    கதிரி என்றவுடன் எனக்கு சாக்சோபோன் கோபால்நாத் ஞாபகம் வந்தது.

    மஞ்சுநாதர் என்றவுடன் தருமஸ்தலா சென்று தரிசனம் செய்தது ஞாபகம் வந்தது.

    பழைய பசுமை நினைவுகளை திரும்ப அழைத்துக் கொடுத்தமைக்கு நன்றி....

    பதிலளிநீக்கு
  2. மங்களூர் மனோரமா என்பவர் இவர்தானோ....?

    பதிலளிநீக்கு
  3. சொன்ன மாதிரியே தொடர்கதை எழுத ஆரம்பிச்சுட்டீங்க. கூகுள் ப்ளஸ்-லே ரிமைண்டர் வர்றதாலே வசதியாப்போச்சு. இல்லேன்னா ஞாபகம் வச்சுக்கறது கஷ்டம். எனி வே... அருமை.

    பதிலளிநீக்கு
  4. சொர்க்கம் நரகமும் அருமை... துப்பறியும் வேலையும் சுவாரஸ்யம்... ஆவலுடன் தொடர்கிறேன்...

    பதிலளிநீக்கு
  5. தேவதாசி சாமியார் கதை அருமை. கதை விறுவிறுப்பாகச் செல்கிறது. மகிழ்வுடன் தொடர்கிறேன் அய்யா.

    பதிலளிநீக்கு