சனி, மார்ச் 02, 2013

எவ்வளவு நேரம் தான் காத்திருப்பது?

1978ல் ஒரு நாள்.

ஹைதராபாத்தில் நான் புதிதாக வேலையில் சேர்ந்திருந்த நேரம்.

நான் தங்கியிருந்த வீட்டிலிருந்து வங்கிக்கிளை  மிக அருகில் இருந்ததால் பத்து மணி அலுவலகத்துக்குப் பெரும்பாலும் ஒன்பதரை மணிக்கே வந்து விடுவேன்.சுல்தான் பஜார்  என்ற பகுதி.

மகாவீர் ஸ்டோர்ஸ் என்ற ஒரு ரெடிமேட்  துணிகள் விற்கும் கடையின் முதல் மாடியில் வங்கி இருந்தது.

சுமார் எழுநூறு சதுர அடி தான் இருக்கும். ஒரு மேலாளர், ஆறு ஊழியர்கள் அமர்வதற்குப் போதுமானதாக இருந்தது.

எவ்வளவு விரைவாக நான் வங்கியைத் திறந்தாலும் அடுத்த நிமிடமே வரும் முதல் வாடிக்கையாளர் திரு தியோதார். 'ப்ளிட்ஸ்' என்ற ஆங்கில வார இதழின் ஏஜண்ட். வங்கியின் அடுத்த வீடு தான் அவருடையது.

தான் வருவது மட்டுமல்ல, ஒரு பிளாஸ்க்கில் சூடான மூன்று காப்பிகளையும் கொண்டு வருவார்.

முதலில் ஆளுக்கொரு காபியும், போகும்போது பிளாஸ்க்கில் மீதமிருப்பதில் இருவருக்கும் சமமாகவும் பங்கிட்டு விட்டு, பிளாஸ்க்கை சுத்தம் செய்து கொண்டு போவார். வேறு யாராவது வாடிக்கையாளர் வரும் வரையில் எனக்கு கம்பெனி கொடுப்பார். வயது அதிகமில்லை, எழுபத்தைந்து  இருக்கும்!

அன்றைக்குப் பார்த்து தியோதார் வரவில்லை. ஆனால் அவரைப் போலவே வயதான ஒரு வாடிக்கையாளர் நுழைந்தார். பார்ப்பதற்கு
உள்ளூர்க் காரர் மாதிரி தெரியவில்லை. ஏதோ கிராமத்திலிருந்து வருபவர் போல் தோன்றினார். மாடி ஏறி வந்தவர் என்னைப் பார்த்தும் கூட  ஏதும் பேசாமல் மேலாளரின் அறைக்குள் நுழைந்து
மேஜை மீது தன் கைப்பையை வைத்து விட்டு அமைதியாக இருந்தார்.

நான் வேலைக்குச் சேர்ந்து சில நாட்களே ஆகி இருந்ததாலும், ஹைதராபாதின் உருது கலந்த தெலுங்கு இன்னும் எனக்குப் புரிபடாததாலும், எந்த வாடிக்கையாளரிடமும்  நானாகப்  போய் உரையாடலைத் துவங்கும் வழக்கம் ஏற்பட்டிருக்கவில்லை. அதிலும் கிராமத்தவர் போலத் தோன்றிய இவரிடம் எப்படிப் பேச்சைத் தொடங்குவது என்று தெரியவில்லை. தலைக்கு மேலாக மின்விசிறியைச் சுழலவிட்டு விட்டு எனது நாற்காலிக்கு வந்து அன்றைய தபால்களைப் பார்க்க ஆரம்பித்தேன்.

பத்து நிமிடம் வரை பொறுமையாக இருந்தவர், வேகமாக எழுந்து வந்தார். கோபமாக என்னைப் பார்த்தார். 'எப்போதும் இப்படித்தான் லேட்  பண்ணுவீங்களா' என்று   தன்னுடைய வட்டார வழக்கில் கூச்சலிட ஆரம்பித்தார்.

நல்ல வேளையாக அப்போது பானுபிரசாத் வந்து சேர்ந்தார். எனது உடன் பணியாளர். குண்ட்டூர்க்காரர்.   

அதே வட்டார வழக்கில் "ஏமண்டி, ஏமு காவாலி ?" என்று கேட்டார்.

"பின்னே என்னங்க, போன தடவை வந்த போதும் இப்படித்தான் லேட் பண்ணினாங்க, இப்பவும் அதே மாதிரின்னா என்னங்க அர்த்தம்?"

பானுபிரசாத் சுவர்க் கடிகாரத்தைப் பார்த்தார். மணி இப்போது தான் பத்தை எட்டிக்கொண்டிருந்தது. "ஒண்ணும்  லேட் இல்லிங்களே, இப்பத்தானே பத்து மணி ஆகுது?"

அந்த ஆசாமி மேலும் கோபத்தோடு புலம்பினார்: "ஒரு இட்லி வடை சாப்பிட பத்து மணி ஆக வேண்டும் என்றால் என்ன ஓட்டலையா இது? கேட்பாரில்லையா? கூப்பிடு உங்க ஓனரை".

'ஓட்டலா?' என்று குழம்பினார் பானுபிரசாத். இந்தக் கட்டிடத்தில் எட்டு வருடங்களாக இதே வங்கி அல்லவா இயங்குகிறது?

"பத்து வருஷம் முன்னால் இங்கு ஓட்டல் இருந்ததே, என் தங்கச்சி வீட்டுக்கு வந்த பொது எல்லாரும் இங்க தானே சாப்பிட்டோம்" என்றார் அவர்.

அப்பாடா  என்று பெருமூச்சு விட்டோம் நானும் பானுபிரசாதும். இது ஓட்டல் அல்ல, பேங்கு தான் என்று அவருக்குப் புரிய வைக்க மேலும் ஐந்து நிமிடங்கள் தேவைப்பட்டன.

அதற்குள் தியோதார் வந்துவிட்டார், கையில் ப்ளாஸ்க் சகிதம்.
விஷயத்தைக் கேட்டு  என்று சிரித்தார். 'ஆமாம், அப்போதெல்லாம் தினமும் இப்படித்தான். ஓட்டல் இருந்த இடத்தில் பேங்க் ஆரம்பித்தது நிறைய பேருக்குத் தெரியாமலே இருந்தது' என்றார் அவர்.

தியோதாரின் புண்ணியத்தில்,  இட்லி வடை கேட்டவருக்கு ஒரு சூடான காப்பி கொடுத்து அனுப்பி வைத்தோம்.

(தியோதார் மேலும் சில ஆண்டுகள் உயிரோடிருந்தார். பானு பிரசாத் தன சொந்த ஊரான குண்டூருக்கு மாற்றல் கேட்டுப் பெற்று
சில மாதங்களில் ஒரு சாலை விபத்தில் அகால மரணம் அடைந்தார்).
******
(C) Y.Chellappa.
email: chellappay@yahoo.com

குறிப்பு:எனது இன்னொரு வலைப்பூவான செல்லப்பா தமிழ் டயரி படித்தீர்களா?


2 கருத்துகள்:

  1. இப்போது வசிக்கிற வீட்டுக்கு குடிவந்து, தொலைபேசி இணைப்பு வாங்கி 14 ஆண்டுகள் ஆகிவிட்டது. இப்போதும் அவ்வப்போது அழைப்புகள் வருகின்றன - இண்டியன் பேங்க்....?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொறுத்திருங்கள். காலம் மாறும். நீங்கள் பிறந்த ஆஸ்பத்திரியிலிருந்தும் இனி ஃபோன் வரும்! எல்லாம் கணினியின் சாதனை! இப்போது தான் பழைய ரெக்கார்டுகளை Archives செய்துவருகிறார்களாம்!

      நீக்கு